Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1

டாக்டர் வெ.ஜீவானந்தம்புதிய தொடர்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1

டாக்டர் வெ.ஜீவானந்தம்புதிய தொடர்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1

டவுளாக நம்மை உணர்வது மிகச் சுலபம். பட்டினி கிடப்பவனுக்கு, ஒருவேளை உணவு தருபவனே தெய்வம். சாதாரண மக்கள் இப்படி சில தருணங்களில் தெய்வமாக முடியும் என்றால், ஒவ்வொரு டாக்டரும் ஒரு புதிய நோயாளியைச் சந்திக்கும் போதெல்லாம் தெய்வமாக மாறிக்கொண்டே இருக்கிறார். முழுமையான அறியாமையுடன் ஒரு டாக்டரை நம்பி தன்னை ஒப்படைக்கும் ஒவ்வொரு நோயாளியும், தன் உயிர் காக்கும் கடவுளாகவே அந்த டாக்டரைக் கருதுகிறார்.

ஆனால், தெய்வமாவதற்கு மறுக்கிறவர்களே அதிகம்.

மருத்துவம் என்பதும், மருந்து என்பதும் உலகுக்குப் புதிதல்ல. துயரங்களுடனேயே துயரங்களுக்கான தீர்வும் பிறந்துவிடுகிறது. மருந்தியல் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். ‘மனம் அறியாததைக் கண்கள் காணாது’ என்று. இதையே நம் முன்னோர்கள், ‘கல்லைக் கண்டால் கடவுள் இல்லை... கடவுளைக் கண்டால் கல் தெரியாது’ என்பர். இருப்பதைக் காணும் கண்களைச் சார்புகள் மறைத்துவிடுகின்றன.

‘பயனற்ற செடி எது?’ என்று தருமனும், துரியோதனனும் தேடிப்போன கதைதான் நினைவுக்கு வருகிறது. இருவரும் ஒரே காட்டில் அலைந்தனர்; ஒரே செடியைக் கண்டனர். ‘‘எல்லாம் மருந்தே’’ என்றான் தருமன். ‘‘அனைத்தும் களையே’’ என்று ஒதுக்கினான் துரியோதனன். கல்லும் தெய்வமும் கண்களில். என்ன மனதுடன் செல்கிறோம் என்பதே நீரைத் தீர்த்தமாக்குகிறது. ‘தெய்வம்... மனித ரூபமே’ என்கிறது இந்திய மரபு; ‘நாதன் உள்’ என்கிறது சித்தர் மரபு. அகம் பிரம்மாஸ்மி.

அறிவியல் சார்ந்த இந்தத் தொடருக்கு இத்தனை ஆன்மிக முன்னுரையாடல் தேவையா எனத் தோன்றும். ஆனால், சார்புகள் இல்லாமல் சிந்திக்கப் பயில, விருப்புவெறுப்புகள் அற்று ஆத்ம தரிசனம் பெற இந்தச் சாதனமே முதற்படி. ஊற்று சுரந்துவிட்டால் நீர் தன் வழி ஓடும்.

மருத்துவம் ஒன்றும் புதியதும் அல்ல... அரியதும் அல்ல. மனித இனம் பரிணாமம் பெற்றபோது, ஆப்பிரிக்க முதல் தாய்க்குப் பிரசவம் பார்த்தது யார்? தொப்புள்கொடி அறுத்தது யார்? இத்தனையையும் தாண்டித்தான் நாம் 700 கோடியை எட்டிவிட்டோம். ‘பிறப்புடன் பிறப்பது மரணம். ஒவ்வொரு நாளும் மரணம் நோக்கிய பயணம்’ என்று எத்தனை வேதாந்திகள் சொன்னபோதும், ‘தவறான சிகிச்சையால் நோயாளி மரணம்’ என டாக்டர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் கோபத் தாக்குதல்கள் தொடர்கின்றன. தவறு யார் மீது என பிரித்துப் பார்க்கும் மனம் அங்கு இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1

ஒவ்வொரு மருத்துவ மாணவரும் படித்து முடிக்கும்போது ஹிப்போகிரேடஸ் உறுதிமொழியை எடுக்கவேண்டும் என்று ஒரு சடங்கு உண்டு. ‘எல்லா நாடுகளிலும் மருத்துவர்கள் மத்தியில் தார்மீக நெறி குறைந்து வருகிறது’ என 1948-ம் ஆண்டிலேயே உலக மருத்துவர் சங்கம் கவலைப்பட்டது. ஹிப்போகிரேடஸ் உறுதிமொழியை அவர்கள்தான் நவீன காலத்துக்கு ஏற்றபடி வடிவமைத்தனர். ‘வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே இருக்கும் ஒரு நோயாளியை எவ்வளவு கனிவோடும் கருணையோடும் அணுக வேண்டும்’ என விவரிக்கிற அந்த உறுதிமொழியின் சுருக்கம், ‘எந்த லாபநோக்கமும் இல்லாமல், நோயுற்ற அனைவரையும் சமமாகப் பாவித்து, எனது மருத்துவத் திறனைப் பயன்படுத்துவேன்’ என்பதுதான்.

இந்த சடங்குகூட இன்று நடைமுறையில் இல்லை. பட்டம் பெறும் முன் இந்த உறுதிமொழியை எடுக்கவேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலும் வலியுறுத்துவது இல்லை. இது முதல் கோணல்.

இந்தியத் தொன்மை பற்றியும், மரபுப் பெருமை பற்றியும் பெருமிதத்துடன் உரக்கப் பேசும் காலம் இது. பேசும் அளவு உணர்கிறோமா... உணரும் அளவு ஏற்கிறோமா... ஏற்கும் அளவு மதிக்கிறோமா? நம் டாக்டர்களிடம் இதுபற்றிப் பேச வேண்டியிருக்கிறது.

‘பிளாஸ்டிக் சர்ஜரியின் முன்னோடி’ என நம் சுஸ்ருதரை உலகமே ஏற்றிருக்கிறது. அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் இந்த ஓவியத்தைப் பாருங்கள்... நமது அறிவியல் தொழில்நுட்ப மேன்மையை மிஞ்சிய மனிதாபிமானத்தை அல்லவா அது காட்டுகிறது. காதறுக்கப்பட்ட, மூக்கறுக்கப்பட்ட நம் மக்களின் ஊன உணர்வை நீக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் மேற்கொண்ட மருத்துவ உணர்வு நமக்குள் உண்டா... நாம் வைத்தீஸ்வரன் களாக முயற்சி செய்கிறோமா... நம்மில் எத்தனை பேர் தன்வந்திரிகள்... நம்மிடம் உள்ளது அமிர்தக் கலசமா... காசு உண்டியலா?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹிப்போகிரேடஸ், தன் மருத்துவ மாணவர்களை ஏற்கச் சொன்ன உறுதிமொழி, எந்த அளவுக்கு எனக்கும் உங்களுக்கும் பொருத்தமாக, ஏற்புடையதாக இருக்கிறது? ஓர் ஆத்மப் பரிசோதனையுடன், சத்திய சோதனையாக இந்த முயற்சியைத் தொடங்குவோம். நாம் வாழும் உலகை ஆரோக்கியமானதாக மட்டுமின்றி... அழகானதாகவும் நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு.

இந்தத் தொடர் வெளியாரும் இந்த நேரத்தில், மத்திய அரசு ‘புதிய தேசிய நலவாழ்வுக் கொள்கை - 2017’ என்ற பிரகடனத்தை வெளியிட்டு இருக்கிறது. ‘2030-க்குள் அனைவருக்கும் ஆரோக்கிய நலவாழ்வு தருவது தன் லட்சியம்’ எனப் பிரகடனப்படுத்துகிறது. இதே உறுதிமொழியை, நாம் ஏற்கெனவே கேட்டோம். ‘கி.பி. 2000-ல் அனைவருக்கும் நலவாழ்வு’ என ஐக்கிய நாடுகள் சபையே உறுதியளித்தது. 2017-ம் வந்துவிட்டது. என்ன நடந்தது? வாக்குக் கொடுத்த ஐ.நா-வும் கவலைப்படவில்லை; கடமைப்பட்ட உலக நாடுகளும் செயல்படுத்தவில்லை; நோயின் பிடியிலிருந்து மீள முடியாமல் தினம் தினம் சாகும் மக்களும் ‘ஏன் இதையெல்லாம் நிறைவேற்றவில்லை’ என்று கேள்வி கேட்கவில்லை.

மத்திய அரசின் புதிய நலவாழ்வுக் கொள்கை,  எப்படிப் பட்ட நலவாழ்வை நம் மக்களுக்குத் தரப்போகிறது?

(நலம் அறிவோம்)

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 1

மருத்துவம் மக்களுக்கானது!

டாக்டர் வெ.ஜீவானந்தம், ஈரோடு நகரில் இருக்கிறார். இந்த 72 வயது மருத்துவர், மயக்கவியலில் முதுநிலை மருத்துவப் பட்டம் முடித்தவர். ‘மருத்துவம் என்பது மக்களுக்கானதாகவே இருக்க முடியும்’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். கூட்டுறவு முறை மருத்துவமனைகளை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்திருக்கும் முன்னோடித் தொழிலதிபர்கள், டாக்டர்கள் என தன் நண்பர்கள் நிறையப் பேரை முதலீடு செய்ய வைத்து, இப்படி ஏழு மருத்துவமனைகளை ஊத்துக்குளி, ஈரோடு, தஞ்சாவூர், புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களில் நடத்தி வருகிறார். ‘‘சின்னச்சின்ன முதலீடுகளை நிறையப் பேர் செய்யும்போது, லாப நோக்கம் பின்னால் போய், சேவை முதல் இடத்துக்கு வந்துவிடுகிறது’’ என்கிறார் ஜீவானந்தம். இந்த மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை வரை அளிக்கிறார்கள்.