
டாக்டர் விகடன், சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் டிரேடர்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச இதய சிகிச்சை மருத்துவ முகாம் மயிலாடுதுறையில் நடந்தது.
முகாமில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அதன்பின் தேவைப்படுவோருக்கு ‘எக்கோ’ பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 17 பேருக்கு இதய வால்வு பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதுதவிர, பலருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
முகாமில் கலந்துகொண்ட, சீர்காழியைச் சேர்ந்த மன்சூர்அலி, “சமையல் வேலை செய்யுற எனக்கு மூணு மாசத்துக்கு முன்னாலதான் இதயத்துல அடைப்புன்னு தெரிய வந்தது. ஆப்ரேசன்தான் செய்தாகணும்னு சொல்லிட்டாங்க. லட்ச கணக்கில பணம் செலவாகுமே அதற்கு என்ன பண்ணுறதுன்னு தவிச்சிப்போனோம். ‘இருக்கிற வீட்டை விற்றாவது உங்களை காப்பாத்துறோம்னு’ மனைவி சொன்னபோது நான் ஏத்துக்கல. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டேன். செலவு இல்லாம ஆபரேசன் செய்யலாம்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காங்க. டாக்டர்கள் கவனித்த விதத்தையும் அவர்கள் அன்பான பேச்சையும் கேட்கும்போதே நான் குணமாகிட்டா மாதிரி நினைக்கிறேன்” என்றார் கண்ணீர் மல்க.
- மு.இராகவன், படங்கள்: க.சதீஷ்குமார்
