Published:Updated:

அல்சைமரை குணப்படுத்துமா தேங்காய் எண்ணெய்? - மருத்துவம் சொல்வது என்ன? #AlzheimersDisease

அல்சைமரை குணப்படுத்துமா தேங்காய் எண்ணெய்? - மருத்துவம் சொல்வது என்ன? #AlzheimersDisease
அல்சைமரை குணப்படுத்துமா தேங்காய் எண்ணெய்? - மருத்துவம் சொல்வது என்ன? #AlzheimersDisease

`தேங்காய் எண்ணெய் அல்சைமருக்கு மருந்து!’ - வலைதளங்களில் வைரலாகும் செய்தி! உண்மை என்ன? #Alzheimer'sDisease

மெரிக்காவைச் சேர்ந்தவர் மேரி நியூபோர்ட் (Dr. Mary Newport)... மருத்துவர். இவருடைய கணவர் ஸ்டீவ் நியூபோர்ட்டுக்குத் தீவிரமான 'அல்சைமர்’ (Alzheimer's) என்னும் ஞாபக மறதி நோய். இதைத் தெரிந்துகொண்டதும் மேரி நியூவ்போர்ட், அந்த நோய் குறித்த ஓர் ஆராய்ச்சியில் இறங்கினார். ஆராய்ச்சியின் ஆரம்பத்திலேயே அல்சைமரும் சர்க்கரைநோயைப் போல, சீரான இன்சுலின் சுரப்பு இல்லாத காரணத்தால் வருகிறது என்பதைக் கண்டறிந்தார். அதாவது, மூளைச் செல்களின் இயக்கத்துக்குக் குளூக்கோஸ் மூலம்தான் ஆற்றல் கிடைக்கிறது என்பதையும், சீரான அளவில் குளூக்கோஸ் கிடைக்காதபோது, மூளைச் செல்கள் இறந்துவிடும் என்பதையும் தெரிந்துகொண்டார். ஆனால், குளூக்கோஸை உருவாக்கி மூளைச் செல்களின் அழிவைத் தடுக்க முடியாது என்பதால், அவருடைய ஆராய்ச்சி வேறு திசையில் திரும்பியது. 

மூளைச் செல்கள் உருவாக்கத்தில் கீட்டோன்கள் (Ketones) முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் மூளைச் செல்களின் அழிவைத் தடுக்க உடலிலேயே கீட்டோன்களை உருவாக்கலாம் என்று முடிவுசெய்தார். ஆனால், கீட்டோன்கள் நாம் சாப்பிடும் வைட்டமின்களில் இல்லை என்பது உறுதியானதும், அவற்றை உருவாக்க அவர் தேர்ந்தெடுத்தது, ஏதோ விலை மதிக்க முடியாத பொருளல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயில் ட்ரைகிளைசரைடு (Triglyceride) என்னும் கொழுப்புச்சத்து இருக்கிறது. இதைச் சாப்பிட்டால் அது, கல்லீரலில் சென்று வளர்ச்சிதை மாற்றம் மூலம் கீட்டோன்களாக மாறுகிறது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. அதன் பிறகு தேங்காய் எண்ணெயை அவருடைய கணவருக்கு உணவில் சேர்த்துக் கொடுக்க தொடங்கினார். இதன் மூலம் அல்சைமர் பாதிப்பின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது. 

இப்படி ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் -களில் வலம்வருகிறது. குறிப்பாக சர்க்கரைநோய் பாதிப்புள்ளவர்களுக்கு இன்சுலின் பற்றாக்குறை இருக்கும் என்பதால், தேங்காய் எண்ணெய் பயனளிக்கும் என்பது மேரி நியூபோர்ட்டின் நம்பிக்கை. அல்சைமர் மட்டுமல்ல... டிமென்ஷியா (Dementia), பார்க்கின்சன்  (Parkinson) போன்ற வயதானவர்களுக்கு வரக்கூடிய ஞாபக மறதிநோய்களை குணமாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக, 'Alzheimer's Disease, what If There was a Cure? The Story of Ketones’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மேரி நியூபோர்ட். மேலும் <https://coconutketones.com> உள்ளிட்ட சில வலைதளங்களிலும் இது பற்றியக் கட்டுரைகளும், அவர் பேசிய வீடியோ பேட்டியும் இடம்பெற்றிருக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களைச் சிதைத்து, ஞாபகசக்தியைக் குறைத்து, தன்னைப் பற்றிய நினைவுகளையே மறக்கவைத்துவிடும் இந்த நோய், வயதானவர்களையே அதிகம் பாதிக்கும்; இருந்தாலும், அனைத்து வயதினருக்கும் வரக்கூடியது. இந்த நோயைக் குணப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில மருந்துகளால் இதன் தீவிரத்தைச் சற்று குறைக்க மட்டுமே முடியும். இதுதான் இன்றைக்கும் தொடரும் நிலை. உலகம் முழுக்க சுமார் 4 கோடியே 70 லட்சம் பேரை பாதித்திருக்கும் நோய் அல்சைமர். அமெரிக்காவில் மட்டும் இதன் பாதிப்பு 54 லட்சம் பேருக்கு இருக்கிறது. இந்த நிலையில்தான் இப்படி ஒரு கட்டுரை, செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

"உண்மையில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயை தேங்காய் எண்ணெயால் குணப்படுத்த முடியுமா?’’ - மூத்த நரம்பியல் மருத்துவர் குணசேகரிடம் கேட்டோம்...

"அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. பழகிய முகங்களையேகூட மறந்துவிடுவார்கள். பிறரின் உதவியில்லாமல் அவர்களால் செயல்படவே முடியாது. குறிப்பிட்ட சில ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றம்தான் இந்த

நோய்க்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அடிக்கடி தலையில் அடிபடுதல், கடும் மன அழுத்தம், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் ஏற்படலாம். 

ஒருவருக்கு, பிறக்கும்போது இருக்கும் நியூரான்களின் (Neurons) எண்ணிக்கை, வயதாக ஆக படிப்படியாக குறைந்துகொண்டே வரும். இப்படி நியூரான்கள் குறைவதால், ஞாபக மறதி ஏற்படுவது இயல்பே. அதுவே நியூரான்களின் அழிவு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோயாக மாறும். இழந்த நியூரான்களை மீண்டும் புதிப்பிக்கவோ, உருவாக்கவோ எந்த மருந்தும் இதுவரை கண்டறியப்படவில்லை. நிலைமை இப்படி இருக்க, வெறும் தேங்காய் எண்ணெய் மூலம் அல்சைமர் நோயைக் குணமாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். 

அந்தக் கட்டுரையிலும் நம்பகத்தன்மை இல்லை. அல்சைமரை உறுதிசெய்ய போதுமான பரிசோதனைகள் செய்யப்படவில்லை. அவருக்கு அல்சைமர் பாதிப்பு இருந்ததை அந்த மருத்துவர் எப்படி உறுதி செய்தார்; அவர் கொடுத்த தேங்காய் எண்ணெய் மூலம் அல்சைமர்  குணமானது எப்படி... என்பது குறித்த வார்த்தை விளக்கங்களே இருக்கின்றன. அவற்றையே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். வேறு எந்த 'கிளினிக்கல் ட்ரையல்கள்' செய்ததற்கான சான்றுகளே இல்லை. ஒருவேளை இது குணமாக்கும் என்றால் எஃப்.டி.ஏ (FDA) என்னும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். எனவே, இதை நம்பத் தேவையில்லை. முறையான ஆராய்ச்சி முடிவுகள் வெளியான பின்னர் வேண்டுமானால் இதைப் பரிசீலிக்கலாம்’’ என்கிறார் குணசேகரன்.

உஷார் மக்களே!

அடுத்த கட்டுரைக்கு