Published:Updated:

விபத்தில் சிக்கியவர்களை தூக்கி இடமாற்றலாமா? - உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? #FirstAid

விபத்தில் சிக்கியவர்களை தூக்கி இடமாற்றலாமா? - உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? #FirstAid
விபத்தில் சிக்கியவர்களை தூக்கி இடமாற்றலாமா? - உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? #FirstAid

வெளிநாடுகளில் முதலுதவி பற்றிய அறிவு பாடப்புத்தகத்திலேயே ஆரம்பித்துவிடும். சாலையில் செல்லும்போது ஒருவர் வாகனம் மோதி அடிபடுகிறார் என்றால் அவருக்கு என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும் என்று சின்னக் குழந்தைக்குக் கூட அங்கெல்லாம் கற்பித்து வளர்க்கிறார்கள். ஆனால், இங்கு முதலுதவி பற்றி பெரியவர்களே கூட அறிந்திருப்பதில்லை. 

விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரை உரிய சமயத்தில் முதலுதவி அளித்தால் காப்பாற்ற முடியும் என்கிறது ஓர் ஆய்வு, முதலுதவி செய்ய மருத்துவர் தேவையில்லை; படித்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சில முதலுதவி முறைகளைக் கற்றுவைத்துக் கொண்டால் அவசர நேரத்தில் மரணத்தின் விளிம்பில் தவிக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றி விட முடியும். 

எல்லோரும் கற்றுவைத்திருக்க வேண்டிய சில அடிப்படை முதலுதவிகள் குறித்து விவரிக்கிறார் அவசரச் சிகிச்சை மருத்துவர் தவப்பழனி அழகப்பன்.

``குழந்தைகள் விளையாடும்போது சில நேரங்களில் கதவிடுக்கில் கை வைத்து நசுக்கிக்கொள்வார்கள். கார் டிக்கியில் தவறுதலாகத் தலையை விட்டுவிடுவார்கள். அதனாலும் காயம் ஏற்படும். சிலர் சமைக்கும்போது மிக்ஸிக்குள் கையை விட்டுவிடுவார்கள். இப்படி நடக்கும்போதெல்லாம் லேசாக ரத்தம் வந்ததாலே பெற்றோர்கள் பதறிப்போவார்கள். 

பொதுவாக, எப்பேர்பட்ட ரத்தக்கசிவும், அழுத்தம் கொடுத்தால் நின்றுவிடும். அடிபட்டவுடன் பதற்றப்படாமல், சுத்தமான துணியை, தண்ணீரில் நனைத்து ரத்தம் வருமிடத்தில் வைத்து அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். ரத்தம் வருகிறதா..நின்றுவிட்டதா என்று அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்போது, ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். பிறகு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். காயம் சிறிதாக இருந்தால் ரத்தக்கசிவு நின்றபிறகு, காயம் உள்ள இடத்தில் `பேண்ட் எய்டு' (Band aid) போடலாம்.

கைகளில் அடிபட்டால்?

கைகளில் அடிபட்டால், சுத்தமான கர்ச்சீப் அல்லது துணி கொண்டு ரத்தம் வெளியேறும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம். பின்பு, புவியீர்ப்பு விசைக்கு எதிராக கைகளை மேலே உயர்த்திப்பிடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகமாக ரத்தம் வெளியேறுவது தவிர்க்கப்படும்.

ஒருவரின் உடல் எடைக்கு ஏற்றவாறு, எவ்வளவு ரத்தம் வெளியேறுகிறது? என்று கவனிக்க வேண்டும். இரண்டு வயது குழந்தை சுமார் 12 கிலோ எடை இருக்கும். அந்தக் குழந்தையின் உடலில் தோராயமாக 1,000 மி.லி. ரத்தம் இருக்கலாம். இதில் 200 மி.லி. ரத்தம் வெளியேறுவது என்பது ஆபத்தானது. ஆனால், பெரியவர்களுக்கு அரை லிட்டர் ரத்தம் வெளியேறினாலும் பாதிப்பில்லை. ஆகவே, விபத்தின்போது லேசான ரத்த விரயத்தைக் கண்டு பயப்படத்தேவையில்லை. 

