Published:Updated:

மலச்சிக்கலைத் தீர்க்கும்... இதயத்துக்கு இதம் தரும் சிவப்புத் திராட்சை!

உடல் எடையைக் குறைக்கவோ, கட்டுக்குள் வைத்திருக்கவோ முயற்சி செய்பவர்களுக்குச் சிவப்புத் திராட்சை சிறந்த உணவாகும்

மலச்சிக்கலைத் தீர்க்கும்... இதயத்துக்கு இதம் தரும் சிவப்புத் திராட்சை!
மலச்சிக்கலைத் தீர்க்கும்... இதயத்துக்கு இதம் தரும் சிவப்புத் திராட்சை!

குண்டு குண்டாக தக்காளிப் பழம் மாதிரி குவிந்திருக்கும் சிவப்புத் திராட்சையைப் பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊரும். சுவை மட்டுமல்ல... இந்தத் திராட்சையில் மருத்துவக் குணமும் மிகுந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சூப்பர் மார்க்கெட், பெரிய பழக்கடைகளில் கிடைக்கும் சிவப்புத் திராட்சையின் பூர்வீகம் வட அமெரிக்கா. ஐரோப்பியர்கள் மூலம் இது இந்தியாவுக்கு வந்தது. 

சிவப்புத் திராட்சையின் மருத்துவப் பயன்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா நடராஜனிடம் கேட்டோம். 

``சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்கள், மது, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றின் மூலம் நமது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals) எனும் மூலக்கூறுகள் உருவாகும். இது `டீ.என்.ஏ'- க்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற  நோய்களை இது உருவாக்கும். இதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள், ருடின் (Rutin), க்யூர்சேட்டின் (Quercetin), ரெஸ்வெரடால் (Resveratol) ஆகியவை உடலிலுள்ள ஃப்ரீரேடிக்கல்ஸைக் குறைத்து, அதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

சிவப்புத் திராட்சை இதயத்திற்கு மிகவும் நல்லது. இதிலிருக்கும் ரெஸ்வெரடாலும்  க்யூர்சேட்டினும் எல்.டி.எல் (LDL) எனும் கெட்டக் கொழுப்பை நீக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ரெஸ்வெரடால், வயது காரணமாக கண்களில் ஏற்படும் `மேக்யூலர் டீஜெனரேஷன்' (Macular degeneration), கண்புரை ஆகியவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.       

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், மது அருந்துதல், புகை பிடித்தல், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல் ஆகியவை நமது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்ந்தால் மூட்டு வீக்கம் (Arthritis), இதய நோய்கள், அல்சைமர் நோய் (Alzheimer's disease) போன்ற நோய்கள் தாக்கலாம். இதில் பாலிபீனால் ((Polyphenol) எனும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதற்கு உடல் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.  

உலகில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது புற்றுநோயால்தான். சிவப்புத் திராட்சையின் தோலிலுள்ள ரெஸ்வெரடாலுக்கு ஆன்டி ஆக்சிடன்ட், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி (Anti Inflammatory) பண்புகள் உள்ளன. இது புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும். மார்பகம், வயிறு, கல்லீரல், லிம்ஃப் (Lymph) ஆகியவற்றில் தோன்றும் புற்றுசெல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். பெருங்குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவும். 

`திராட்சையில் அதிகளவு பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. அதனால் சோடியத்தின் அளவு குறைந்துவிடும். இந்த மாற்றம் காரணமாக, உயர் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்’ என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் (AHA).

150 கிராம் திராட்சையில் 104 கிலோ கலோரி, 1.09 கிராம் புரதச்சத்து, 1.4 கிராம் நார்ச்சத்து, 288 மில்லிகிராம் பொட்டாசியம்,  27.33 கிராம்  கார்போஹைட்ரேட், 3 மில்லிகிராம் சோடியம்,  4.8 மில்லிகிராம் வைட்டமின் இ சத்துகள் உள்ளன. எனவே, உடல் எடையைக் குறைக்கவோ, கட்டுக்குள் வைத்திருக்கவோ முயற்சி செய்பவர்களுக்குச் சிவப்புத் திராட்சை சிறந்த உணவாகும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தீர்க்க உதவும். 

இதன் முழு பயனைப் பெற, ஆர்கானிக் திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது. பீட்டா ப்ளாக்கர் (Beta blockers), பிளட் தின்னர்ஸ் (Blood thinners) போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே திராட்சையைச் சாப்பிட வேண்டும்.” என்கிறார் சங்கீதா நடராஜன்.