பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

குமரன், பழவேற்காடு.

``தோள்பட்டை வலிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உண்டா? அதேபோல, `தாடைவலி வந்தாலும் இதயப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்கிறார்களே... உண்மையா?’’

கன்சல்ட்டிங் ரூம்


அர்த்தநாரி,
முதன்மை இதய நோய் நிபுணர், சென்னை.

``தோள்பட்டை வலிக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் உள்ளது. மார்பகங்களுக்குச் செல்லும் நரம்புகளும் இடது தோள்பட்டைக்குச் செல்லும் நரம்புகளும் ஒன்றுதான். எனவே, மாரடைப்பு வரும் நேரத்தில் 90 சதவிகிதம் தோள்பட்டையில் தான் வலி ஆரம்பிக்கும். அந்த வலி தோள்பட்டையில் தொடங்கி விரல்கள் வரை பரவும். மேலும் தாடைவலி, பல்வலி, தொண்டைவலி, தொண்டை அடைப்பு போன்ற அறிகுறிகளும் மாரடைப்போடு தொடர்புடையவைதாம். 40 வயதுக்கு மேல் உள்ள ஒருவருக்கோ, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் இருப்பவர் களுக்கோ மேற்சொன்ன அறிகுறிகள் வந்தால், அவை மாரடைப்புக்கான எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த நேரத்தில், இதய நோய் நிபுணர்களிடம் சென்று ஆலோசனை பெறவேண்டியது அவசியம். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., ஆஞ்சியோகிராம் ஆகிய பரிசோதனைகளைச் செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார். மருத்துவர் ஆலோசனையின்படி சரியான டயட், வாழ்வியல் முறைகளில் மாற்றங்களைப் பின்பற்றுவது மற்றும் மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும். நவீன முறைகள் வந்துவிட்டதால், எளிதாக இதய நோயைக் கண்டுபிடித்து, உரிய சிகிச்சை கொடுத்து நோயாளிகளைக் காப்பாற்றிவிடலாம்.’’

பீமா, மேலூர்.

``என் 9 வயது மகன், தினமும் தூக்கத்தில் ஏதோ புலம்புகிறான். தூக்கத்தில் பேசுவது சாதாரணமானதா அல்லது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா?’’

கன்சல்ட்டிங் ரூம்


ராஜீவ் நந்தா,
மனநல மருத்துவர்


``தூக்கத்தில் பேசுவதும் நடப்பதும் ஒருவிதமான மனநலப் பிரச்னை. இதை, `பாராசோம்னியா’ (Parasomnia) என்பார்கள். பாராசோம்னியாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், `ஸ்லீப் டாக்கிங்’ (Sleep Talking). இதற்கான அறிவியல் பெயர் `சோம்னிலோகி’ (Somniloquy). தூக்கத்தில் பேசுபவர்கள், மனநோயாளிகள் கிடையாது; பெரிய பிரச்னை எனப் பயப்படவும் வேண்டாம். இதற்காகப் பிரத்யேக மருந்துகளோ சிகிச்சையோ அவசியம் இல்லை. ஒரு சிலர் தூக்கத்தில் நடந்துகொண்டும் புலம்பிக்கொண்டும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் சிகிச்சை தேவைப்படும். கவலை, மனஅழுத்தம், மனச்சோர்வு போன்றவை அதிகமாக இருந்தால், தூக்கத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இந்தப் பிரச்னைக்கு, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் தரலாம். பெரும்பாலானவருக்குக் கவுன்சலிங் கொடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு