Published:Updated:

`வடிவேலு மாதிரி காமெடி பண்ண செரிபிரல் பால்ஸி தடையில்லை!’ - ஒரு ரோல்மாடல் மனிதர்! #CerebralPalsy

`வடிவேலு மாதிரி காமெடி பண்ண செரிபிரல் பால்ஸி தடையில்லை!’ - ஒரு ரோல்மாடல் மனிதர்! #CerebralPalsy
`வடிவேலு மாதிரி காமெடி பண்ண செரிபிரல் பால்ஸி தடையில்லை!’ - ஒரு ரோல்மாடல் மனிதர்! #CerebralPalsy

ம்ம ஊரு ரியாலிட்டி ஷோ மாதிரிதான் ‘பிரிட்டன்'ஸ் காட் டேலன்ட்’ (Britain's Got Talent) டி.வி ஷோ! வயசு வித்தியாசமெல்லாம் இல்லாம யாரு வேணும்னாலும் கலந்துக்கலாம். வித்தியாசமா ஏதாவது செய்யணும்னுதான் ஷோவுல ஜட்ஜஸ் எதிர்பார்ப்பாங்க. இந்த ஷோவுக்காகவே ஒரு பெரிய டேலன்ட் லிஸ்ட் வைச்சிருக்காங்க. பாட்டு, டான்ஸ், மேஜிக், ஜிம்னாஸ்டிக், ஸ்டாண்ட் அப் காமெடினு எது வேணா செய்யலாம்.

இந்த ஷோவுக்கு சைமன், அமண்டா, அலிஷா, டேவிட் ஆகிய நாலு பேருதான் முக்கியமான ஜட்ஜஸ்.  இவங்க அடிக்கிற லூட்டியைப் பார்க்கிறதுக்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கு. அதுலயும் டேவிட்டும் சைமனும் எலியும் பூனையும் மாதிரி. ரெண்டு பேருக்கும் மத்தியில அழகுப் பதுமைகளாட்டம் நம்ம அமண்டாவும் அலிஷாவும் ஸ்டைலா உட்கார்ந்திருப்பாங்க. ரெண்டு பேரும் பார்க்கிறதுக்கே அவ்வளவு அழகா இருப்பாங்க. இந்த ஷோவுல கலந்துக்கிறவங்களையும் ஆடியன்ஸையும் உற்சாகம் குறையாமப் பார்த்துப்பாங்க. இந்த ஷோ, வேர்ல்டு முழுக்க ரொம்ப பாப்புலரா இருக்கு. அதனாலதான், அதே மாதிரியான ரியாலிட்டி ஷோக்களை நம்ம ஊர் டி.வி-லயும் காட்டுறாங்க. இந்த ‘பிரிட்டன்’ஸ் காட் டேலன்ட்’ ஷோ எல்லா நாட்டுலயும் நடக்குது. நம்ம நாட்டுல ‘இந்தியா காட் டேலன்ட்’ அப்படிங்கிற பேர்ல நடத்தினாங்க. இந்த ஷோவை நீங்க மிஸ் பண்ணியிருந்தா, இப்போ யூடியூப்ல பார்க்கலாம். 

இந்த `பிரிட்டன்’ஸ் காட் டேலன்ட்’ ஷோவுல ஒருத்தர் வின் பண்ணியிருக்காரு. அவரை இப்போ உலகமே கொண்டாடிக்கிட்டு இருக்கு. இப்போ ட்ரெண்டிங்ல அவரு பேருதான்! பல பேரு தங்களோட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல அவரோட படத்தை வெச்சிருக்காங்க. யூத்துங்க மத்தியில ரொம்ப பாப்புலர் ஹீரோவா அவரு ஆகிட்டாரு.  

அவர் பேரு... லீ ரைட்லி (Lee Ridley). வயசு 37. நீயுகேஸ்ட்டில்ல (Newcastle) இருக்காரு. சின்ன வயசுலயே அவருக்கு ‘செரிபிரல் பால்ஸி’-னு (Cerebral palsy) ரொம்ப மோசமான நோய் வந்துடுச்சு. இதைத் தமிழ்ல ‘பெருமூளைவாதம்’னும், `முதுகுத்தண்டு வியாதி’னும் சொல்றாங்க. இந்த நோயால லீ, தன்னோட பேச்சுத்திறனை இழந்துட்டாரு. அதோட, பக்கவாதத்தாலயும் பாதிக்கப்பட்டிருந்தாரு.

‘செரிபிரல் பால்ஸி’ இளம் சிசுவாக இருக்கும்போதே மூளையைப் பாதிச்சிடும். இதனால, பலவகை உடலியக்கக் குறைபாடுகள் ஏற்படும். பெருமூளையிலயும் பாதிப்பு வரும். இந்த நோயால பாதிக்கப்பட்டவங்களால நிக்கவோ, நடக்கவோ முடியாது. சிலருக்கு முடக்குவாதமும் ஏற்படும். செரிபிரல் பால்ஸியில ரெண்டு சதவிகிதம் மரபணுக்குறைபாட்டினாலதான் வருது’னு டாக்டருங்க சொல்றாங்க. இது தொற்றுநோய் கிடையாது. இந்த நோயால பாதிக்கப்பட்டவங்களுக்குப் படிக்கிறதுல தடங்கல்கள் வரும். மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற சிக்கல்களும் எழலாம். இந்த நோயைப் பத்தி 1860-ம் ஆண்டுதான் தெரிஞ்சுது. ஆங்கில அறுவைசிகிச்சை மருத்துவர் வில்லியம் லிட்டில்தான் இதை முதன்முதலா கண்டுபுடிச்சாரு. இந்த செரிபிரல் பால்ஸிதான் நம்ம ஹீரோ லீயை தாக்கியிருக்கு! 

லீ-யால பேச முடியாது. அதுக்காக அவர் சோர்ந்து போகலை. `லைட்ரைட்டர்’-ங்கிற  (Lightwriter)கருவியின் உதவியோட பேச ஆரம்பிச்சாரு. இந்தக் கருவியில நீங்க நினைக்கிறதை டைப் செஞ்சா, அது பேசும். அப்படித்தான் லீ தன்னோட ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்கூடப் பேசுவாரு. 

நம்ம லீ உடனடியா இந்த உயரத்துக்கு வந்துடலை, ஏகப்பட்ட கிண்டல்களையும் கேலிகளையும் தாண்டித்தான் வந்திருக்காரு. `என்ன செஞ்சா நம்ம வாழ்கை மாறும்?’னு படுத்துக்கிட்டே விட்டத்தை அண்ணார்ந்து பார்த்து யோசிச்சிருக்காரு. அப்போதான் அவரு மைண்டுக்குள்ளே பளிச்னு பல்பு எரிஞ்சிருக்கு.

லீ-க்கு காமெடி சென்ஸ் ஜாஸ்தி. எப்பவும் ஜோக்கும் சிரிப்புமா இருக்கிறவரு. அவரு சொல்ற ஜோக்கையெல்லாம் கேட்டுட்டு, நண்பர்கள் தங்களோட பிரச்னைகளையெல்லாம் மறந்து சிரிச்சிருக்காங்க. அப்படித்தான் ஒருநாள் லீ ஜோக் அடிக்கும்போது, வயிறு குலுங்கச் சிரிச்ச ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தர் `ஃப்யூச்சர்ல நீ பெரிய காமெடியனா வருவே லீ...’னு சொல்லியிருக்காரு. அந்த வார்த்தை, லீ மனசுக்குள்ள ஆழமாப் பதிஞ்சிடுச்சு. தன்னோட திறமையை இந்த உலகத்துக்குக் காட்டணும்னு லீ  முடிவெடுத்தாரு. அப்படி, 2012-ம் ஆண்டு ரோஸ் நோபல்-ங்கிற இன்னோரு காமெடியன்கூட சேர்ந்து லீ பண்ணின ஷோ, பெரிய ஹிட். அவரோட வெற்றிப் பயணம் அப்போ ஆரம்பிச்சதுதான்!

2013-ம் ஆண்டு லீயை நிமோனியா நோய் தாக்கிச்சு. கொஞ்ச நாள் ஓய்வெடுத்தாரு. பிறகு, ரஜினி ஸ்டைல்ல `திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’னு, 2014-ம் ஆண்டு பிபிசி சேனலோட புது காமெடியன் அவார்டை வாங்கினாரு. 2015-ம் வருஷத்துல நாம சரியான பாதையிலதான் போறோம்னு தெரிஞ்சுகிட்டு, காமெடியைத் தன்னோட வாழ்க்கைக்கான அஸ்திவாரமா மாத்திக்கிட்டாரு. பிறகு, முழு நேர காமெடியனா ஆகிட்டாரு. அதுக்கு முன்னாடி அவரு பிபிசி சேனலுக்கும், பிரிட்டன்ல இருக்குற லோக்கஸ் நியூஸ் பேப்பரோட ஆன்லைனுக்கும் நிறைய கன்டென்ட் எழுதினாரு.  

சிரிப்புக்கு இடையில ‘செரிபிரல் பால்ஸி’ நோய் பத்தியும், அந்த நோய் பாதிச்சவங்களோட பேசினாலோ, பழகினாலோ ஆபத்தில்லைன்னும் ஆடியன்ஸுக்கு புரியவெச்சாரு. `நானும் உங்களை மாதிரி மனுஷன்தான்’னு ஜோக்காவே சொல்லி மக்களோட மனசுல இடம்பிடிச்சாரு.

லீ-யால நிலையா நிக்க முடியாட்டாலும் தன்னோட திறமையால ரசிகர்கள் மனசுல ஸ்ட்ராங்கா நின்னுட்டாரு. 

ஸ்பீச் சிந்தசைஸர் (Speach synthesizer- இது டேப்லெட்டில் டைப் செய்தால், அதைப் பேச்சாக மாற்றித்தரும் மென்பொருள்) மூலமாக லீ பேசினாலும், அவர் மூச்சுக்கு மூச்சு அடிக்கிற கவுன்ட்டரும் காமெடியும் `ஓஹோ’ ரகம். `இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா?’னு நம்மை சிந்திக்கவைக்கிற திறமை இவர்கிட்ட உண்டு. (இவரு இங்கிலாந்து வடிவேலு பாஸ்... வெச்சி செய்றாப்ல! ) பொதுவா நாம ஜோக் சொல்லும்போது குரல்ல ஏற்ற இறக்கத்தோடயும் உடல்மொழி மூலமாகவும் சொல்வோம். அதைக் கேக்கிறவங்களுக்கு உடனே நம்ம ஜோக் போய் சேர்ந்திடும். ஆனா, வாய்ஸ் சிந்தசைஸர்ல உயிரே இல்லாத, ஏற்ற இறக்கம் இல்லாத குரல்தான் வரும். லீ-யால உடல்மொழியாலும் எதையும் வெளிப்படுத்த முடியாது.

ஆனாலும், ஒவ்வொரு ஜோக்குக்கும் அவரு குடுக்குற சின்னச்சின்ன முகபாவம், எப்பவும் அவரு முகத்துல ஒட்டியிருக்கிற அந்தச் சிரிப்பு, அதுதான் அவர் தன்னை நிலைநிறுத்த உதவியிருக்கு. லீ ஒவ்வொரு முறை மேடை ஏறும்போதும் அரங்கமே கைதட்டல்களால் நிரம்பி வழியும். அவரு ஷோவை முடிக்கும்போது ஜட்ஜஸ் நேரா பாராட்டை மட்டும்தான் சொல்வாங்க... ஸ்டாண்டிங் ஒவேஷன் குடுத்து.

‘பிரிட்டன்’ஸ் காட் டேலன்ட்’ ஷோவுல பங்கேற்ற பல ஆயிரம் போட்டியாளர்களோட, அவங்களுக்கு சமமா லீ போட்டியிட்டு, மக்களால ஓட்டு அளிக்கப்பட்டு, பிரிட்டனோட டாப் 40 செமிஃபைனலிஸ்ட்களைக் கடந்தார். பிறகு, முதல் மூன்று இடத்துக்கு முன்னேறி, முதல் இடத்தையும் பிடிச்சுட்டாரு. அவர் வின் பண்ணிய தொகை எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்புக்கு ரெண்டு கோடியே இருப்பதி மூணு லட்ச ரூபாய். அதுமட்டுமில்லாம, இங்கிலாந்து ராஜகுடும்பத்தினருக்கு முன்னால தன்னோட திறமையைக் காட்டும் வாய்ப்பும் லீ-க்கு கிடைச்சிருக்கு.

செரிபிரல் பால்ஸியால பாதிக்கப்பட்ட பல ஆயிரம் பேரு, உலகம் முழுக்க இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் லீ ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம். `நமக்குள்ள இருக்குற திறமையைக் கண்டுபுடிச்சிட்டா போதும்... உச்சியை அடைய கொஞ்ச தூரம்தான்’னு சொல்லுது லீ ரைட்லியோட இந்த மாபெரும் வெற்றி.

படக்குனு மொபைலை எடுத்து, பழைய ‘பிரிட்டன்’ஸ் காட் டேலன்ட்’ எபிசோடெல்லாம் பார்க்க ஆரம்பிங்க மக்களே... அப்போதான் லீ யாருன்னு உங்களுக்குப் புரியும். உடனே பார்க்கிறதுக்கு ‘தி லாஸ்ட் வாய்ஸ் கை’-னு (THE LOST VOICE GUY) தேடுங்க. பிறகு, நீங்களும் உங்க ஸ்டேட்டஸை `லீ’-னு மாத்திடுவீங்க!