Published:Updated:

``இனி நானும் டாக்டர்... 81% எடுத்திருக்கேன்!” - Dr. Artificial Intelligence, MBBS

``இனி நானும் டாக்டர்... 81% எடுத்திருக்கேன்!” - Dr. Artificial Intelligence, MBBS
``இனி நானும் டாக்டர்... 81% எடுத்திருக்கேன்!” - Dr. Artificial Intelligence, MBBS

பாபிலோன் ஹெல்த்கேர் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ ஆலோசனை சேவை நிறுவனம். அவர்கள், மருத்துவர்களை விடச் செயற்கை நுண்ணறிவினால்( AI) துல்லியமாக அனைவரின் நோய் அறிகுறிகளையும் அளவிட முடியும் என நிரூபித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் மற்றும் அதற்கான செயலிகளைக் கண்டுபிடித்தது மிகப்பெரிய புரட்சி என்றே சொல்லலாம். பல கருவிகளின் உற்பத்தியைக் குறைத்ததில் மொபைல் ஆப்களுக்கு பங்கு அதிகம். அந்த வரிசையில் வானொலி, குறுந்தகடு, அலாரம் எனப் பல பொருள்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பல நிபுணர்களின் சேவைகளைக் கூட மொபைல் ஆப்ஸ் செய்வதுண்டு. ஆனால், ஒரு டாக்டர் செய்யும் வேலை?

ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால் சும்மாவா?  உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? சற்று அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு தாமதம் ஆனாலும் சரி, மருத்துவரைப் பார்த்து அறிகுறிகளைக் கூறி, பிரச்னை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? ஏனென்றால் இங்குப் பல அறிகுறிகளுக்கு, என்ன நோய் என்று தெரியாமலேயே பலர் அவர்களாக எடுக்கும் மாத்திரைகளோடு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். `இனிமேல் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்' என ஸ்மார்ட்போன்களில் புது மருத்துவராகக் களமிறங்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு.

யூகே -  வின் சுகாதார அமைப்புகளில் ஒன்றான பாபிலோன் சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சோதனையின் (AI - Artificial Intelligence software test)  மூலம் மனிதர்களின் பிரச்னைகளை டாக்டர்களை விட சிறப்பாகக் கூற முடிகிறது. தற்போது தகுதி பெற்ற ஒரு மருத்துவராக AI -  மென்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.   

பாபிலோன் ஹெல்த்கேர் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ ஆலோசனை சேவை நிறுவனம். அவர்கள், மருத்துவர்களை விடச் செயற்கை நுண்ணறிவினால் (AI) துல்லியமாக அனைவரின் நோய் அறிகுறிகளையும் அளவிட முடியும் என நிரூபித்துள்ளனர். அதாவது, மருத்துவரை விட செயற்கை நுண்ணறிவின் திறன் நம் பிரச்னைகளை சரியாகக் கண்டறிந்து தீர்வுகளையும் வழங்குகிறது.

 2013 - இல் அலி பார்ஸா (Ali parsa) எனும் தொழில் முனைவோரால் பல முயற்சிகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டதுதான், பாபிலோன் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சோதனை. ( AI - Softwrae test). இதன் அடிப்படை நோக்கமே ஒரு குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் போல ஸ்மார்ட்போன் ஆப்களின் மூலம் மக்களுக்கு உதவுவதேயாகும். அதாவது உங்கள் பிரச்னைகளுக்காக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. உங்கள் கைப்பேசியில் இந்த ஆப் இருந்தால் போதும். உங்களுடைய பிரச்னை என்னவென்று கூறிவிடும். 

இந்த மருத்துவ AI, ராயல் கல்லூரி மருத்துவர்களால் நடத்தப்பட்ட இறுதித்தேர்வில் வெற்றியடைந்து 81%  மதிப்பெண் பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வெற்றி பெற்றவர்கள் எடுத்த மதிப்பெண்ணின் சராசரி விகிதம் 72 சதவிகிதம்தான் என்று கூறியுள்ளது அந்தக் கல்லூரி.

பிறகு தனிசோதனை ஒன்றில் 7  மிக உயர்ந்த அனுபவம் வாய்ந்த முதன்மையான மருத்துவர்களால் (ராயல் கல்லூரி மருத்துவர்கள், சுகாதார அமைப்புகள், ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம்) செயற்கை அறிவுத்திறனானது 100 hypothetical கேள்விகளால் பரிசோதிக்கப்பட்டது. இதில் பாபிலோனின் AI சராசரியாக 80 சதவிகித நோய்களைக் கண்டறிந்தது. இதிலிருந்து AI சிறந்த மருத்துவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றது.   

``அடிப்படை வசதிகளைக் கூட பெற முடியாத மில்லியன் கணக்கான மக்களுக்குச் சுகாதார வசதிகளை வழங்க இந்தச் செயற்கை நுண்ணறிவு மென்பொருளால் முடியும்" என்று தெரிவித்துள்ளார் பார்ஸா

பாபிலோன் AI ஆனது, நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகள் நோயோடு ஒத்துப் போகிறது என்பதைச் சரியாகக் கண்டறிந்து தெரிவிக்கிறது. என்னதான் ஒருபக்கம் இக்கண்டுபிடிப்பைப் புகழ்ந்தாலும், மற்றொரு பக்கம் இதை எதிர்ப்பவர்களும் உள்ளனர். 

AI மென்பொருள் சோதனையை எப்பொழுதும் மருத்துவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என ராயல் கல்லூரியின் துணைத் தலைவரும், பொதுப் பயிற்சியாளருமான மார்டின் மார்ஷல் கூறியுள்ளார். எந்த ஒரு செயலியும் அல்லது வழிமுறைகளும் நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையேயான உறவை அடிப்படையாகக்கொண்டு செயல்பட முடியாது என்றும் கூறியுள்ளார். 

AI டெக்னாலஜி குறித்த முடிவுகள், ஆய்வுகள் இணையத்தில் முதன் முறையாக ராயல் கல்லூரி மருத்துவர்கள் முன்னிலையில் பகிரப்பட்டது. இந்த AI - சோதனையானது இலவசமாக ஆப் மற்றும் இணையங்களில் UK - வின் சில பகுதிகளிலும் ருவாண்டாவிலும் வெளியிடப்பட்டுள்ளது.  எனினும் சில கட்டுப்பாட்டாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கவில்லை.

``பாபிலோன் மென்பொருளின் நோக்கம் 'சுகாதாரத் தகவல்களைத் தருவதே' அன்றி நோயை ஆய்வு செய்வதல்ல என்றும், இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உலகம் தனது முதல் மற்றும் பெரிய இலக்கின் படியில் காலடி எடுத்து வைக்கிறது. இனிமேல் அனைவரின் கைகளிலும் ஒரு சின்ன ஹெல்த்கேர் அசிஸ்டென்ட் இருக்கிறார் என்று பார்ஸா கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு