தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

சாப்பிடும் உணவு சுவையாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு சமீபகாலமாக  அதிகரித்துவருகிறது. குடும்பத்தில், குழந்தைகள் முதல் சீனியர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழ ஆரோக்கியமான உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டு, செய்துகாட்டுகிறார் சமையல்கலைஞர்  ஹரிதா படவா கோபி.

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

பீட்ரூட் சாப்ஸ்

தேவையானவை:
பெரிய பீட்ரூட் - 2 (வேகவைத்து, தோல் உரித்து, சதுர துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு - 8 பல், மிளகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, கடுகு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, சிறிது நேரம் வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

இதைச் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

பொட்டேட்டோ - கேஷ்யூ கிரேவி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: குட்டி உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து, தோலுரிக்கவும்), வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை- சிறிய துண்டு, தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், ஏலக்காய் - 2, லவங்கம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) இலைகள் - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தயிர் - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்த மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முந்திரிப்பருப்புடன், ஏலக்காய், தனியா, பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருளைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு... பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிக்ஸியில் அரைத்த பொடி, தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். தயிர் நன்கு கலந்தவுடன் மிளகாய்த் தூள், சர்க்கரை, உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கஸூரி மேத்தி (வெந்தயக்கீரை) இலைகள், கொத்தமல்லித்தழை தூவவும்.

இதைச் சூடான சாதத்துடனோ, சப்பாத்தி, பூரியுடனோ பரிமாறலாம்.

பனீர் பசந்தா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: பனீர் - 500 கிராம், தக்காளி - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - பாதியளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் பனீருடன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி தனியே எடுத்துவைக்கவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடாக்கி, பனீர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), சோம்புத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கி இறக்கவும். மேலே எலுமிச்சைப் பழம் பிழிந்து பரிமாறவும்.

கருணைக்கிழங்கு - லெமன் ஃப்ரை

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: கருணைக்கிழங்கு - 250 கிராம், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் சீவி, டைமண்ட் வடிவத்தில் நறுக்கி, வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்கவும். இதில் கருணைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் பிசிறி, எலுமிச்சைச் சாற்றை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, கருணைக்கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பேக்டு காலிஃப்ளவர்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, மெக்ஸிகன் ஹெர்ப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - சிறிதளவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சுடுநீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, நீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி காலிஃப்ளவர் துண்டுகளைப் பரப்பவும். மெக்ஸிகன் ஹெர்ப்ஸ், ஆரிகானோ, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து மேலே தூவவும். 108 டிகிரியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசைக்கல்லில் சமைக்கலாம்.

பீன்ஸ் - பனீர் டிலைட்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: பீன்ஸ் - 250 கிராம், பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பீன்ஸ், பனீரை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியே வைக்கவும். பனீருடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசிறி தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி, பனீரைப் போட்டு பொரித்து எடுத்து, தனியே வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மேலும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் பீன்ஸ் கலவை, தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, பனீர் கலவை சேர்த்து மூடி வேகவிட்டு இறக்கவும்.

வெண்டைக்காய் - வேர்க்கடலை ஸ்டஃப்பிங்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: வெண்டைக்காய் - 500 கிராம், வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயின் மேல், கீழ் பாகங்களை நறுக்கிவிட்டு நடுவில் ஒரு கீறல் போட்டு உள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும். வெறும் வாணலியில் கடலை மாவைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் கடலை மாவுடன் வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியை கீறிய வெண்டைக்காய் உள்ளே நிரப்பவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் சற்று கூடுதலாக எண்ணெய்விட்டு, வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுக்கவும். பொரித்த வெண்டைக்காய் மீது வறுத்த வெங்காயம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கேழ்வரகு - பனீர் சேமியா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: கேழ்வரகு சேமியா (ராகி சேமியா) - 250 கிராம், பனீர் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும். நன்கு கொதிக்கும் நீரில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பனீரைச் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை மேலும் வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சேமியா, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

