Published:Updated:

மைக்ரேன் தலைவலிக்கு குட்பை சொல்லலாம்... வராமல் தடுக்க புதிய மருந்து! #Migraine

மைக்ரேன் தலைவலிக்கு குட்பை சொல்லலாம்... வராமல் தடுக்க புதிய மருந்து! #Migraine
மைக்ரேன் தலைவலிக்கு குட்பை சொல்லலாம்... வராமல் தடுக்க புதிய மருந்து! #Migraine

மைக்ரேன் தலைவலிக்கு வந்திருக்கிறது புதிய தீர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`காலையிலிருந்து ஒரே தலைவலி, வேலையே செய்ய முடியலை’, `தலையே வெடிச்சிடும்போலருக்கு... அப்படி ஒரு தலைவலிப்பா’... என்றெல்லாம் புலம்புபவர்களை நாம் பார்த்திருப்போம். நம்மில் பலரையும் கிறுகிறுக்கச் செய்வதில் தலைவலிக்கு முக்கிய இடமுண்டு. `உலகில், ஏறக்குறைய 50 சதவிகிதம் பேர் பல்வேறு தலைவலி சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். தலைவலிகளிலும் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது, `மைக்ரேன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத்தலைவலி. இது ஒரு வகை நரம்பு தொடர்பான நோய்.

பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலிப் பிரச்னை, 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. சாதாரண தலைவலியைப்போல இல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வரும். ஒற்றைத் தலைவலி வர முக்கியக் காரணமாக இருப்பது சி.ஜி.ஆர்.பி (CGRP- Calcitonin Gene Related Peptide) எனும் ஒரு புரதக்கூறு. இந்த புரதக்கூற்றை முடக்குவதற்கான மருந்தைப் பல ஆய்வுகளுக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். `எரினுமாப்’ (Erenumab) என்கிற இந்த மருந்து அமெரிக்காவின் எஃப்.டி.ஏ-வின் (FDA - US Food and Drug Administration) அனுமதியுடன், இப்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து விளக்கமாகப் பேசுகிறார் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் ராஜ்குமார்...

``மைக்ரேன் அல்லது ஒற்றைத்தலைவலி என்பது ஒரு வகை க்ளஸ்டர் தலைவலி (Cluster Headache). இது நரம்பியல் கோளாறால் ஏற்படுவது. பெரும்பாலானவர்களுக்கு ஒரு பக்கம் மட்டுமே இந்த வலி இருக்கும். ஆனால், சிலருக்குத் தலையின் இரண்டு பக்கமும் வலி இருக்கும். இந்த வலியின்போது தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, கண் இருட்டிக்கொள்வது போன்றவையெல்லாம் ஏற்படும். இந்த ஒற்றைத்தலைவலி வருவதற்கு முன்னரே இது குறித்து ஒரு முன்னுணர்வு (Premonition) ஏற்படும். இது, `ஆரா’ (Aura) எனப்படும்.

மைக்ரேனுக்கு மன அழுத்தம், கஃபைன் (Caffiene), சாக்லேட் (Chocolate), மாதவிடாய் ஆகியவைதான் பொதுவான காரணங்கள். மைக்ரேன் ஏற்படும்போது மூளையில் சி.ஜி.ஆர்.பி எனும் புரதக்கூறு சுரக்கும். இது அதிகரிக்கும்போது வலி அதிகரிக்கும். இது குறைந்து இயல்புநிலைக்கு வரும்போது தலைவலி நின்றுவிடும். இந்த சி.ஜி.ஆர்.பி-யை முடக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்துதான் `எரினுமாப்’ (Erenumab). இது ஒரு மாலிக்யூலர் மருந்து (Molecular Medicine).

இது இப்போது ஊசி வடிவில் வந்திருக்கிறது. மாதத்துக்கு ஒரு முறை இந்த 70 அல்லது 140 மில்லிகிராம் மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டால் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படவேண்டிய அவசியம் இருக்காது. இது `கால்சிடோனின்’ என்ற புரதத்தைத் தடுத்து, தலைவலி வராமல் தடுக்கும். தலைவலி வந்த பிறகு அதைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் ஸ்டெமெட்டில் (Stemetil), கிரெனில் (Grenil), ஃப்லூனாரிஸின் (Flunarizine) போன்ற பல மருந்துகள் இருந்தாலும், இதுதான் தலைவலியை வராமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் மருந்து. இது சி.ஜி.ஆர்.பி-ஐ மட்டும் குறிவைத்து தாக்கும் மாலிக்யூலர் மருந்து என்பதால், இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வு. ஆனால், இந்த மருந்து நம் நாட்டில் தயாரிக்கப்படாததால், இங்கே இதை வாங்க பல லட்ச ரூபாய் செலவாகும். எனவே, முடிந்தவரை காபி, சாக்லேட் போன்றவற்றையும் மன அழுத்தத்தையும் தவிர்த்துவிட்டாலே, இந்த தலைவலித் தொல்லையையும் தவிர்த்துவிடலாம்” என்கிறார் ராஜ்குமார்.

மைக்ரேனால் உடலுக்குப் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், அன்றாட வாழ்க்கையில் இதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும். எனவே, இந்த மருந்து ஒரு சிறந்த கண்டுபிடிப்புதான். இது அனைவருக்கும் கிடைக்கும் நாள் வெகுவிரைவில் வரட்டும். ஒற்றைத் தலைவலியை ஓரம்கட்டுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு