Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 22

இனி எல்லாம் சுகமே - 22
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 22

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 22

செரிமானம் அறிவோம்!

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 22
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 22
இனி எல்லாம் சுகமே - 22

மீப காலமாக அதிக அளவில் `ஃபேட்டி லிவர்’ என்ற வார்த்தையைச் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்படுத்தவேண்டிய நோய்களில் ஒன்றாக இது மாறி வருகிறது. `40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது’ என நம்பப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்குக்கூட ஃபேட்டி லிவர் வருவது குறிப்பிடத்தக்கது. பெருநகரங்களைக் கடந்து, இன்றைக்குக் கிராமங்களில்கூட ஃபேட்டி லிவர் பிரச்னை பூதாகரமாகிவருகிறது.

சரி, ஃபேட்டி லிவர் என்றால் என்ன? அது, கல்லீரலுக்கு எப்படித் தொல்லை தருகிறது? அதன் பாதிப்புகள் என்னென்ன?

`கல்லீரல் அசகாய சூரன். 70 சதவிகிதம் செயலிழந்தாலும்கூட எந்தப் பிரச்னையும் தராமல், சிலரைப் பல ஆண்டுகள் நிம்மதியாக வாழவைக்கும்’ என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அப்படிப்பட்ட வலுவான கல்லீரலையும் கடுமையாகத் தாக்கக்கூடிய விஷயங்கள் இரண்டு. ஒன்று, ஆல்கஹால்; இன்னொன்று, கொழுப்பு.

ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு மறைமுகமாகச் சர்க்கரைச் சத்து பொதிக்கப்பட்ட உணவுகள் முக்கியக் காரணம். கார்ன் சிரப்புகள், ஜெல்லி, கேக், துரித உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றில் நீக்கமற நிறைந்திருக்கிறது `ஃப்ரக்டோஸ்’ (Fructose) எனும் சர்க்கரை. ஒரு சாதாரண குளிர்பானத்தில் 12 டீஸ்பூன் அளவுக்குச் சர்க்கரை இருக்கிறது. இந்த மறை சர்க்கரை வெவ்வேறு வகைககளில் நம் உணவுக்குள் புகுந்துவிடுகின்றன. இது மட்டுமின்றி, நொறுக்குத்தீனிகள் வழியாக கெட்ட கொழுப்புகளும் மறைமுகமாக உடலில் சேருகின்றன. இவை எல்லாமே கல்லீரலுக்குத் தீங்கு தருபவைதான்.

இனி எல்லாம் சுகமே - 22

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்துவைப்பது கல்லீரல்தான். பஞ்ச காலங்களில் உடலுக்குச் சக்தியை வழங்க இயற்கை தந்த ஏற்பாடு இது. நம் முன்னோர்கள் காடுகளிலும் வயல்வெளிகளிலும் கடுமையாக உழைப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் நாமோ, உடல் உழைப்பும் இன்றி, உடற்பயிற்சியும் இன்றி, மூன்று வேளையும் வயிறுமுட்டச் சாப்பிடுகிறோம். இது போதாதென்று, இடையிடையே நொறுக்குத்தீனி வேறு. அதிலும் செயற்கை இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், சிப்ஸ்கள்... என நமது இன்றைய உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது. இவையெல்லாமே உடல்பருமனுக்கு முக்கியக் காரணங்கள். ஆல்கஹாலை வாழ்நாளில் ஒருமுறைகூடத் தொடாத ஒருவருக்குக்கூட உடல்பருமனால் ஃபேட்டி லிவர் வரலாம்.

நம் வழக்கமான உணவு முறையோடு சேர்த்து, அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவை எடுப்பது தவறு. அதேபோல, அதிகப்படியான மாவுச்சத்து கொழுப்பாக மாறிவிடும். வழக்கமாக, தினமும் காலையில் நான்கு இட்லி சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். திடீரென, ஆறு இட்லி சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். ஆனால், உடல் உழைப்பு அதிகரிக்கவில்லை. இப்போது, இட்லி சாப்பிடுவதால் கிடைத்த மாவுச்சத்து, கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு, கல்லீரலில் தொடர்ந்து சேமிக்கப்பட்டு வரும். எனவே, அதிகப்படியான மாவுச்சத்து, அதிகப்படியான கொழுப்பு, ஆல்கஹால் இம்மூன்றையும் தவிர்க்கவேண்டியது அவசியம். `வளர்சிதை மாற்றம்’ என்ற வார்த்தையை மருத்துவக் கட்டுரைகளில் அநேக இடங்களில் நீங்கள் படித்திருக்கலாம். எவ்வளவு கலோரியை தருகிறோம், அதை உடல் எந்த அளவுக்குக் கிரகித்து, தேவையற்றவற்றை வெளியே தள்ளுகின்றன என்பதன் விகிதமே வளர்சிதை மாற்றம்.

மோசமான உணவுப்பழக்கத்துக்கு அடுத்த படியாக, தற்போது மிக முக்கியக் காரணியாக வளர்ந்து வருகிறது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறீர்கள்; ஃபிட்டாக இருக்கிறீர்கள்; மதுப் பழக்கமும் இல்லை. எனினும், கடுமையான மனஅழுத்தம் இருக்கிறது என்றால், அழையா விருந்தாளியாக ஃபேட்டி லிவர் பிரச்னை வந்துவிடும். மனஅழுத்தம் இருக்கும் சமயங்களில் ஹார்மோன்கள் சமச்சீரின்றி சுரந்து, கொழுப்பைச் சேர்த்து வைப்பதால், ஃபேட்டி லிவர் வருகிறது.

பொதுவாக, கொழுப்பு இரண்டு இடங்களில் படியும். தொடை, இடுப்பு, பின் இடுப்பு போன்ற பகுதிகளில் கொழுப்பு படிவது ஒரு வகை. இந்த முறையில் ஃபேட்டி லிவர் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், வயிற்றைச் சுற்றிக் கொழுப்பு படிந்து, அந்தப் பகுதி மட்டும் பெரிதானால், எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். இதை, விலா எலும்புக்கும் இடுப்பு எலும்புக்கும் நடுப்பகுதியில் இன்ச் டேப் வைத்து இடுப்புச் சுற்றளவை அளப்பதன் மூலம் கண்டறியலாம். ஆண்களுக்கு 90 செ.மீ அளவும், பெண்களுக்கு 80 செ.மீ அளவும்தான் இடுப்புச் சுற்றளவு இருக்க வேண்டும். இடுப்புச் சுற்றளவுடன் ஆடையின் அளவை குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஃபேட்டி லிவர், திடீரென ஏற்படும் பிரச்னை கிடையாது. குறைந்தபட்சம் பத்து முதல் 20 ஆண்டுகளாக கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்னர்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. கொழுப்பு கரைக்கப்படாமல், கல்லீரலுக்குள் வருடக்கணக்கில் தேங்கும்போது, அவை கல்லீரலின் செல்களை பாதிக்கின்றன. இதை, `ஸ்டியடோஹெபடைட்டிஸ்’ (Steatohepatitis) எனச் சொல்வார்கள். கொழுப்பினால் வரும் கல்லீரல் அழற்சி இது. பல வருடங்கள் தேங்கியிருக்கும் பழைய கொழுப்புகள் ஒரு கட்டத்தில் உருமாறி வடுக்களாக மாறுகின்றன. இது `ஃபைப்ரோசிஸ்’ என்ற நிலை, இதுவே இன்னும் கொஞ்சம் முற்றிப்போனால் `சிர்ரோசிஸ்’ (Cirrhosis) எனச் சொல்லப்படும் கல்லீரல் சுருக்க நோயாக மாறி, உயிருக்கே உலைவைக்கும் அளவுக்குச் செல்கிறது. தர்பூசணிப் பழம்போல இருக்கும் கல்லீரல், வற்றிப்போய் முள் முள்ளாக அன்னாசிப்பழம் அளவுக்கு மாறிவிடுவதைத்தான் ‘கல்லீரல் சுருக்கம்’ என்கிறோம். கல்லீரல் சுருக்கம் முற்றிப்போனால் கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை வரலாம், ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் கல்லீரல் சுருக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கல்லீரலைக் காக்கும் வசதி வந்துவிட்டது. பயாப்சி செய்யாமல் கல்லீரலில் தேங்கியிருக்கும் கொழுப்பு குறித்து அறிவதற்கு ஃபைப்ரோஸ்கேன் இருக்கிறது.

