Published:Updated:

நிபா வைரஸ் தாக்கம் குறைக்க பவளமல்லி உதவுமா? - சித்த மருத்துவம் சொல்வது என்ன? #Nipah

பவளமல்லி நிபா வைரஸுக்கு சிறந்த தடுப்பு மருந்தா, அது பற்றி சித்த மருத்துவ நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

நிபா வைரஸ் தாக்கம் குறைக்க பவளமல்லி உதவுமா? - சித்த மருத்துவம் சொல்வது என்ன? #Nipah
நிபா வைரஸ் தாக்கம் குறைக்க பவளமல்லி உதவுமா? - சித்த மருத்துவம் சொல்வது என்ன? #Nipah

கேரள மக்களை கலக்கத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்கியிருக்கிறது நிபா வைரஸ் தாக்குதல். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழிப்புகளும் அதிகமாக ஆக, 'நிபா வைரஸ்' பீதி, கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது. எல்லை மாவட்டங்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள், கால் நடைத்துறை மற்றும் வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையோ, தடுப்பு மருந்துகளோ இல்லை என்பதுதான் பதற்றம் அதிகரிக்க முக்கியக் காரணம்.  ஆங்கில மருத்துவத்தில், நிபா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நீர் இழப்பு, மூச்சுதிணறல் ஆகியவற்றை கட்டுபடுத்தும் சிகிச்சைகள் மட்டுமே இருக்கின்றன. அதோடு, காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்  ரைபாவாரின் (Ribavarin) என்னும் ஆன்டி வைரல் மருந்துகள்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், 'பவளமல்லி நிபா வைரஸுக்கு மிகச் சிறந்த தடுப்பு மருந்து, நிபா வைரஸ்  காய்ச்சலை குணப்படுத்தும்’ என்றெல்லாம் செய்திகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் பரவிவருகின்றன. ஏற்கெனவே, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நிலவேம்பு குடிநீரை அரசே பரிந்துரைத்த நிலையில், இப்போது பவளமல்லி பற்றியும் தகவல்கள்

பரவிவருகின்றன. 

"உண்மையில் பவளமல்லி நிபா வைரஸுக்கு சிறந்த தடுப்பு மருந்தா, அது பற்றி சித்த மருத்துவ நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?’’ - சித்த மருத்துவரும், இந்திய சித்த மருத்துவர்கள் பேரவையின் செயலாளருமான வேலாயுதத்திடம் பேசினோம்...

"பவளமல்லி மட்டுமல்ல, மஞ்சள், துளசி, மிளகு, கீழாநெல்லி, நிலவேம்பு, வேப்பிலை, ஆடாதொடா... என நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் பலவும் 'ஆன்டி வைரல்' தன்மை கொண்டவை. அதாவது வைரஸால் உண்டாகும் காய்ச்சலைத் தடுக்கும் மூலப்பொருள்கள் இவற்றில் இருக்கின்றன.  இன்றைக்கும் வேப்பிலை, மஞ்சள் ஆகிய இயற்கை மூலிகைகளை  அம்மை, மஞ்சள்காமாலை போன்ற வைரஸ் பாதிப்புகளுக்குச் சிறந்த மருந்தாக கிராமங்களில் பயன்படுத்திவருகிறார்கள். இவற்றிலிருக்கும் மூலப்பொருள்களைக் கொண்டுதான் ஆங்கில மருத்துவத்திலும் வைரஸுக்கு எதிரான சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்துகளை தயாரிக்கிறார்கள். 

இவை வைரஸை முற்றிலும் அழிப்பதாகச் சொல்லப்படாவிட்டாலும், வைரஸின் வீரியத்தைக் குறைக்கும் தன்மை இவற்றிலிருக்கிறது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.  வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீக்குகின்றன. 

