Published:Updated:

ஜப்பானின் மோனோசோடியம் குளுட்டாமேட் உண்மையிலே சுவை கூட்டுமா? #MSG

ஜப்பானின் மோனோசோடியம் குளுட்டாமேட் உண்மையிலே சுவை கூட்டுமா? #MSG
ஜப்பானின் மோனோசோடியம் குளுட்டாமேட் உண்மையிலே சுவை கூட்டுமா? #MSG

ஜப்பான். எப்போதும் உணவுக்கும் அதன் சுவைக்கும் பெயர் போன நாடு. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஞ்ஞானியும், பேராசிரியருமான கிக்குனே இக்கிடா என்பவர் ஒரு புது சுவையையே கண்டுபிடித்தார். அதுவரை ஜப்பான்வாசிகள் 4 விதமான சுவைகளையே தெரிந்து வைத்திருந்தனர். இக்கிடா கண்டறிந்த சுவைக்கு ‘உமாமி’ எனப் பெயரிட்டார். இந்தச் சுவை ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. கிட்டத்தட்ட நம்ம ஊர் தக்காளியின் சுவைக்கு அருகிலிருக்கும் உமாமி எனச் சொல்லலாம். இந்தச் சுவையைக் கொண்டுவர என்ன தேவை என்பதையும் இக்கிடா கண்டறிந்தார். அதற்குத் தேவை, மோனோ சோடியம் குளுட்டாமேட். சுருக்கமாக  MSG

இந்த  MSG-யை எங்கேயோ பார்த்த மாதிரியோ கேட்ட மாதிரியோ இருக்கிறதா? ஆம். அஜினமோட்டோ (சிவப்பு கிண்ணமேதான்) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் விஷயம்தான் இந்த  MSG. நீங்கள் வனஸ்பதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வனஸ்பதி என்பது பொருளின் பெயர். டால்டா என்பது பிராண்டின் பெயர். ஆனால் எல்லா பிராண்டு வனஸ்பதியையும் நாம் டால்டா என்றே சொல்கிறோம். ஃபோட்டோகாப்பி -ஜெராக்ஸ் போல இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த அஜினமோட்டோ -  MSG. அஜினமோட்டோ என்பது பிராண்டின் பெயர். MSG (மோனோ சோடியம் குளுட்டாமேட்) என்பது பொருளின் பெயர்.


இந்தக் குழப்பத்தால் அஜினமோட்டோ என்றாலே தீயவை என ஒரு பேச்சும் நம் ஊரில் நீண்ட நாள்களாக உண்டு. இதில் என்ன பிரச்னை, அஜினமோட்டோ உடலுக்குத் தீங்கானதா என அஜினமோட்டோவைச் சேர்ந்த கோவிந்த் என்றவரிடமே கேட்டோம். அஜினமோட்டோ இந்தியப் பிரிவின் மார்க்கெட்டிங் ஹெட் ஆன கோவிந்த் விளக்கமாகவே பதில் சொன்னார். 


“MSG தயாரிப்பில் சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்கெடுக்கின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 90%  MSG சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன. அவர்கள் பயன்படுத்தும் மூலப்பொருள்களில் இருக்கும் பிரச்னைதான்  MSG என்றாலே ஆபத்தானது என்ற கருத்து பரவக் காரணம். உலகில் எந்த நாட்டிலும்  MSG தடை செய்யப்படவில்லை. இந்தியாவிலிருக்கும் அனைத்து உணவுப் பாதுகாப்பு அமைப்பிலும் அஜினமோட்டோ அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.  MSG தயாரிக்கத் தேவை ஸ்டார்ச் தான். அதைக் கரும்பு அல்லது மக்காச் சோளம் அல்லது மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றிலிருந்து எடுக்கிறோம். மூலப்பொருள் முதல் அஜினமேட்டோ வெள்ளை நிறத்துக்கு மாறுவது வரை அனைத்துமே இயற்கையான முறையில்தான் செய்கிறோம். இதில் பாதுகாப்பற்ற பொருள் என எதுவுமே இல்லை.” என்றார்.

2010-ம் ஆண்டில் இந்தியாவில்  MSGக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின் நடத்தப்பட்ட பல சோதனைகளிலும் அஜினமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் MSGல் எந்தப் பிரச்னையும் இல்லையெனச் சான்றிதழ் வாங்கியிருக்கின்றன. எனவே இப்போது மீண்டும் இந்தியச் சந்தையில்  MSG-ஐ பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அஜினமோட்டோ. இப்போதைக்கு தாய்லாந்தில் தயாரித்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்துவருகிறார்கள். விரைவில் சென்னையிலே MSG தயாரிப்பையும் தொடங்கவிருக்கிறது அஜினமோட்டோ.

உண்மையில் நம்ம ஊர் சமையலுக்கும்  MSG தேவையா என ஹோட்டலில் வேலை செய்பவர் ஒருவரிடம் கேட்டோம். “நம்ம ஊர்ல  MSG பயன்படுத்தாத பிரியாணி கடை ரொம்ப ரொம்ப கம்மிங்க. அது டேஸ்ட் கொடுக்குன்றது உண்மைதான். ஆனா எவ்ளோ சாப்பிடலாம்னு தெரியல” என்றார்.

கோவிந்திடம் இதைக் கேட்டபோது “அளவு அதிகமானால் சுவை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டே தவிர உடல்நலனுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. இருந்திருந்தால் உணவு அமைப்புகள் அதையும் குறிப்பிட்டிருப்பார்கள்” என்றார்.

MSGயோ அல்லது வேறு பொருளோ.. சரியான தர முத்திரையும் இந்திய உணவுப் பாதுகாப்பு கழகத்தின் அங்கீகாரமும் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து வாங்க வேண்டியது அவசியம்.