Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 23

இனி எல்லாம் சுகமே - 23
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 23

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 23

செரிமானம் அறிவோம்!

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 23
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 23
இனி எல்லாம் சுகமே - 23

மேற்கத்தியக் கலாசாரத்தில் உணவோடு மதுவும் இருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மது அவர்களது அன்றாட வாழ்க்கையோடு இணைந்துவிட்டது. தண்ணீர் வழியாக, நோய்கள் பரவும் என அஞ்சி பழரசத்தை நீண்ட நாட்கள் வைத்திருந்து குடித்துப் பழகினார்கள். இந்தப் பழரசத்தால் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சில நோய்களும் அகன்றன. அன்றில் இருந்து உணவோடு மதுவையும் சேர்த்துவிட்டார்கள். இந்தியாவில் தண்ணீரால் நோய்கள் பரவியபோது, அதனைக் கொதிக்கவைத்து, துளசி போன்ற சில மூலிகைகளைக் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

தற்போது, மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, மதுவால் அதிகம் சிக்கிச் சீரழிந்துகொண்டிருப்பது இந்தியாதான். அங்கும் தினமும் குடிக்கிறார்கள், அவர்களுக்குப் பெரிய பிரச்னைகள் ஏற்படுவதுஇல்லையே என உங்களுக்குச் சந்தேகம் வரலாம். மேற்கத்திய மக்களுக்கு நூற்றுக்கணக்கான தலைமுறைகள் வழியாக, சந்ததிரீதியாக மதுவுக்கு அவர்களது மரபணு (Gene) பழகிவிட்டது. எந்த அளவுக்கு மது அருந்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். இன்னொரு விஷயம், அவர்களுக்கு ‘நல்ல மது’ கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த 50 ஆண்டுகளில், ஒரு இந்தியர், சராசரியாக ஐரோப்பியர் குடிக்கும் மதுவைவிட அதிகம் குடிக்கிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜீனில் ஏற்பட்ட மாற்றத்தை, திடீரென 50 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது. தவிர, மதுவின் அளவும் இங்கே சரியாக வரையறுக்கப்படவில்லை; நல்ல மதுவும் கிடைப்பது இல்லை. இதெல்லாம்தான் இந்தியர்களுக்கு மதுவால் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள்.

மது அருந்துபவர்களில் சராசரியாக 100-க்கு 20 பேருக்கு கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுகிறது. மதுவால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் மிகமிக அதிகம். ஹெபடைட்டிஸ் வைரஸ்களுக்கு இணையாக, செயற்கையாக நமக்கு நாமே உடலுக்குள் அனுப்பும் விஷம்தான் ஆல்கஹால். ஆல்கஹாலில் அசிட்டால்டிஹைடு என்ற ரசாயனம் இருக்கிறது. இது, கல்லீரலுக்கு விஷம். ஒரு சிலர் `ஸ்பிரிட்’ எனச் சொல்லப்படும் மதுவைக் குடிப்பார்கள். இது, மெத்தனால் வகையைச் சேர்ந்தது. இதில் இருக்கும் பார்மால்டிஹைடு மிக மோசமான விஷம். கண் பார்வையைப் பறிக்கும்; சிறுநீரகத்தைச் செயலிழக்கவைக்கும்.

இனி எல்லாம் சுகமே - 23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல்கஹால் என்பது முழுக்க முழுக்க மாவுச்சத்து நிரம்பியது. இது, கல்லீரலில் கொழுப்பாக மாற்றி, சேகரிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு, சுமார் 5-10 வருட இடைவெளியில் நிச்சயம் ஃபேட்டி லிவர் உருவாகும். இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் குறையும். கல்லீரல் செல்கள் பாதிப்படையும்போது, கல்லீரலும் தனக்குத்தானே சரி செய்துகொள்ள மறுக்கும்போது, 20 - 30 சதவிகிதம் பேருக்கு `லிவர் சிரோசிஸ்’ எனப்படும் கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. இவர்களில், 15 - 20 சதவிகிதம் பேர் கல்லீரல் செயல் இழந்து மரணத்தை அடைகிறார்கள். ஃபேட்டி லிவரில் இருந்து கல்லீரல் சுருக்க நோய் என்ற நிலையை அடைவதற்கு இடையில், ஒரு சிலருக்கு ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் என்ற நிலை வரும். பொதுவாக, ஆறேழு வருடங்களுக்குத் தொடர்ச்சியாக மது அருந்தியவர்கள் இந்த நிலையைச் சந்திப்பார்கள்.

திடீரென, உடல் வலுவிழக்கும், மஞ்சள் காமாலை வரும். வயிறு வீக்கம் அடையும். ஆல்கஹால் அருந்துவதை நிறுத்திவிடலாம் எனத் தோன்றும். அப்படி நிறுத்தும்போது, பதற்றம், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். மீண்டும் குடித்தால், கல்லீரல் செயலிழந்துபோகும். இந்த ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் என்ற நிலை ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையை அறிந்து, மருத்துவர்கள் உதவியோடு குடியை நிறுத்தினால், கல்லீரல் சுருக்க நோய் வராமல் பல ஆண்டுகள் நிம்மதியாக வாழ முடியும். ஒருவேளை, இந்த நிலை வராமல் நேரடியாகக் கல்லீரல் சுருக்க நோய் வந்துவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம். ஆனால், சோகம் என்னவென்றால், கல்லீரல் சுருக்க நோய் வந்ததற்கான அறிகுறி ஆரம்பத்திலேயே தெரியாது என்பதால், முற்றிய நிலையில்தான் பலர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் அவர்களைக் காப்பாற்ற முடிவது இல்லை.

எனவே, மது அருந்துபவர்கள் கல்லீரலைப் பரிசோதனை செய்து, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பார்த்து மதுவைத் தவிர்த்துவிட்டால், 75 சதவிகிதம் கல்லீரல் செயலிழந்த நிலையில் இருந்தாலும்கூட, மீதி 25 சதவிகிதம் கல்லீரலின் செயல்பாடுகளை வைத்தே, அதனை மேம்படுத்தி, நிம்மதியாகப் பல ஆண்டுகள் வாழ முடியும். மதுவுக்கு அடிமையான பலரும், மதுவின் தீமைகளைக் குறித்துத் தெரிந்துகொள்ள கூட விரும்புவது இல்லை. ஒரு சிலர், மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காரணம் காட்டி, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் என்று அசட்டை செய்கிறார்கள். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை சாதாரணமானது அல்ல. தேவைப்படும்போது சரியான மாற்றுக் கல்லீரல் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், சிகிச்சைக்கான செலவு மிக அதிகம், செலவு என்பதைத் தாண்டி, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை எல்லோருக்கும் பலனளிக்கும் என்று உத்தரவாதமும் கொடுக்க முடியாது. சிகிச்சைக்குப் பிறகு மதுவைத் தொட்டால் மரணம்தான். எனவே, எந்தவிதச் சாக்குபோக்குச் சொல்வதையும் விட்டுவிட்டு, மதுவை விடுவதற்கு முயற்சிப்பதே  நல்லது. மதுவுக்கு அடிமையானவர்கள், எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, மதுவை அறவே ஒழித்தால், அங்கிருந்து ஒரு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஓர் அற்புதமான வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கும். உடல்நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் கிடைக்கும். மதுவைக் கைவிடுங்கள். மது அறவே வேண்டாம்.

- தொடரும்

மது எப்படிச் செரிமானத்தைப் பாதிக்கிறது?

இனி எல்லாம் சுகமே - 23

*ஆல்கஹால் அருந்தும்போது, அதில் உள்ள நச்சுக்கள் இரைப்பைச் சுவரில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால், இரைப்பை அழற்சி உண்டாகும். பசி எடுக்காது.

*மது, குமட்டலை ஏற்படுத்தும். இரைப்பையில் இருக்கும் மது எகிறியடித்துக்கொண்டு மேலே ஏறி, சில சமயங்களில் உணவுக்குழாயைக் கிழித்துவிடும். இதனால், குமட்டிக் குமட்டி வாந்தி எடுப்பார்கள். இதற்கு, `போர்ஹோவ் சிண்ட்ரோம்’ (Boerhaave syndrome) எனப் பெயர்.

*மது, சிறுகுடலின் உறிஞ்சும் சக்தியைக் குறைக்கும். இதனால், வயிற்றுப்போக்கு ஏற்படும். உடலில், ஊட்டச்சத்து குறையும்.

*செரிமானத்தின் தலைவனான கணையத்தை, ஆல்கஹால் கடுமையாகப் பாதிக்கும். அதன் சுரப்புகளை அடர்த்தியாக்கும். கணையச் சுரப்புகள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதித்து, கணைய அழற்சியை உண்டாக்கும். குறுகியகால மற்றும் நீண்டகால கணைய அழற்சி இரண்டுக்குமே மது முக்கியக் காரணம்.

*ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்கும்போது, உடலுக்குத் தேவைப்படும் நேரத்தில் கல்லீரலால் சரியாக குளூக்கோஸை வழங்க முடியாமல் போகலாம். மேலும், ஆல்கஹால் இன்சுலின் சுரப்பையும் பாதிக்கும். எனவே, ஆல்கஹால் காரணமாகச் சர்க்கரைநோயும் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

இந்த அறிகுறிகள் உங்களிடம் இருக்கின்றனவா?

*ஆங்கிலத்தில் `கேஜ்’ (Cage)  என ஓர் அறிகுறியைச் சொல்வார்கள். ஆல்கஹாலை அருந்துபவர்கள், இந்த அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதித்துக்கொள்ளலாம்.

*C - கட்டவுண் (Cutdown) - நாம் ஆல்கஹால் அதிகம் குடிக்கிறோம். இதைக் குறைத்துவிடலாம் எனத் தோன்றுவது.

*A - அனாய்டு (Annoyed) - யாரவது, `குடிக்காதே’ எனச் சொன்னால் கோபம் வருவது. குடிக்கும்போது நீங்கள் செய்த விஷயங்களை யாராவது விளக்கினால், உங்களுக்கு அவர் மீது கடும் வெறுப்பு ஏற்படுவது.

*G -  கில்ட்டி (Guilty) - குடிப்பது தவறு எனத் தெரிந்தும், மீண்டும் மீண்டும் குடியை நாடுகிறோம் என்ற குற்றஉணர்வு ஏற்படுவது.

*E - ஐ ஓப்பனர் (Eye opener) - காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும் எனத் தோன்றுவது. ஏதாவது காரணம் சொல்லி, எப்படியாவது குடித்தே ஆக வேண்டும் என நினைப்பது.

*இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது நல்லது. முதலில், இந்த அறிகுறிகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மது அருந்துபவரை, அவராக விரும்பினால் ஒழிய வேறு யாரும் அவரை மாற்ற முடியாது. `நான் மதுவை விட்டுவிட விரும்புகிறேன். ஆனால், கட்டுப்படுத்த முடியவில்லை’ என்ற மனநிலைக்காவது வரும்போதுதான் வீட்டில் உள்ளவர்கள், மருத்துவர்கள் உதவியோடு மதுவைக் கைவிட முயற்சி செய்ய முடியும்.