விபத்து அல்லது வேறு வகையான காரணங்களால் சிலர் நினைவிழந்து விடுவார்கள். அந்தச் சூழலில், நாமும் பதற்றப்பட்டு நிற்கக் கூடாது. முதலில் நினைவிழந்தவர் மூச்சு விடுகிறாரா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். கையைப் பிடித்து சோதிப்பதை விட, நெஞ்சும் வயிறும் மேலும் கீழும் போய்வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அப்படியிருந்தால், நினைவிழந்தவர் மூச்சுவிடுகிறார்  என்று அர்த்தம். நெஞ்சும் வயிரும் இயங்கவில்லை என்றால்  கழுத்துக்குக் கீழே  உயிர்த்துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். மூன்று விரல்களை ஒன்றுசேர்த்து கழுத்துக்குக் கீழே தடவிக்கொண்டே வந்தால் பள்ளமான ஒரு பகுதித் தட்டுப்படும். அந்த இடத்தில் உயிர்த்துடிப்பதை அறியமுடியும். அங்கே துடிப்பு இல்லையென்றால், `கார்டியாக் அரெஸ்ட் ' (Cardiac arrest ) ஏற்பட்டிருக்கலாம் என்பதை அணுமானிக்கலாம்.

இதயம்தான் உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டுசேர்க்கிறது.  இதயம் துடிக்கவில்லை என்றாலோ,  துடிப்பு குறைவாக இருந்தாலோ மருத்துவரின் உதவி கிடைக்கும்வரை  காத்திருக்காமல் நடுநெஞ்சில் வைத்து அழுத்தம் கொடுக்கவேண்டும். நெஞ்சுமீது கைகளை வைத்து, நிமிடத்துக்கு நூறுமுறை விட்டுவிட்டு அழுத்தவேண்டும். இப்படியாக 30 தடவை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அடிபட்டவர் இரண்டுமுறை மூச்சு விடலாம். சிலர், அடிபட்டவரின் வாயில் தன்னுடைய வாயைவைத்து ஊதி மூச்சைக் கொண்டுவர முயற்சி செய்யலாம்.  

நினைவிழந்தவர்களுக்கு மூச்சு இருந்து, நினைவு மட்டும் இல்லையென்றால், பாதிக்கப்பட்டவரை அசைக்கக் கூடாது. அவர் இருக்கும் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். நிமிர்த்தி உட்கார வைக்கக் கூடாது. அப்படிச் செய்வதால், நிமிர்த்தி உக்காரவைத்தால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடும். பெரும்பாலும், ஒருக்களித்து படுத்திருப்பது நல்லது. ஆனால், அவருக்கு அடிபட்டிருந்தால் அப்படிச் செய்யக் கூடாது. 

ஒருவர் விபத்தில் அடிபட்டால், அவரது கைகால்கலைப் பிடித்து அலேக்காகத் தூக்கி ஓரமாகக் கொண்டு செல்வார்கள். இப்படிச் செய்வதால் அடிபட்டவரின் இடுப்பிலுள்ள குறுக்கெலும்பு (பெல்விஸ்) பாதிக்கப்படலாம். அந்தவழியே, அதிக அளவில் ரத்தம் வெளியேற வாய்ப்புண்டு. எனவே, அடிபட்டவரைத் தூக்கும்போது மிகுந்த கவனம் தேவை. நான்குபேரும் ஒருங்கிணைந்து தூக்கவேண்டும். அப்படித் தூக்கத்தெரியாது என்றால், ஆம்புலன்ஸை வரவழைத்து, அவர்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிடலாம். அவர்கள் ஸ்டெர்ச்சரில் (Stretcher) வைத்து, உடலில் எந்தப் பாகமும் சிதையாமல் எடுத்துச்செல்வார்கள். 

விபத்தின்போது, ஒருவருக்குக் கழுத்தெலும்பு அடிபட்டிருக்க வாய்ப்புண்டு. அதையும் கவனத்தில் கொண்டே தூக்கவேண்டும். தூக்கும்போது அடிப்பட்டவரின் தலையைத் தொங்கவிட்டுவிட்டால்  தண்டுவடம் துண்டிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து போகலாம். எனவே, கவனமாகச் செயல்பட வேண்டும்.  

தவிர்க்க வேண்டியவை

அடிபட்டவரைத் தூக்கும்போது ஒருங்கிணைவு வேண்டும். 

ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க. அடிபட்ட இடத்தில் சுத்தமான துணி அல்லது கைக்குட்டை கொண்டு அழுத்தம் தரவேண்டும்.

வலிப்பு வந்தவர் வாயில் தனது நாக்கைக் கடித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, துணிகளைச் சேர்த்து அவரது வாயில் திணிப்பார்கள். அப்படிச் செய்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் உயிரிழக்கக்கூடும். அதைத் தவிர்க்க வேண்டும் 

முதலுதவி என்பது தெய்விகப்பணி. மரணத்தின் விளிம்பில் இருப்போருக்கு உயிரை மீட்டுத்தரும் அரும்பணி. அதை மிகவும் கவனத்தோடும் பொறுப்புஉணர்வோடும் செய்ய வேண்டும். முதலுதவி பற்றி நன்கு அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும்..." என்கிறார்  மருத்துவர் தவப்பழனி அழகப்பன்.