Published:Updated:

எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்

எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்

எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்

எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்

குழந்தைகள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். களைப்பாகும் வரை விளையாடுவார்கள், கலகலவெனப் பேசுவார்கள், திடீரென அமைதியாகிவிடுவார்கள், சட்டென பூரிப்படைவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட குணம் என்று ஒன்றிருக்கும். ‘எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டே இருக்கான்’, ‘ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடிட்டு இருந்தாதான் அவனுக்கு சந்தோஷம்’ என்று,  அது பெரும்பாலும் அவர்களின் பெற்றோரால் புகார் சொல்லப்படுவதாக இருக்கும்.

குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கே!

டைப் 1 குழந்தைகள்: “நான்தான் எப்பவும் பெஸ்ட்!”

சில குழந்தைகள் எல்லா இடங்களிலும் தாங்கள்தான் முதலாவதாக, முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தன்னுடைய இலக்கு இதுதான் என முடிவு செய்து, அதில் ஜெயிப்பதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து செய்துகொண்டிருப்பார்கள். அதிகம் யோசிப்பார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் வெளியே பேசாத, யாரிடமும் பகிராதவர்களாக இருப்பார்கள். அதுவே, அவர்களின் பெற்றோர் வருந்துவதற்கான காரணமாக இருக்கும்.

எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எப்படி அணுக வேண்டும்?

இவர்களைப் பற்றி வருந்த எதுவுமில்லை. தங்களின் இலக்கைத் துரத்தும் வேகத்தில் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் துண்டித்திருப்பார்கள். ஆனால், நாம் வலியச்சென்று பேசும்போது நிச்சயம் காது கொடுப்பார்கள். அப்படிப் பேசும்போது ‘முதல் மதிப்பெண், முதல் பரிசு இதெல்லாம் மட்டும் வெற்றியல்ல. மற்றவர்களுக்கு உதவுவதும், விட்டுக்கொடுப்பதும் முக்கியம். தோல்வி தரும் அனுபவங்களும் பாடங்களே’ என்று வலியுறுத்தலாம்.

டைப் 2 குழந்தைகள்: ‘‘எல்லாத்தையும் என் ஃப்ரெண்ட்ஸுக்குக் கொடுத்துடுவேன்!”

பொம்மை, பேனா, பென்சில், சாப்பாடு என எதுவாக இருந்தாலும் கொடுக்க யோசிக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் தங்கள் பிள்ளையின் உதவும் மனப்பான்மையை நினைத்து மகிழும் பெற்றோருக்கு, போகப்போக இது கோபத்தைத் தரும்.

எப்படி அணுக வேண்டும்?

பெரும்பாலும் தான் பயன்படுத்தாத பொருட்களையே இவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க நினைப்பார்கள். எனவே, அவர்களின் பொருட்கள் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கலாம். பொருளை கொடுப்பதைவிட, ‘ஷேரிங்’ பண்பு, அவசரத்துக்கு உதவுவது போன்றவற்றை வலியுறுத்தலாம்.

டைப் 3 குழந்தைகள்: ‘‘எல்லாம் சரியா இருக்கணும்!”

சில குழந்தைகள் நேர்த்தியை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். புத்தகம், பொம்மை என தனது பொருட்களை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது தொடங்கி, தனது தட்டு தூய்மையாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்பதுவரை, அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் 100 சதவிகிதம் பெர்ஃபெக்‌ஷனை எதிர்பார்ப்பார்கள். ‘நல்ல விஷயம்தான். ஆனா, அதிலேயே அதிக நேரத்தை விரையமாக்குறா’ என்பது பெற்றோரின் புகாராக இருக்கும்.

எப்படி அணுக வேண்டும்?

இவர்களுக்கு ஸ்மார்ட் வொர்க்கை கற்றுக்கொடுக்க வேண்டும். ஹோம்வொர்க் செய்ய வேண்டிய நேரத்தில் தனது புத்தக அலமாரியை அடுக்கிக்கொண்டிருக்க்கூடாது என சொல்லுங்கள். ‘அதிகம் பயன்படுத்துகிற பொருட்களை முன்னாடியும் பயன்படுத்தாத பொருட்களை பின்னாடியும் வைத்தால், எடுக்கச் சுலபமாக இருக்கும், அடிக்கடி கலைந்துபோகின்ற பிரச்னையும் இருக்காது’ என ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களைப் பழக்கலாம். இதன் மூலம் தங்களின் நேரத்தைச் சேமிக்க வைக்கலாம்.

டைப் 4 குழந்தைகள்: “நான் நல்லா கதை சொல்வேனே!”

பள்ளியில் இருந்து வந்தவுடன், குழந்தை தன் பெற்றோரிடம் அன்றைய தின நிகழ்வுகளை ஒப்பிக்கும். பின்னர் பக்கத்து வீட்டுக்காரரிடமும் அதையே மீண்டும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, ஆர்வம் குறையாமல் சொல்லும். அம்மாவுக்கோ, ‘எத்தனை தடவை சொல்லுவ?’ என்று அலுப்பாகும். இதேபோல், குழந்தைகள் அனைத்தையும் கதையாகச் சொல்லியபடியே இருக்கும். இவ்வகை குழந்தைகள் கற்பனைத்திறன் மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்கிறது ஆய்வு.

எப்படி அணுக வேண்டும்?!

இந்தக் குழந்தைகள் கோர்வையாகப் பேசும்போதும், கதை சொல்லும்போதும் பிறர் அதைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி பாராட்டு கிடைத்துவிட்டால், இவர்கள்தான் உலகின் ஹேப்பி சுட்டீஸ். வரலாறு, புராண கதைகள், நீதி கதைகள் போன்றவற்றை சொல்லிக் கொடுத்தும் கதை சொல்லும் பழக்கத்தை வளர்க்கலாம்.

எங்கள் வழி... தனி வழி... சுட்டீஸ் உலகம்

டைப் 5 குழந்தைகள்: “இதுதான் என் ஏரியா ஆஃப் இன்ட்ரஸ்ட்!”

நாம் அதிமேதாவிகளாகக் கொண்டாடும் பலர் இந்த குணம் கொண்டவர்களே. ஓவியம், மியூசிக், டான்ஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ் என... ‘இதுதான் எனக்குப் பிடித்த துறை’ என்று ஒன்றை நிர்ணயித்து, தங்களின் ஆர்வம், கற்றல், கவனம் அனைத்தையும் அதில் மெருகேற்றியபடி இருப்பார்கள். அதிகம் பேச மாட்டார்கள், பேசாமலும் இருக்க மாட்டார்கள். தனக்கு ஆர்வமுள்ள துறை பற்றி ஒருவர் பேசினால், சட்டென உற்சாகமாகி அவருடன் பேச ஆரம்பிப்பார்கள்.

எப்படி அணுக வேண்டும்?


‘எப்பப்பாரு பேட்டரி, ரிமோட்னு எதையாச்சும் கழட்டி மாட்டிட்டு இருக்கான்’ என்று அவர்களைக் கடிந்துகொள்ளாமல், அவர்கள் வழியிலேயே விட்டு, புத்தகம், பொருட்கள், நல்ல வழிகாட்டி என அவர்கள் தேடலுக்குத் தீனியாகும் விஷயங்களை செய்து தருவது சிறப்பு.

டைப் 6 குழந்தைகள்: “அது ஏன், ஏதற்கு, எப்படி?”


எந்த விஷயத்திலும் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விப்பெட்டகங்கள் இந்த ரகக் குழந்தைகள். நிறைய கேள்விகள் கேட்கும் குழந்தைகள் அறிவாளியாக இருப்பார்கள் என்ற பொதுக்கருத்தால் பெற்றோர் ஆரம்பத்தில் அது குறித்து மகிழ்ந்தாலும், காலப்போக்கில், ‘அய்யோ இவன் ஏன்தான் இவ்வளவு கேள்வி கேட்கிறானோ’ என்று நொந்துபோவார்கள். 

எப்படி அணுக வேண்டும்?


உதாரணமாக, காரில் செல்லும்போது, ‘கார் ஆக்ஸிடன்ட் ஆனா என்னாகும்? நாமெல்லாம் இறந்துடுவோமா?’ என்கிற மாதிரியான கேள்விகள், சந்தேகங்கள், பாதுகாப்பின்மை அவர்களுக்குள் ஊறிக்கொண்டிருக்கும். அப்போது கோபம் கொள்ளாமல், ‘நாம் சாலை விதிகளை எல்லாம் மதித்து, பத்திரமாகதான் கார் ஓட்டுகிறோம். நமக்கு எதுவும் ஆகாது’ என்று சொல்வதுடன், வீடு சென்று சேர்ந்தவுடன், ‘பாதுகாப்பா வந்துட்டோம் பார்த்தியா?’ என்று அறிவுறுத்த வேண்டும். எப்போதும் எந்த விஷயத்திலும் பாசிட்டிவாக அணுகுவது எப்படி என்பதை பெற்றோர் கற்றுத்தரலாம்.

டைப் 7 குழந்தைகள்: “நான் குட்டி லீடர்!”

‘இந்த வயசுலயே எவ்வளவு பொறுப்பா இருக்கா?’ என்று சொல்லவைப்பார்கள் சில குழந்தைகள். திடமான மனதோடு முடிவெடுப்பது, சுற்றி இருப்பவர்களை வழிநடத்திச் செல்வது, ஏதாவது சிக்கல் என்றால் சமயோசிதமாகச் சமாளிப்பது என்றிருக்கும் இவர்கள், லீடிங் மாஸ்டர்ஸ். ஆனால், ‘இவன் எல்லாரோட பிரச்னையையும் தன் தலையில் போட்டுக்கிறான்’ என்று வருந்துவார்கள் அவர்களது பெற்றோர்கள்.

எப்படி அணுக வேண்டும்?


பெற்றோர் இவர்களுக்கு அறம், வாழ்வின் மதிப்பீடுகள், பெரியோர்களின் சிறப்பியல்புகள் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தால், தலைவர்கள் ஆகும் வல்லமை பெறுவார்கள்.

டைப் 8 குழந்தைகள்: “கூட்டத்தோடு இருந்தாதான் சந்தோஷம்!”

சில குழந்தைகள் எப்போதும் நண்பர்களுடனே இருப்பார்கள். அவர்கள் இருந்தால்தான் இவர்கள் முகத்தில் சந்தோஷத்தையே பார்க்க முடியும். பெரும்பாலும் இவ்வகை குழந்தைகள் படிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

எப்படி அணுக வேண்டும்?

திருத்துவதாக நினைத்து, இவர்களைப் பெற்றோர் அவர்களின் குழுவில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. அது அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும். ட்யூஷன், குரூப் ஸ்டடி, குழுவாக சேர்ந்து தோட்டம் அமைப்பது போன்ற குழு செயல்பாடுகளின் மூலம் அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்.

டைப் 9 குழந்தைகள்: “நான் ஒரு குட்டி நாட்டாமை!”


சில குழந்தைகள் மிகுந்த பக்குவத்துடன் இருப்பார்கள். குழந்தைகளுக்குள் சண்டை என்றால், நடுநிலைமையோடு பேசுவார்கள். தவறு தன்னுடையதாக இருந்தாலும் அதை தயக்கமின்றி ஒப்புக்கொள்வார்கள். கோபம், ஏக்கத்தை எல்லாம் நடவடிக்கைகள் மூலம் அல்லாது, வார்த்தைகள் மூலம் சரியாக வெளிப்படுத்துவார்கள். தூக்கத்தை கோபத்துக்கு வடிகாலாகவும் சாப்பிடுவதை ஏக்கத்துக்கு வடிகாலாகவும் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் ‘வாழு, வாழவிடு’ என்றிருப்பார்கள்.

எப்படி அணுக வேண்டும்?

எந்தச் சார்பும் இல்லாமல் உள்ளது உள்ளபடி பேசுவதால், நட்பு வட்டாரத்தில் சிலர் இவர்களிடம் இருந்து சற்று விலகியிருப்பார்கள்.  விளைவாக இவர்கள் தனிமையின் கைகளுக்குள் சென்றுவிடாமல், பெற்றோர்கள் எப்போதும் இவர்களுடன் நெருக்கமாகவும், அவர்களுக்கு மனத்தளவில் ஆதரவாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

சில குழந்தைகள் இரண்டு, மூன்று குணாதிசயங்களுடன் பொருந்திப்போவார்கள். அது இயல்பான விஷயம்தான். குழந்தைகளைப் புரிந்துகொண்டு, பெற்றோர்கள் அவர்களின் மனப்போக்குடன் சேர்ந்து பயணிக்கும்போது, அவர்கள் உலகம் ஆரோக்கியமாகும்!’’

- ஜெ.நிவேதா  படங்கள்: சி.சுரேஷ்பாபு