ஹெல்த்
Published:Updated:

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்? - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்!

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்? - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்? - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்!

ஹெல்த்பாலமுருகன், நரம்பியல் நிபுணர்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஓ.கே கண்மணி’ போன்ற படங்களில் மறதி பிரச்னையைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருப் பார்கள். அதுபோல், ‘ஷார்ட் டேர்ம் மெமரி லாஸும்’ மறதி பிரச்னைக்குத் தொடர்பானதுதான்.

பத்து வருஷத்துக்கு முன் பேசிய வார்த்தை, இன்னும் ஞாபகத்தில் இருக்கும்; அதையே நினைத்து வருந்தவோ கோபப்படவோ செய்வோம். ஆனால், காலையில் சாப்பிட்ட டிபன் இட்லியா பொங்கலா எனக் கேட்டால், மறந்துவிட்டு மழுப்புவோம். இதுதான் ‘ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்’ பிரச்னை. இதை, எப்படிச் சரிசெய்வது?

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. இதனால் மூளைத் திசுக்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மூளையில் பதிவான தகவல்களைத் திரும்ப நினைவுகூர்வதில் தற்காலிகமாகப் பாதிப்பு ஏற்படுகிறது. இதையே ‘குறுகிய கால நினைவு இழப்பு’ (Short Term Memory Loss) என்கிறோம். இது, ‘டிமென்ஷியா’ (Dementia) என்ற நோய்க்கான முதற்கட்ட அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்? - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்!

காரணங்கள்

தலையில் அடிபடுதல், மனஅழுத்தம், மன இறுக்கம், வலிப்பு நோய், இதய நோய்க்கான பைபாஸ் அறுவை சிகிச்சை, மதுப்பழக்கம் போன்றவற்றால் ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படலாம்.

யாருக்கு வரும்?

பொதுவாக, 40 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு, நினைவு இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், இளம் வயதிலும்கூட சிலருக்கு ஏற்படலாம்.

எப்படிக் கண்டறிவது?

பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தங்களைத் தாங்களாகவே கவனித்தாலோ அல்லது உடன் இருப்பவர்கள் சுட்டிக்காட்டினாலோதான் இதைக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக, பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கைகளைக் குடும்ப உறுப்பினர்களால் எளிதில் அடையாளம் காண முடியும்.

மறதிநோய் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரிடமோ அல்லது மன நல நரம்பியல் சிகிச்சை நிபுணரிடமோ சென்று ஆலோசனை பெறலாம்.

பரிசோதனையும் தீர்வுகளும்


எந்தக் காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அதற்குரிய பரிசோதனை மூலம் கண்டறிந்து, எந்தளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளார்  என்பதற்கேற்ப சிகிச்சைகள் தரப்படும். இதற்கென தனி சிகிச்சை இல்லை.

முதல்கட்டமாக நோய் பாதித்தவர்களிடம், நினைவுத்திறனை அளவிடும் விதமாகச் சில கேள்விகள் கேட்கப்படும். இதன் மூலம் அவருடைய நோய் பாதிப்பின் தீவிரம் மருத்துவரால் உறுதி செய்யப்படும்.

தலையில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றினால், எம்.ஆர்.ஐ. அல்லது சி.டி.ஸ்கேன் எடுப்பதன் மூலம் தலைப்பகுதியில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியலாம். அதன் மூலம் காயத்துக்கான சிகிச்சையை அளிக்கமுடியும்.

EEG (Electroencephalogram) எனும் பரிசோதனை மூலம் மூளையின் மின்னோட்டச் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம் மூளையின் செயல்திறனைக் கண்டறியலாம்.

செரிபெரல் ஆஞ்சியோகிராபி (Cerebral Angiography), மூலம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவைக் கணக்கிடலாம்.

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்? - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்!மூளையில் நீர்க்கட்டி இருந்தால், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படும்.

எப்படித் தவிர்க்கலாம்?


* தினமும் நடைப்பயிற்சி செய்யவேண்டும். எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். உரிய கால இடைவெளியில் முறையான மருத்துவப் பரிசோதனையைச் செய்யவேண்டும்.

* வெங்காயம், உலர் திராட்சை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வல்லாரைக் கீரை, பசலைக்கீரை ஆகியவை மூளைக்குப் பலம் சேர்க்கும் உணவுகள்.  இவை நினைவாற்றலை மேம்படுத்தும்.

*  சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மது, புகைப்பிடிக்கும் பழக்கங்கள் இருந்தால் உடனே நிறுத்திவிடவேண்டும்.

* தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்ற ஆரோக்கியம் தரும் பயிற்சிகளைச் செய்யலாம்.

* மூளையைத் தூண்டும் பயிற்சிகளான குறுக்கெழுத்து, புதிர்ப்போட்டி, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வத்தைச் செலுத்தலாம்.

* புதிய செயல்களில் ஈடுபடுவது மூளைக்குச் சிறந்த பயிற்சியாக அமையும்.

- ஜி.லட்சுமணன்

டிமென்ஷியாவுக்கும் ஷார்ட் டேர்ம் மெமரி லாஸுக்கும் தொடர்பு உண்டா?

டிமென்ஷியா பிரச்னை இருப்பவரின் மூளையில் செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும். செல்களின் செயல்பாடுகள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, சிந்தனை, நடத்தை மற்றும் உணர்வுகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். டிமென்ஷியா பிரச்னை இருப்பவரின் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால், திசுக்கள் அழியும். இதனால், பாதிக்கப்பட்டவருக்கு நினைவு இழப்புகூட ஏற்படக்கூடும்.