Published:Updated:

குரல் இனிது குரலே இனிது!

பாதிப்புகள்... பிரச்னைகள்... தீர்வுகள்!ஹெல்த்வேலுமணி காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

குரல்! இது எவ்வளவு முக்கியம் என அழும் குழந்தைக்குக்கூடத் தெரியும். தாயின் குரலைக் கேட்ட பிறகுதான் குழந்தை அழுவதை நிறுத்தும். சோகம், மகிழ்ச்சி போன்ற இரண்டு எதிர் உணர்வு நிலைகளுக்கும் இனிமையான பாடல்களைக் கேட்டாலே ஆறுதலும், ஆனந்தமும் அடையலாம். அப்படி இந்தக் குரலுக்குத்தான் எத்தனை வலிமை! சில நேரங்களில், உணர்ச்சிகள்கூடக் குரல் மூலம் வெளிப்படும். குரலின் தொனியை வைத்தே ஒருவரின் மனநிலையைக் கண்டறிந்துவிடலாம்; தேவையைப் புரிந்துகொள்ளலாம். குரலை மையமாக வைத்து எத்தனையோ துறைகள் இயங்குகின்றன. உழைப்பாளிகளுக்கு கைகால்கள் முக்கியம்; அலுவலகம், கல்விக்கூடங்கள்... உள்ளிட்ட இடங்களில் அறிவுத்திறன் அவசியம். அப்படிச் சிலருக்கு குரலும் அவசியமாக இருக்கிறது. குரலால்தான் சிலரின் பிழைப்பே ஓடுகிறது. குரல் தொடர்பான துறையில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பார்ப்போம்.

குரல் இனிது குரலே இனிது!

குரல் ஏன் பாதிக்கிறது?

வோக்கல் கார்டு எனும் குரல்வளையத்துக்கு அதிகமாக வேலையோ, பளுவோ, அழுத்தமோ தந்தால், புண்கள் உருவாகும். அந்தப் புண்ணின் வளர்ச்சியே குரல் தொடர்பான பாதிப்புகளை உருவாக்குகிறது.

மூச்சுக்குழாயின் இரு பக்கங்களிலும் உள்ள, வோக்கல் கார்டுகளுக்கு அழுத்தம் ஏற்படும்போது, புண், காயம், கொப்பளம், கட்டி போன்றவை உருவாகின்றன. இவை கவனிக்கப்படாதபோது, பெரிய தொல்லைகளாக மாறுகின்றன.

என்னென்ன பிரச்னைகள்?

ஒருவர் அதிகமாகவோ, சத்தமாகவோ பேசும்போது, தொண்டை மற்றும் மூச்சுக்குழாய்ப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம்; பாதிப்பு நீடித்தால், தொற்றும் ஏற்படும். அடுத்தடுத்து அதேபோன்ற நிலை தொடர்வதால், பாதிப்பு தீவிரமாகும். பெரும்பாலும் ஆசிரியர்கள், வாய்ஸ் ஆர்டிஸ்ட் போன்றவர்கள் இந்தப் பிரச்னையால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தம், தொண்டையில் இறுக்கத்தை உருவாக்கும். தொற்றை அதிகப்படுத்தும். இதனால்  ஏற்படக் கூடிய பிற பாதிப்புகள்...

குரல் இனிது குரலே இனிது!* மூச்சுக்குழாயில் அலர்ஜி வரும்

* லாரிங்கிட்டிஸ் (Laryngitis) எனும் எரிச்சல், தொற்று

* தூசியால்கூடத் தொண்டையில் அலர்ஜி ஏற்படும். இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு ஆசிரியர் துறையினருக்கு மட்டுமே.

* வோக்கல் கார்டு நாட்யூல் (Vocal cord nodule) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நாட்யூலை, `காயம்’ என்று சொல்லலாம். வோக்கல் கார்டில் சின்னச் சின்ன வீக்கங்கள் ஏற்படும். சத்தமாகப் பேசுவது, தொடர்ந்து குரலைப் பயன்படுத்துவது போன்றவற்றால் வோக்கல் கார்டு பாதிக்கிறது. பெரும்பாலும், ஆசிரியர்களும் பாடகர்களும் தான் இதில் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

* பாலிப் (Polyp) என்ற பிரச்னை, ஒரு பக்கம் அல்லது இரு பக்க வோக்கல் கார்டிலும் வரும். இந்தப் பிரச்னை வீக்கம், கட்டி, கொப்பளம் என அவரவரின் நிலையைப் பொறுத்து வரலாம். ஆனால், நாட்யூலைவிடப் பாலிப் பெரியதாக இருக்கும். பொதுவாக, இந்தப் பிரச்னை தெருவோர வியாபாரிகள், சிறுவணிகர்கள், அல்சர் நோயாளிகள், புகைபிடிப்பவர்கள் ஆகியோருக்கு வரும்.

அறிகுறிகள் என்னென்ன?

* குரலில் மாற்றம், கரடுமுரடான குரல், பேசவே முடியாமல் குரலின் சத்தம் குறைவது

* மூச்சுவிடுவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு

* அதிகமாகக் குரலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் களைப்பு

* உச்ச ஸ்தாயியில் (High Pitch) பேச முடியாமல் போவது.

என்னென்ன டெஸ்ட்?

இதுபோன்ற தொடர் குரல் மாற்றங்கள் இருப்பவர்கள், மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். லாரிங்கோஸ்கோப்பி/ ஸ்ட்ரொபொஸ்கோப்பி (Laryngoscopy/Stroboscopy) மற்றும் வீடியோஎண்டோஸ்கோப்பி (videoendoscopy) ஆகிய டெஸ்ட்களின் மூலம் பிரச்னை, அதன்  தீவிரம் ஆகியவை  உறுதிசெய்யப்படும்.

தீர்வுகள்?

குரலைப் பயன்படுத்தும் தொழிலில் இருப்பவர்கள், சில மணி நேரங்களுக்கு அமைதியாக இருப்பதே பிரச்னையைப் பாதியாகக் குறைத்துவிடும். தொண்டைக்கு எவ்வளவு வேலை தருகிறோமோ, அந்தளவுக்கு ஓய்வும் தரவேண்டும். கிருமிகளால் ஏற்பட்ட பிரச்னை எனக் கண்டறிந்தால், மருத்துவர் பரிந்துரைப்படி ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் சாப்பிடலாம். மாறாக, அல்சரால் ஏற்பட்ட பாதிப்பு என்றால், அல்சரைக் குணப்படுத்தும் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். சிலருக்குப்  பிரச்னை பெரிதாகி, குரல் பழையநிலைக்குத் திரும்பவில்லை என்றால், வீடியோஎண்டோஸ்கோப்பி மூலமாக நோயின் வீரியம் கண்டறியப்பட்டு, லேசர் முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

 - ஜெ.நிவேதா

குரலைப் பாதுகாக்க வேண்டியவர்கள்

ஆசிரியர், தொகுப்பாளர், செய்தித் தொகுப்பாளர், தெருக்களில் வணிகம் செய்யும் சிறு வணிகர், மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ்மேனாகப் பணிபுரிபவர், வாய்ஸ் ஆர்டிஸ்ட், பாடகர், மேடைப் பேச்சாளர், தெருக்கூத்துக் கலைஞர்கள் போன்றோர் தங்கள் குரலை மருத்துவர் ஆலோசனைப்படி பராமரிக்கவேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு