Published:Updated:

கொலை எதிரொலி: சென்னை அரசு மருத்துவமனையில் காவல் நிலையம் அமைப்பு

Vikatan Correspondent

சென்னை: சிகிச்சை பெற்று வந்தவர் வெட்டிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.பகுதி  தே.மு.தி.க. துணைச் செயலாளர் பிரகாஷ் (41). இவர், முதுகு வலிக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையின்  முதல் டவர் பிளாக்கில் உள்ள‌ 3வது மாடியில் உள்ள வார்டில் பிரகாஷ் இருந்தார். நேற்று முன்தினம் இரவு, வந்த 7 பேர், பிரகாஷை வார்டுக்குள்ளேயே ஓடஓட விரட்டிப் படுகொலை செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், வார்டுக்கு உள்ளேயே படுகொலை நடந்தது நோயாளிகளிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து, மாநகரக் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அரசு பொது மருத்துவமனையில் இப்போது செயல்படும் புறக்காவல் நிலையத்தை  காவல் நிலையமாக தரம் உயர்த்தி அங்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்  தலைமையில் 50 போலீஸார் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.