ஹெல்த்
Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 26

ஸ்வீட் எஸ்கேப் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 26

சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்

ஸ்வீட் எஸ்கேப் - 26

ர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுக்க சிகிச்சைப் பெற வேண்டிய ஒரு நிலை. தமிழில் இதை நோய் என்று சொல்லிப் பழகிவிட்டோமே தவிர, இது ஒரு நோய் அல்ல... இதை ஒரு குறைபாடு (டிஸ்ஆர்டர்) என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் குறைபாட்டை வாழ்நாள் முழுக்கக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சர்க்கரை நோயாளிகளுக்கு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டை மட்டுமே சிகிச்சையாக பரிந்துரைக்கிறோம். சிலருக்கு, இதனுடன் மருந்துகள் கொடுப்பதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவேண்டியிருக்கிறது. அப்படி, மாத்திரை மருந்து எடுத்து சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிப்பவர்களுக்கு எப்படி, அதை வெற்றிகரமாக பின்பற்றுவது என்பதைப் பற்றிதான் சொல்லித்தரப் போகிறேன்.

ஸ்வீட் எஸ்கேப் - 26சர்க்கரை நோய் மருந்து ஆற்றல்மிக்கதாக செயல்பட பின்வரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவை:

விதிமுறை 1: பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் பின்பற்றுங்கள்!

மருந்துடன், உணவுக்கட்டுப்பாடு, தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றும்போது, அது இன்னும் தீவிரமாக ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதை கண்காணித்து உறுதி செய்ய, ரத்தத்தில் சர்க்கரை அளவு என்ன, அதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புஉணர்வு அவசியம். இதற்காக, அடிக்கடி ஆய்வகத்துக்குச் சென்று சர்க்கரை அளவைப் பரிசோதிப்பது இயலாதது. எனவே, வீட்டிலேயே குளுக்கோமீட்டரைப் பயன்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிவது எப்படி என கற்றுக்கொள்ளுங்கள்.

விதிமுறை 2: மருத்துவர் பரிந்துரைத்த மருந்தைப் புறக்கணிக்காதீர்கள்!


“நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்... நமக்கு எதற்கு மாத்திரை மருந்து?” என்று முடிவு செய்து, மாத்திரை எடுப்பதை நிறுத்த வேண்டாம். அதேபோல், ‘`மாற்று மருத்துவமுறையை பின்பற்றுகிறேன்... அதில் சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் இருக்கிறது’’ என்று நினைத்துக்கொண்டு மாத்திரை எடுப்பதை நிறுத்த வேண்டாம். பலரும்,  தாங்கள் நன்றாக இருப்பதாக நினைத்து மாத்திரைகள் எடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். பின்னர், சர்க்கரை அளவு அதிகரித்து, சிறுநீரகச் செயல் இழப்பு, கால் புண் என்று பிரச்னைகள் முற்றிய நிலையில் மீண்டும் மருத்துவரிடம் வருகின்றனர். எனவே, நீங்களாகவே மருத்துவராக மாறி மாத்திரையை நிறுத்த வேண்டாம்.

விதிமுறை 3: வழக்கமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுங்கள்!

நோயாளியின் தினசரி உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை எப்படி சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறதோ, அதேபோல், டாக்டர் பரிந்துரைத்த மருந்தும் உதவுகிறது. எனவே, தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி, உணவு எடுத்துக்கொள்ளுதல், மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை பின்பற்றுங்கள். சர்க்கரை நோயாளிகள் செய்யும் மிகப்பெரிய தவறு, ரத்தப் பரிசோதனை செய்யும் தினத்தன்று மாத்திரைகளை எடுக்கத் தவறுவது. ஆய்வுக்கூடங்களில் சில நேரங்களில், பரிசோதனைக்கு வருபவர்களிடம் மாத்திரை எடுக்க வேண்டாம் என்று கூறுவதால், நோயாளிகளுக்கும் குழப்பம் ஏற்படுகிறது. டாக்டர் பரிந்துரைத்த முறையை பின்பற்றினால் போதும், அதுதான் சர்க்கரையைக் கண்காணிக்கவும் கட்டுக்குள் வைக்கவும் உதவும்.

விதிமுறை 4: குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை திட்டத்தை மாற்றியமைக்கவும்!


தொடர்ந்து சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் எடுத்துவருபவர்களுக்கு, சில மாதங்களுக்குப் பிறகு அல்லது சில வருடங்களுக்குப் பிறகு பரிசோதனை முடிவுகளில் மாறுதல் தெரியவரும். எனவே, அந்த மாற்றத்தை கருத்தில்கொண்டு, மருந்து எடுக்கும் அளவில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், பலரும் இதைச் செய்வது இல்லை. பல ஆண்டுகளுக்கு ஒரே மருந்தை எடுத்துவரும்போது, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரையின் வீரியம் குறையத் தொடங்கியிருக்கும். அதனால், சர்க்கரை அளவு அதிகரித்து வேறு சிக்கல்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை அணுகி, மருந்து எடுக்கும் அளவில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமா என கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

விதிமுறை 5: மாத்திரை எடுப்பதை நிறுத்தக்கூடாது!

மருத்துவர் பரிந்துரைப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்குதான். அதற்கும், காய்ச்சல், சளி போன்ற வேறு உடல் நலக் குறைவுக்கும் தொடர்பு இல்லை. இரண்டுக்கும் சேர்த்து மாத்திரைகள் எடுப்பதால் ஏதேனும் பக்கவிளைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதைவிடுத்து, சர்க்கரை நோய்க்கான மாத்திரை எடுப்பதை நிறுத்த வேண்டாம்.

விதிமுறை 6: மருத்துவரிடம் பகிர வேண்டும்!

தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். அதன் அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும். சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலோ, வாந்தி, குமட்டல், சருமத்தில் புள்ளிகள், எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ... அவைதான் உங்களுக்கான அறிகுறிகள். இதுபற்றி மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

விதிமுறை 7: மருத்துவ வரலாறு முக்கியம்!

எந்த வேளை, என்ன மாத்திரை எடுக்கிறோம் என்பதைக் குறித்துவைக்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்தச் சீட்டு, பரிசோதனை முடிவுகள் என அனைத்தையும் தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும். இது உங்களுக்கான சரியான மருந்தைப் பரிந்துரைக்க மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.

விதிமுறை 8: தேவையான அளவு மாத்திரை வைத்திருப்பது அவசியம்!

ஒவ்வொரு நாள் தேவைக்கும் மாத்திரை வாங்க வேண்டாம். இதனால், சில நேரங்களில் மாத்திரை கிடைக்காத சூழல் ஏற்படலாம். ஒன்று, இரண்டு நாள் மாத்திரை தவிர்ப்பது கூட பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் மாத்திரை இல்லை என்ற சூழல் வராத அளவுக்குப்  பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த எட்டு விதிகளையும் பின்பற்றினால் கட்டாயம் சர்க்கரை நோயாளியின் வாழ்க்கைத் தரம் உயரும்.

- தொடரும்

ஸ்வீட்டர்

சர்க்கரை நோய் மருந்துகள் பாதுகாப்பானவை. சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்காத போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாத்திரைகள் எடுப்பதால்  இந்த சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

டயாபடீஸ் டவுட்

எஸ்.பாலகிருஷ்ணன், திருச்சி


“எனக்கு சர்க்கரை நோய் வந்திருக்கிறது. சிகிச்சை எடுத்துவருகிறேன். அடுத்தமுறை என்னுடைய மருத்துவரை அணுகி எனக்கான சிகிச்சை முறையை திட்டமிடும்போது, என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்?”

“மருத்துவரிடம் உங்கள்  சந்தேகங்களைக் கேட்பதில் தயக்கம் வேண்டாம், உங்களுக்குத் தேவையான தகவல் அனைத்தையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும் தங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளைப் பட்டியலாக அளிக்கிறேன்.

* எனக்கு பரிந்துரைத்த மருந்து என்ன செய்யும்? எடுத்துக்கொண்ட எவ்வளவு நேரம் கழித்து மருந்து செயல்பட ஆரம்பிக்கும்?

* சாப்பிடுவதற்கு முன்பு எடுக்க வேண்டுமா? சாப்பிட்ட பிறகு எடுக்க வேண்டுமா?

* இந்த மாத்திரைகளை எடுப்பதால், ஏதாவது உணவு அல்லது மது அல்லது மாத்திரையை தவிர்க்க வேண்டுமா?

* எடுக்கும் மருந்தின் அளவை எவ்வளவு கால இடைவெளியில் மாற்ற வேண்டும்?

* மாத்திரை எடுக்க மறந்தால் என்ன செய்ய வேண்டும்?

* உடல்நிலை சரியில்லாதபோதும், சரியான உணவு எடுக்காதபோதும் கூட மாத்திரையை எடுக்க வேண்டுமா?

* இந்த மாத்திரைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்குமா? சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிட்டால் என்ன செய்வது?

* இந்த மாத்திரை எடுப்பதால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? அப்படி ஏதேனும் ஏற்பட்டால் என்ன செய்வது?

* இந்த மாத்திரைகளை எப்படி பராமரிப்பது? பத்திரப்படுத்தி வைப்பது?

* பயணம் செய்வதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? டாக்டர் பரிந்துரைத்த அதே மாத்திரையைத் தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது அதே காம்பினேஷனில் வேறு மாத்திரை பயன்படுத்தலாமா?
இந்த கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றாலே போதும். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.”