நிபா வைரஸ் பாதிப்பைப் பொறுத்தவரை அவற்றின் குறிகுணங்களான சளி, காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் பவளமல்லிக்கு உண்டு. இந்தியா முழுக்க தானாக வளரக்கூடிய சிறு மரம் பவளமல்லி மரம். மல்லிகைப்பூவின் உருவத்தையும் மணத்தையும் பெற்றிருக்கும் பவளமல்லிப் பூவின் காம்பு மஞ்சள் கலந்த செம்மை நிறத்துடன் பவள நிறத்தைப் போல இருப்பதால், இதைப் `பவளமல்லி' என்று அழைக்கிறோம். இதற்கு `பரிசாதம்’, `பாரிஜாதம்’ என்ற பெயர்களும் உள்ளன. ஆங்கிலத்தில் `நைட் ஜாஸ்மின்’ (Night Jasmine), சம்ஸ்கிருத்தில் `பரியாட்டகா’ (Pariyataka) என்றும் அழைக்கப்படுகிறது. கைப்பு சுவை கொண்டது பவளமல்லி. இதன் இலையும் வேர்ப்பட்டையும் மருத்துவ குணம் கொண்டவை. 'குணப்பாடம்' உள்ளிட்ட சித்த மருத்துவ நூல்களில் பவளமல்லியின் தன்மையும் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த நூல்கள் இதை 'கபஹரகாரி' (Expectorant) என்னும் கோழையகற்றி என்கின்றன. அதாவது, சளியை அகற்றக்கூடிய தன்மை இதற்கு உண்டாம். அதேபோல, `பித்தசாந்தினி' (Antibilious) பித்தத்தை குறைக்கும் 'பித்தசமனி' என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. அதாவது, காய்ச்சலால் உண்டாக்கும் உடல் வெப்பத்தை இது குறைக்கும் என்று பொருள். `ஸ்வேதகாரி' (Diaphoretic) என்னும் வியர்வை பெருக்கியாகவும், பித்தகாரி (Cholagogue) என்னும் பித்த நீர் பெருக்கியாகவும் இது செயல்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பவளமல்லியால் வியர்வை அதிகரிப்பதால் உடல் வெப்பம் அதிகரிக்காமல் காய்ச்சல் கட்டுப்படும்.

பவளமல்லியை எப்படிப் பயன்படுத்துவது?

'இதன் இளங்கொழுந்தை இஞ்சிச் சாற்றில் அரைத்து, தினமும் இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தீரும்; இதன் இலையை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து தினமும் இருவேளை கொடுத்து வந்தால் காய்ச்சலுடன் முதுகுவலியும் நீங்கும்’ என்றும் சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதேபோல, மூன்று கிளாஸ் தண்ணீரில் பவளமல்லி இலையை ஒன்றிரண்டாக பிய்த்து போட்டு, கொதிக்கவைத்து ஒரு கிளாஸ் ஆகச் சுருக்கி, அதனுடன் மிளகு சேர்த்து உணவுக்கு முன்னர் மூன்று வேளையும் பருகினால் காய்ச்சல் குணமாகும்.

நிபா வைரஸ் பாதிப்பைப் பொறுத்தவரை, இந்தப் பவளமல்லி கஷாயம்  குடிப்பதோடு, மேலும் சில மூலிகை உணவுகளைச் சேர்த்துக்கொண்டால் அதிகப் பலன்கள் கிடைக்கும். 

'தூதுவளை நெய்’ சேர்த்துக்கொள்ளலாம். இது, மூளைச் செல்களைப் பாதுகாக்கும். நோய்த் தொற்றுகள் மூளையை பாதிக்காமல் தடுக்கும் தன்மை தூதுவளைக்கு உண்டு. நிபா வைரஸால் மூளைக் காய்ச்சல் ஏற்படும்;  தூதுவளை நெய் அதைத் தடுக்கும். காய்ச்சல் இல்லாதவர்களுக்கு  நிலவேம்பு குடிநீர், தூதுவளை நெய், பவளமல்லி போன்றவற்றை  மூன்று வேளை, மூன்று நாள்களுக்கு கொடுக்கலாம். வைரஸுக்கான அறிகுறிகள் தெரிந்தால் ஒரு வாரம் வரை கொடுக்கலாம். நிலவேம்பு குடிநீர்போல இவற்றையும் கொடுப்பதற்கான முயற்சிகளை அரசே மேற்கொள்ளலாம்’’ என்கிறார் வேலாயுதம்.

"பவளமல்லியை தடுப்பு மருந்தாகத் தரும் திட்டம் இருக்கிறதா?" 

இந்திய மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். 

"பவளமல்லிக்கு நிபா வைரஸை அழிக்கும் ஆற்றல் இருக்கின்றன எனச் சித்த மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இதுகுறித்து அரசுக்குப் பரிந்துரைக்க இருக்கிறோம். மற்ற விஷயங்களை அரசு முடிவு செய்யும்" என்று முடித்துக்கொண்டார்கள்.