Published:Updated:

வாழும்வரை போராடு!

வாழும்வரை போராடு!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழும்வரை போராடு!

அசத்தும் ஆனந்த் அர்னால்டு

வாழும்வரை போராடு!

சில சம்பவங்கள் நம்மை நெகிழச் செய்யும், சில உணர்ச்சிவயப்படுத்தும், சில நம்மை உத்வேகம் கொள்ளச் செய்யும், உற்சாகப்படுத்தும். இந்த அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர நமக்குக் கடத்தும் ஒரு நிஜ சம்பவம் இது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா. ஆனந்துக்கு அப்போது, வயது 13. அவரின் அண்ணா ஜிம்முக்கு செல்லும் பழக்கம் கொண்டவர். அவரின் உடல்கட்டைப் பார்த்து ஆர்வம் கொண்டு, ஜிம்மில் சேர்கிறார் ஆனந்த். சேர்ந்த ஒரே வருடத்தில் ஒரு தேர்ந்த பாடி பில்டருக்கான தகுதிகளைப் பெற்றுவிடுகிறார். அதுவரை ஆனந்தாக இருந்தவர், ஆனந்த் அர்னால்டாக மாறுகிறார். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இரண்டு வருடங்கள் வெற்றிகளின் உற்சாகத்தில் கழிகிறது.

ஆனந்த் அர்னால்டுக்கு வயது 15 ஆகிறது. முதுகுப் பகுதியில் லேசாக வலி ஏற்பட்டது. வலியைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஓர் நாள் இரவு, பொறுக்க முடியாத ஒரு மரண வலி அவருக்கு ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியில் ஒரு புற்றுநோய் உருவாகியிருப்பதையும், அது இறுதி நிலையில் இருப்பதையும் உறுதி செய்கின்றனர் டாக்டர்கள். அதிகபட்சம் ஒரு வார காலம் மட்டுமே அவரால் பிழைத்திருக்க முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள்.

“நான் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னதும் என் அம்மா துடித்துப் போனார். என் படுக்கையின் அருகில் என் கைகளை இறுகப் பிடித்தபடியே உட்கார்ந்திருப்பார். கண்ணீர் வறண்டு போகும் அளவிற்கு அழுதார். எனக்கும் அழுகை வந்தது. ஆனால், அதே சமயத்தில் எனக்கு ஒன்றும் ஆகாது என்று எனக்குள் எப்போதும் ஒரு நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்ததே, நான்காவது ஸ்டேஜில்தான். புற்றுநோய் என்னுடைய கீழ் முதுகு எலும்புகளில் பரவத் தொடங்கியிருந்தது. என்னைக் காப்பாற்ற ஒரே வழி, ஆபரேஷன் செய்து, புற்றுநோய் பரவியிருந்த அந்த எலும்புகளை நீக்குவதுதான். ஆனால், அது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று டாக்டர்கள் எச்சரித்தார்கள். என் அப்பா, சித்தப்பா என என் குடும்பத்தில் பலரும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள். இயல்பிலேயே எனக்கு அந்த விளையாட்டுத்திறன் இருந்தது. துணிந்து அறுவைசிகிச்சைக்கு சம்மதித்தேன்... ஆபரேஷன் நடந்தது. உயிர் பிழைத்தேன்” மெல்லிய இடைவெளிவிட்டு மீண்டும் பேசுகிறார்.

“இன்னும் ஞாபகம் இருக்கிறது. கண் விழித்துப் பார்க்கிறேன். அவ்வளவு தெளிவாக எதுவும் தெரியவில்லை. என் அம்மா மட்டும் பக்கத்தில், என் கைகளைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். ஆனால், அவர் கைகளை என்னால் உணர முடியவில்லை. கழுத்திற்குக் கீழ் மொத்தமும் செயலிழந்துப் போயிருந்தது... முதல் சில நாட்கள் ‘ஏன் பிழைத்தோம்’ என்ற எண்ணமே அதிகமிருந்தது... அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.”

வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ஆனந்துக்கு, தான் எப்படியும் ஏதாவது செய்து வாழ்ந்திட முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், தன் கனவான பாடி பில்டிங்கை மீண்டும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. படுக்கையில் கிடக்கும் ஆனந்தை அவரின் நண்பர்கள் தினம் தினம் ஜிம்முக்கு அழைத்துப் போனார்கள். தன்னைச் சுற்றி எல்லோரும் பயிற்சிகள் செய்வது, அவருக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. தன் கைகளில் விளையாடிய டம்பெல்களோடும், வெயிட் லிஃப்ட்டர்களோடும் கண்களாலேயே பேச ஆரம்பித்தார். மூன்றாண்டுகளில், அவரின் சொந்த முயற்சியினால் கழுத்துப் பகுதியிலிருந்து இடுப்புப் பகுதி வரை அவருக்கு செயல்படத் தொடங்கியது. கால்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று வீல் சேரில் உட்கார்ந்தபடியே பாடிபில்டிங் பயிற்சிகளைத் தொடங்கினார்.

வாழும்வரை போராடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“வீல் சேரில் உட்கார்ந்தபடி பாடி பில்டிங் பயிற்சி செய்வது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. மற்றவர்களுக்கு ஒரு போட்டிக்குத் தயாராக சில வாரங்களோ, சில மாதங்களோ போதும். ஆனால், எனக்கோ ஒரு வருடம் தேவைப்படும்” என்று சொல்லும் ஆனந்த் அர்னால்டு  இதுவரை மூன்று முறை பெற்ற ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் உட்பட 40க்கும் அதிகமான டைட்டில்களை வென்றுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பாவில் நடந்த உலகப் போட்டியின் மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று, ‘மிஸ்டர் வேர்ல்டு ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ளார்.

28 வயதான ஆனந்தின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் ஆச்சர்யப்படுத்துபவை. உடலின் மேல் பகுதியை பில்ட் செய்ய, பெஞ்ச் பிரஸ் பயிற்சிகள் முக்கியம். ஆனால், செயலிழந்த கால்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை அவரால் செய்ய முடியவில்லை. தன்னுடலை பெஞ்சோடு சேர்த்து கட்டிக் கொண்டு, அந்த சப்போர்ட்டில் பெஞ்ச் பிரஸ் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்படியாக, அவரின் கனவினை அடைய வரும் அத்தனை தடைகளுக்கும் ஒரு மாற்றினைக் கண்டு, அதன் வழி நின்று வெற்றிக் கொள்கிறார்.

“நான் ஒரு போராளி. வாழ்வின் இறுதி வரை உறுதியாக போராடுவேன். என் கதை எப்படி முடியும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், என் அகராதியில் முடியாது என்ற சொல்லே கிடையாது. எல்லாவற்றையும் கடந்து, பெரும் வெற்றியாக நான் கருதுவது, என் இத்தனை ஆண்டுகால கடுமையான பயிற்சிகளில் நான் எந்தவொரு ஊக்க மருந்தையோ, எனர்ஜி சப்ளிமென்ட்களையோ, ஸ்டீராய்ட்ஸ்களையோ எடுத்ததே இல்லை. என் உடல், முழுக்க முழுக்க பயிற்சிகளின் மூலம், இயற்கையாக நானே கட்டமைத்தது” என்று பெருமைப் பொங்கச் சொல்கிறார்.

ஆனந்த் அர்னால்டின் கதையை மையமாக வைத்து அமெரிக்க எழுத்தாளர், ஆலன் உட்மேன், “வெயிட்லெஸ்” எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இவரின் வாழ்க்கைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாலிவுட் படம் தயாராகி வருகிறது. இந்தாண்டு வெளியான “சுப்ரீம்” என்ற தெலுங்குப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சில பாலிவுட் படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். இதன் மூலம், தன் பாடி பில்டிங் பயிற்சிகளுக்கான பணத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார் ஆன்ந்த்.

“வாழ்க்கை எத்தனை கடுமையானதாக இருந்தாலும்... எங்கோ, ஏதோ ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு இடம் இருக்கவே செய்கிறது. தேவை தேடலும், உழைப்பும் மட்டுமே...” என்கிறார் ஆனந்த்.

வாழ்த்துகள் ஆனந்த்!!!

- இரா.கலைச்செல்வன்