Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெச்.சிராஜ், மதுரை

``எனக்கு 19 வயது ஆகிறது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். என் தந்தைக்கும் சகோதரனுக்கும் தாடி நன்கு வளர்கிறது. எனக்கு இன்னும் சரியாக முளைக்கவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்களில் எனக்கு மட்டும் முகத்தில் ரோம வளர்ச்சி தாமதப்படுவது ஏன்?’’

டாக்டர் சற்குணன், சருமநோய் நிபுணர், கிருஷ்ணகிரி.

கன்சல்ட்டிங் ரூம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``பதின்பருவத்தில்தான் இருக்கின்றீர்கள். இந்த வயதில், `தாடி வளராமல் இருக்கிறதே...’ என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அடர்த்தியான மீசை, தாடி இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அது ஒவ்வொருவருடைய ஹார்மோன் சுரக்கும் அளவைப் பொறுத்த விஷயம். உங்கள் தந்தைக்கு, உங்கள் வயதில் தாடி முளைக்கத் தொடங்கி இருந்தால், உங்களுக்கும் வளர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தாமதம் இருக்கலாம். இன்னும் ஓராண்டு காத்திருங்கள். அதன்பிறகும், தாடி வளர்வது தாமதமாகிறது என்றால், சரும நோய்  நிபுணரிடம் ஆலோசனை பெறலாம். இரண்டாம் நிலை பாலின மாற்றங்கள் (Secondary Sexual Characters) சரியாக உள்ளதா என்பதை நாளமில்லாச் சுரப்பி நிபுணரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஹார்மோன் குறைபாடு காரணமாக முகத்தில் ரோம வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்டிருந்தால், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் ஊசிகள், மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.”

தாமோதரன், திருநெல்வேலி

``எனக்கு வயது 48. ஏப்பம் விடும்போது, அதிகச் சத்தம் ஏற்படுகிறது. இது பணிபுரியும் இடத்தில் சில நேரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏன் இப்படிப் பெரும் சத்தத்துடன் ஏப்பம் வருகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?’’

டாக்டர் செந்தில்நாதன்,வயிறு மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர், கோவை.

கன்சல்ட்டிங் ரூம்

``ஏப்பம் என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல். தண்ணீர்/உணவுடன் சேர்த்து நாம் காற்றையும் எடுத்துக்கொள்கிறோம். அது வயிற்றினுள் தங்கி, வெளிவரும்போது ஏப்பமாக வருகிறது. இது, இரண்டு வகைப்படும். சாதாரண ஏப்பம் மற்றும் நோய்கள் காரணமாக ஏற்படுவது அசாதாரண ஏப்பம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் அமைந்திருக்கும் சதைமுடிச்சு திறந்து மூடுவதால் சாதாரண ஏப்பம் உண்டாகிறது. அந்த சதைமுடிச்சு வயதாக ஆக, இளகிவிடுவதால் அடிக்கடி ஏப்பம் வரும். முதலில் உங்களது உணவுப்பழக்கத்தையும், உடல் எடையையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கார்பனேட்டட் பானங்கள் பருகுதல், காலை உணவைத் தவிர்த்தல், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகிய பழக்கங்களால் இந்தச் சதைமுடிச்சில் பாதிப்பு ஏற்படக்கூடும். உங்களுக்கு இந்தப் பழக்கங்கள் இருந்தால், விட்டுவிட வேண்டியது அவசியம். 

குறிப்பிட்ட சில நோய்கள் காரணமாகவும் அசாதாரண ஏப்பம் வர வாய்ப்புள்ளது. அசிடிட்டி, நாள்பட்ட அல்சர், பித்தப்பைக் கற்கள், இதயநோய்கள் இருந்தால் அசாதாரண ஏப்பம் வரலாம். இந்த நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, இந்த நோய்கள் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் வலி உணர்வைக் குறைக்க, தங்களையறியாமல் அதிகக் காற்றை உள்வாங்குகின்றனர். இதனால் அடிக்கடி ஏப்பம் ஏற்படும். அசௌகரியமாகவோ, எரிச்சலுடனோ ஏப்பம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால் நீங்கள் உடனடியாக குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மூலமாக தளர்ந்த சதைமுடிச்சை இறுக்கமாக்கலாம். உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்வதே இந்தப் பிரச்னைக்கு சிறந்த, இயற்கையான தீர்வு. காரசாரமான, எண்ணெய் மற்றும் மசாலா உணவு வகைகளை அடிக்கடிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான பழங்கள்/காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”

தேவி, கடலூர்.

“என் மகளுக்கு 25 வயது. இரண்டு மாதங்களுக்கு முன் அவள் குதிகாலில் வெள்ளையாக மேடுபோல் தோன்றியது. நடக்கும்போது முள் குத்துவதுபோல் வலி ஏற்படுவதாகக் கூறுகிறாள். நடக்க முடியாமல் அவதிப்படுகிறாள். இது எதனால் ஏற்படுகிறது? ஏதேனும் சிகிச்சை உண்டா?”

டாக்டர் ரமேஷ் பாபு, பொது மருத்துவர், கோவை.

கன்சல்ட்டிங் ரூம்

“உங்கள் பெண்ணின் காலில் ஆணி ஏற்பட்டுள்ளது. இது பாதத்தில் ஏற்படும் ஆணி போன்ற நீளமான இறுகிய சதை வளர்ச்சி. அதன் ஒருமுனை குதிகாலில் முடியும். இதன் விளைவாக, குதிகாலின் வெளிப்பகுதி கடினமாக இருக்கும். மற்றொரு முனை, சதையின் உட்பகுதியைத் துளைத்து வளர்ந்துகொண்டே செல்லும். நிற்கும்போதும் நடக்கும்போதும் குதிகாலில் அழுத்தம் அதிகரிப்பதால், வலி ஏற்படுகிறது. சில நேரங்களில் சீழ் அல்லது நீர் போன்ற திரவமும் அதிலிருந்து வெளிப்படும். முறையற்ற விதத்தில் கோணல் மாணலாக நடப்பது, ஒரு காலுக்கு மட்டும் அதிக அழுத்தம் கொடுத்து நடப்பது, சரியான அளவில் இல்லாத அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தும் காலணிகளை அணிவது, அதிக நேரம் நிற்பது, கரடுமுரடான பாதைகளில் நடப்பது ஆகிய செயல்களால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். மேலும், ஹைஹீல்ஸ் செருப்பு அணிவதாலும் கால் ஆணி ஏற்பட வாய்ப்புள்ளது. அழுக்கான காலணிகள் அணியும்போதும், அசுத்தமான தண்ணீரில் அதிக நேரம் கால்களை வைத்திருக்கும்போதும் நுண்ணுயிர்த் தொற்றுகளால் கால் ஆணி ஏற்படலாம்.

காலுறை அணியாமல் தோல் காலணி அணிபவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக கால் ஆணி ஏற்படலாம். ஆரம்பகட்டத்தில் சாலிசிலிக் அமிலக் களிம்புகளும் யூரியா அதிகமுள்ள களிம்புகளும் தேய்த்தாலே பாதிக்கப்பட்ட இடம் சரியாகிவிடும். இதனை மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே செய்ய வேண்டும். தீவிரநிலையை அடைந்துவிட்டால், அறுவைசிகிச்சை மூலம்தான் அகற்றவேண்டியிருக்கும்.’’

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.