ஃபேட்டி லிவர் பிரச்னை இருக்கிறது என்றாலே, உடனடியாகக் கல்லீரல் கெட்டுவிட்டதோ என அதிர்ச்சியடைய வேண்டாம். ஆரம்பகட்ட நிலையில் இருப்பவர்கள் எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி, வாழ்வியல் முறை மாற்றங்கள், தகுந்த மாத்திரை மருந்துகள், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்த காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் கோளாறுகளைத் தவிர்க்கலாம். ஃபேட்டி லிவர் வராமல் தடுத்தால், செரிமானப் பாதையில் எந்தச் சிக்கலும் இன்றி, சுகமான செரிமானம் நடக்கும்.

- தொடரும்

ஃபேட்டி லிவர் பிரச்னையால் என்னென்ன நடக்கும்?

செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும்.

டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகமாக இருக்கும்.

அடிவயிற்றைச் சுற்றிக் கொழுப்பு படியும்; உடல்பருமன் ஏற்படும்.

பி.சி.ஓ.டி கோளாறுகள் வரும்.

தைராய்டு பிரச்னை மற்றும் சர்க்கரைநோய் வரலாம்.

`ஸ்லீப் ஆப்னியா’ எனச் சொல்லப்படும் குறட்டைப் பிரச்னை ஏற்படும்.

ஃபேட்டி லிவர் தடுக்க 8 மந்திரங்கள்...

இனி எல்லாம் சுகமே - 22

மனஅழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

நொறுக்குத்தீனிகள், ஃபாஸ்ட்ஃபுட் முதலான ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்தது ஏழு மணி நேர இரவுத் தூக்கம் அவசியம்.

கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இடுப்புச் சுற்றளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாமல் உறங்கச் செல்ல வேண்டாம்.

பி.எம்.ஐ இயல்புநிலையில் இருக்க வேண்டும். உடல்பருமன் வேண்டாம்.

கொழுப்பாக ஏன் சேகரிக்கப்படுகிறது?

`உடல் ஏன் கொழுப்பை மட்டும் சேர்த்து வைக்கிறது? புரதச்சத்தையோ கார்போஹைட்ரேட்டையோ சேர்த்துவைக்க வேண்டியதுதானே?’ என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. 20 வருடங்களுக்கு முன்னால், ஒரு கேசட்டில் 25 பாடல்கள் கேட்டீர்கள். ஆனால், இப்போது 2,500 பாடல்களை ஒரு மெமரி கார்டில் அடக்கிவிடுகிறீர்கள். பாடலை சேமித்துவைக்க சிறந்த வழி எது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மெமரிகார்டு என்றுதானே. இந்த மெமரி கார்டு போன்றதுதான் கொழுப்பு. ஒரு கிராம் மாவுச்சத்து, புரதச்சத்தில் நான்கு கலோரிகள்தான் இருக்கிறது. ஆனால், ஒரு கிராம் கொழுப்புச் சத்தில் ஒன்பது கலோரிகள் இருக்கின்றன. அதனால்தான், ஆற்றலை கொழுப்பாக மாற்றிச் சேமித்துவைக்கிறது கல்லீரல்.