Published:Updated:

`` 'அம்மா’ ஆகாமலே செத்துடுவோமோனு கவலைப்பட்டிருக்கேன்!’’ - 63 வயதில் தாயான செந்தமிழ்ச்செல்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` 'அம்மா’ ஆகாமலே செத்துடுவோமோனு  கவலைப்பட்டிருக்கேன்!’’ - 63 வயதில் தாயான செந்தமிழ்ச்செல்வி
`` 'அம்மா’ ஆகாமலே செத்துடுவோமோனு கவலைப்பட்டிருக்கேன்!’’ - 63 வயதில் தாயான செந்தமிழ்ச்செல்வி

'நாற்பது வருஷ துயரத்தை இந்தக் குழந்தை துடைச்சுட்டா' - 63 வயதில் தன் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் செந்தமிழ்ச்செல்வி.

``சொந்தக்காரர்கள், தெரிஞ்சவங்க இப்படி யாரைப் பார்த்தாலும், `உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்கு?’னு யாரும் கேட்கிறது இல்லைங்க. `எத்தனை குழந்தைங்க?’னு தானுங்க கேட்பாங்க. கிட்டத்தட்ட நாப்பது வருசமா இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்டிருக்காங்க. பதில் எதுவும் சொல்ல முடியாம மௌனமா அந்த இடத்தைவிட்டு நகர்ந்திருக்கேன். இனிமே யாராவது கேட்டா, `எனக்கு ஒரு பொண்ணு இருக்கா’னு சந்தோஷமா சொல்லுவேனுங்க...’’ நெகிழ்ச்சியோடு பேசுகிறார் 63 வயதில் தன் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் செந்தமிழ்ச்செல்வி.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் - செந்தமிழ்ச்செல்வி தம்பதியர். கிருஷ்ணனுக்கு வயது 72. செந்தமிழ்ச்செல்விக்கு வயது 63. கிருஷ்ணன் உடுமலைப் பேட்டையிலுள்ள தனியார் மில் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணமாகி 42 ஆண்டுகளாக இந்தத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. கிருஷ்ணனுடன் பிறந்தவர்கள் பதினோரு பேர். அவர்களின் குழந்தைகள், பேரன்கள் எனப் பலரை ஆசை ஆசையாக வளர்த்து வந்திருக்கிறார்கள் இருவரும். இப்போது அனைவரும் வெளிநாடுகளில், வெவ்வேறு ஊர்களில் செட்டிலாகிவிட இவர்களைத் தனிமை வாட்டியிருக்கிறது. `சரி, நமக்கென்று ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்று முடிவெடுத்து, டெஸ்ட் ட்யூப்பின் மூலம் இப்போது ஓர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். குழந்தை பிறந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. அந்த அனுபவம் குறித்து நம்மிடம் நெகிழ்ச்சியோடு விவரிக்கிறார் தாய் செந்தமிழ்ச்செல்வி.

``முதல்முறையா குழந்தையைக் கையில வாங்கினப்போ எனக்கு அழுகை அழுகையாகத்தான் வந்தது. இந்தக் கையால எத்தனையோ பிள்ளைகளை தூக்கி வளர்த்திருக்கேன். ஆனாலும் என் நாற்பது வருஷ துயரத்தை இந்தக் குழந்தை துடைச்சுட்டா. என்னைத் தாயாக்கிட்டா. தாய்மையடையாமலேயே செத்துடுவோமோனு பலநாள் கவலைப்பட்டிருக்கேன்...’’ பேசிக்கொண்டிரும்போதே கட்டுப்படுத்த முடியாமல் வரும் கண்ணீரைத் துடைத்தபடி நம்மிடம் பேசுகிறார் அவர்.

``ஒவ்வொரு மாசமும் நம்பி நம்பி ஏமாந்து போயிருக்கேனுங்க. பெத்த தாய்க்கிட்டகூட சொல்ல முடியாத கஷ்டமுங்க. எவ்வளவு வைத்தியம் பார்த்தாலும், வயித்துல குழந்தை நிக்கலை. எங்க வீட்டுக்காரரோட அண்ணன், தம்பி குழந்தைங்களத்தான் எங்க குழந்தைங்களா நினைச்சு வளர்த்தோம். இப்போ எல்லாரும் எங்கெங்கேயோ செட்டில் ஆகிட்டாங்க. அப்போதான், டெஸ்ட் ட்யூப் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு ஒரு யோசனை தோணுச்சு.