பச்சைப் பயறு சமோசா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: பச்சைப் பயறு - 200 கிராம், மைதா மாவு - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பச்சைப் பயறை நன்றாக வேகவைத்து மசிக்கவும். இதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா உருண்டைகளை முக்கோண வடிவத்தில் திரட்டவும். ஒவ்வொரு முக்கோணத்தையும் கப் போல செய்து, நடுவே பச்சைப் பயறு மசாலாவை வைத்து ஓரங்களைத் தண்ணீர் தொட்டு மூடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

சௌசௌ பொடிமாஸ்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்) - 2 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். சௌசௌவைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மொறுமொறுவென்று வரும்வரை வறுக்கவும்.. இதனுடன் வேகவைத்த சௌசௌ சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மஷ்ரூம் - பூண்டு மசாலா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம், பூண்டுப் பல் - 10, பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமின் அடிப்பாகம் நீக்கி இரண்டாக நறுக்கி, கழுவி சுத்தம் செய்யவும். பூண்டைத் தோல் உரித்து தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி... வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்கு வதங்கி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், ம‌ஷ்ரூம் - பூண்டு மசாலா ரெடி.

பனீர் சில்லி ஃப்ரை

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: பனீர் - 250 கிராம் (டைமண்ட் வடிவில் நறுக்கவும்), குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - சிறிதளவு, சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பனீருடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, அஜினமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். குடமிளகாய் பாதி வெந்த பின்பு பனீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக வேகவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சோயா கபாப்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: மீல் மேக்கர் (சோயா சங்க்ஸ்) - 250 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், மிளகு - 8 (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மீல் மேக்கரை வெந்நீரில்             ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்திருந்து நீரைப் பிழிந்து எடுக்கவும். கடலைப்பருப்பை நன்கு வேகவைக்கவும். ஆறிய பின் கடலைப்பருப்புடன் மீல் மேக்கர் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டவும். பிறகு, தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி, செய்து வைத்த கபாப்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு: எண்ணெயில் பொரித்து எடுத்தும் தயாரிக்கலாம்.

கோதுமை சேமியா பிரியாணி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: கோதுமை சேமியா - 250 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பீன்ஸ் - 3, கேரட் - ஒன்று, பிரிஞ்சி இலை - ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு, காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்), உருளைக்கிழங்கு - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, கோதுமை சேமியா சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பூசணிக்காய் கோஃப்தா கறி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: வெள்ளை அல்லது மஞ்சள் பூசணிக்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பூசணிக்காயை விதை, தோல் நீக்கித் துருவவும். இந்தத் துருவலில் உள்ள நீரை கைகளால் பிழிந்து வடித்துவிடவும். துருவிய பூசணிக்காயோடு சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.. பிறகு, அதே வாணலியில் மீதமிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மீதமுள்ள மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்றாக கொதித்து கிரேவி பதத்துக்கு வரும்போது பொரித்து வைத்த கோஃப்தா உருண்டைகளைப் போடவும். மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சன்னா புலாவ் 

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: சன்னா (கொண்டைக்கடலை) - 100 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சன்னா மசாலா பொடி - 2 டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சன்னாவை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து, வேகவைத்து எடுக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து  பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சன்னா மசாலா பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, வேகவைத்த சன்னா சேர்த்து நன்கு வதக்கவும். சன்னாவில் மசாலா நன்றாக சேர்ந்த பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பேபி கார்ன் பெப்பர் ஃப்ரைடு ரைஸ்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: பேபி கார்ன் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), பாசுமதி அரிசி - 100 கிராம், வெள்ளை மிளகு - 4 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), அஜினமோட்டோ (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து வேகவைத்து எடுக்கவும். பேபி கார்னை தனியாக வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வும். இதனுடன் பேபி கார்ன், மிளகுத்தூள், உப்பு, (விருப்பப்பட்டால்) அஜினமோட்டோ சேர்த்து வதக்கவும். பிறகு, வடித்து வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

சொதி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: தக்காளி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் (முதல் பால், இரண்டாவது பால்) - தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, இரண்டாவது தேங்காய்ப் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும், முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கேப்ஸிகம் - வேர்க்கடலை கறி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - தலா ஒன்று (விரும்பிய வடிவில் நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - 100 கிராம், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்த பொடி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

குறிப்பு: குடமிளகாய் நன்கு வேகாமல், கொஞ்சம் `நறுக் நறுக்’கென்று இருந்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் கோஃப்தா கறி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து வைக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு, ஒரு பாகம் வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மீதம் உள்ள வெங்காயம் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்ப்பாலை சேர்த்து, பொரித்து வைத்த உருண்டைகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

லேடிஸ் ஃபிங்கர் -  கேஷ்யூ மசாலா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். சுடுநீரில் முந்திரிப் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் வெண்டைக்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பு விழுது, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியாக வந்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கலக்கவும்.

காலிஃப்ளவர் பூரி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, கோதுமை மாவு - 200 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசையவும். காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும்.

மீல் மேக்கர் மஞ்சூரியன்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: மீல் மேக்கர் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சூடான நீரில் மீல் மேக்கரைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து எடுக்கவும். அதைப் பிழிந்துவிட்டு, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், மீல் மேக்கர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிட்டு இறக்கவும்.

கொள்ளு சாம்பார்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: கொள்ளு - 200 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), விரும்பிய காய்கறிகள் கலவை (முருங்கைக்காய், மாங்காய், பூசணிக்காய்) - ஒரு கப், தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடியளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெல்லம் - 50 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு, வெந்தயம், புளி, வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். கொள்ளுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைச் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொள்ளு, அரைத்து வைத்த விழுது, உப்பு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். இதைச் சாதத்துடன் பரிமாறலாம்.

ஸ்பானிஷ் ரைஸ்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: பாசுமதி அரிசி - 200 கிராம், டொமேட்டோ ப்யூரி - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் - 10 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் வெண்ணெயைவிட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த சாதம், டொமேட்டோ ப்யூரி, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பாகற்காய் மசாலா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: சிறிய பாகற்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாகற்காயின் ஓரங்களை நறுக்கிவிட்டு, நடுவில் சிறு கீறல் போட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும். (முழுவதுமாக நறுக்கக் கூடாது). வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். ஆறிய பின் இந்தக் கலவையைப் பாகற்காயின் நடுவே அடைக்கவும். பிறகு பாகற்காயை நூலால் கட்டி சிறிது நேரம் ஊறவிடவும் (உள்ளிருக்கும் மசாலா வெளியில் வராமல் இருப்பதற்காக). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பாகற்காய்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் (நூல் தானாகப் பிரிந்து வந்துவிடும்). சுவையான பாகற்காய் மசாலா ரெடி.

பொட்டேட்டோ கப்ஸ்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: உருளைக் கிழங்கு - 250 கிராம் (தோல் சீவி துருவவும்), க்யூப் சீஸ் - 6 (துருவவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: துருவிய உருளைக் கிழங்கில் இருந்து தண்ணீரைப் பிழிந்தெடுக்கவும். இதனுடன் சீஸ் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிய கப்களில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை உள்ளே போட்டு நன்றாக அழுத்தவும். பின்னர் கப்பை திருப்பித் தட்டினால், சிறு சிறு கப் வடிவில் கலவை வெளியே வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொட்டேட்டோ கப்புகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தானியம் - சம்பா பிசிபேளாபாத்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: சம்பா ரவை - 200 கிராம், தானியக் கலவை (பச்சைப் பயறு, மொச்சை, வெள்ளைக் காராமணி, சிவப்புக் காராமணி, வெள்ளைக் கொண்டைக்கடலை, கறுப்புக் கொண்டைகடலை) - ஒரு கப், துவரம்பருப்பு - 2 கப், வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புளிக்கரைசல் - ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே தானியங்களைத் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் களைந்து அரைவேக்காடு பதத்தில் வேகவைத்து எடுக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தானியங்கள், உப்பு, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, புளிக்கரைசல், சம்பா ரவை, சாம்பார் பொடி சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ராஜ்மா பிரியாணி

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: ராஜ்மா - 200 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை விட்டு இறக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு உருக்கி, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், ராஜ்மா பிரியாணி ரெடி.

சோயா பக்கோடா

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

தேவையானவை: சோயா - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி, சோயாவைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு சோயாவைப் பிழிந்து எடுக்கவும். பிறகு, சோயாவைக் கையால் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு மசித்து தனியே எடுத்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சோயா, கடலை மாவு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோயா கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தொகுப்பு: த.கதிரவன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்