அந்தக் காலத்துல டெஸ்ட் ட்யூப் பேபின்னா கேவலமா நினைப்பாங்க. அதனால, குழந்தை ஆசையிருந்தும் பெத்துக்கல. குழந்தை வேணும்னு கேட்குறதுக்கே வெட்கமா இருக்கும். ஆனா, இப்போ அப்படி இல்லீங்க. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு முடிவெடுத்தோம். ஆணோ, பொண்ணோ நமக்காக ஒரு வாரிசு கண்டிப்பா வேணும்னு, டாக்டர்கிட்ட போனோம். என் உடம்பும் நல்ல ஆரோக்கியமாத்தான் இருக்குனு சொன்னாங்க. `எந்தப் பிரச்னையும் இல்லை’னு நம்பிக்கையும் கொடுத்து அதுக்கான ட்ரீட்மென்ட்டை ஆரம்பிச்சாங்க.

பாப்பாவும், எனக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கலை. என்னால தாங்க முடியுற அளவுக்குத்தான் கஷ்டம் கொடுத்தாங்க. நல்லபடியா பிறந்துட்டாங்க. பத்து நாள் ஆச்சு. எனக்குச் சரியான நேரத்துல பிள்ளை பிறந்திருந்தா, என் பிள்ளைக்கு இப்போ நாப்பது வயசு ஆகியிருக்கும். பேரப்பிள்ளைகள் எல்லாம் இருந்திருப்பாங்க. இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடலை. இவதான் எனக்கு மகள், பேத்தி எல்லாம். நான் இல்லை என் வீட்டுக்காரர்... யாராவது ஒருத்தர் உயிரோட இருந்து பாப்பாவை வளர்த்துருவோம்னு நம்பிக்கையிருக்கு.

எனக்கு இன்னமும் கூட ஏதோ கனவுல நடந்த மாதிரியேதான் இருக்குங்க. நானும் அம்மாவாகிட்டேன்...’’ கண்களில் கண்ணீர் திரளப் பேசுகிறார் செந்தமிழ்ச்செல்வி.

``சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டதால் செந்தமிழ்ச்செல்வியின் உடலில் கருமுட்டைகள் இல்லை. ஆனால், கர்ப்பப்பையை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தார். கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக, கருவுறுதலுக்குத் தகுதியானதாக இருந்தது. அவர் கணவரின் விந்தணுக்களும் நல்ல நிலையில் இருந்தன. எனவே, அதனைப் பொருத்தி கருவை உருவாக்கினோம். செந்தமிழ்ச்செல்விக்குச் சர்க்கரை பாதிப்பு இருந்தது, ஆனாலும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்ததால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

கிட்டத்தட்ட, பத்து மாதங்கள் அவர்களுக்குச் சிறப்பு சிகிச்சைகள் அளித்தோம்; எங்களின் நேரடிக் கண்காணிப்பில் வைத்திருந்தோம். தேர்ந்த (High Risk Pregenacy Care) பிரசவ முன்கவனிப்புப் பிரிவில்வைத்து நன்றாகப் பார்த்துக்கொண்டோம்.

இதுவரை டெஸ்ட் ட்யூப்பின் மூலமாகப் பிறந்த பெரும்பாலான குழந்தைகளைப் பிறந்தவுடனேயே ஐ.சி.யூவில் வைக்கவேண்டிய சூழல் வரும். ஆனால், இந்தக் குழந்தை பிறக்கும்போதே மூன்றரைக் கிலோ எடையுடன் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. இந்தப் பிரசவம் எனக்கு மிகச் சிறந்த அனுபவம்’’ என்கிறார் செந்தமிழ்ச்செல்விக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் செந்தாமரைச் செல்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு