Published:Updated:

பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?
பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?

உணவுஆர்.பாலமுருகன், ஆயுர்வேத மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

சாதாரண சமையலைக்கூட விருந்து போல கமகமக்க வைக்கும் வலிமை, வாசனை திரவியங்களுக்குத்தான் உண்டு. இது நல்ல சுவையான உணவைச் சாப்பிட்ட திருப்தியைத் தந்துவிடும். அந்த விதத்தில், பெருங்காயத்துக்கு எப்போதுமே மிகப்பெரிய பங்கு உண்டு. சாம்பார், ரசம், மோர் என எதில் பெருங்காயத்தைக் கலந்தாலும் அதன் வாசனை சுண்டி இழுக்கும் . அவற்றின் சுவையும் கூடிவிடும். எந்தளவுக்குச் சுவையும் மணமும் தருகிறதோ அதே அளவுக்கு மருத்துவக் குணங்களுக்கும் இதற்கு உண்டு. பழங்காலந்தொட்டே நம் சமையலறையில்  தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது பெருங்காயம். ஆனால், அண்மையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெருங்காயம் பற்றிப் பகிரப்படும் செய்திகள் நம்மை கொஞ்சம் அச்சுறுத்தவே செய்கின்றன.

பெருங்காயம் உடல் நலனுக்கு நல்லதா... கூட்டுப் பெருங்காயம் என்ற பெயரில், விற்பனையாகும் பெருங்காயம் கலப்படம் செய்யப்பட்டதா... அவை ஆரோக்கிய மானவைதானா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.அவை எல்லாம் உண்மைதானா? விரிவாகப் பார்ப்போம்...

பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?

பெருங்காயம்

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ இது வெறும் வார்த்தை மட்டுமல்ல. தமிழர்களின் உயரிய வாழ்வியல் தத்துவம். இப்படி மருந்தாகப் பயன்படுத்தப்படும் உணவுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு பெருங்காயம் (Asafoetida) என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் அரேபிய வளைகுடா நாடுகளில்தான் பெருங்காய மரங்கள் அதிகமாக விளைகின்றன. இவை 2 - 3 மீட்டர் நீளத்துக்கு சிறிய மரங்களாக வளரக் கூடியவை. இதன் தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்துப் பக்குவப்படுத்திக் காய வைத்தால், அதுதான் பெருங்காயம். மரத்தில் ஏற்படுத்தப்படும் பெரிய காயத்திலிருந்து கிடைப்பதால் இது பெருங்காயம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?பால் பெருங்காயம்

பெருங்காயம், கருஞ்சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான நிறங்களில் பிசின் வடிவில் கிடைக்கிறது. இதில் வெண்மை நிறப் பெருங்காயமே பால் பெருங்காயம் எனப்படுகிறது, இது நல்ல மணமும் அதிக மருத்துவக் குணங்களும் கொண்டது. இந்தப் பெருங்காயம் பால்காயம் என்ற பெயரில் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது.

அசல் பெருங்காயத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. அவ்வளவு காட்டமாக இருக்கும். ஆயுர்வேதத்தில் இதை ‘உக்கர கண்டம்’ என்பார்கள். அதாவது, பெருங்காயத்தின் நெடியை, கோமாவில் இருக்கிற ஒருவராலேகூட உணர முடியும் என்கிறது ஆயுர்வேத மருத்துவ நூல் குறிப்பு.

மேலும், சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் இன்றளவிலும் முக்கியமான பல்வேறு நோய்களுக்குப் பால் பெருங்காயம், மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவக் குணங்கள்

பெருங்காயத்தை உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, அந்த உணவு எளிதில் செரிமானமாகும். வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கும். உடல் மற்றும் குடலில் வாய்வைத் தங்க விடாது. இப்படி இதன் மருத்துவக் குணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?

கூட்டுப் பெருங்காயம்

இதன் மகத்துவத்துக்கேற்ப இதன் விலையும் அதிகம்தான். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தனிப்பெருங்காயம் அதன் தரத்துக்கேற்ப கிலோ 200 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 12 ஆயிரம் ரூபாயிலும் விற்பனை ஆகிறது. இந்த விலை வித்தியாசம் எப்படி சாத்தியமாகிறது என்று யோசித்தாலே அது தரமானதல்ல. கலப்படம் என்பது புரிந்துவிடும்.

இதனால்தான் தரமான பெருங்காயம், சுத்தமான பெருங்காயம் என்று விற்பனை செய்யாமல் கூட்டுப் பெருங்காயம் என்று கூவிக்கூவி விற்கிறார்கள். மேலும், கூட்டுப் பெருங்காயம் என்பதாலே ஏதோ கூட்டில் சேர்க்கும் பொருளோ என்று நினைத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இது மட்டமான வியாபாரத் தந்திரமே தவிர வேறு எதுவும் இல்லை.

பெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா?இந்தக் கூட்டுப் பெருங்காயத் தூளானது, பெருங்காயப் பசையுடன் மைதா மாவு மற்றும் அரேபியக் கோந்து கலந்து விற்கப்படுகிறது. இப்படிக் கோந்து அதிகம் உள்ள பெருங்காயம் பார்ப்பதற்குக் கறுப்பு நிறத்தில் இருக்கும். இதனை, ‘கறுப்புப் பெருங்காயம்’ என்றும் கூறுவர்.

இதில் சேர்க்கப்படும் மைதா என்பது பெருங்காயத்தின் மருத்துவத் தன்மைக்கு நேரெதிரான குணங்களைக் கொண்டது. குறிப்பாக எளிதில் செரிமானமாகாது; மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இரண்டையும் சேர்க்கும் போது நிச்சயமாகப் பெருங்காயத்துக்கான பலன்கள் கிடைக்காது. வயிற்றுப் பிரச்னையையோ, ஜீரண பிரச்னையையோ உருவாக்கும்.

ஒருவேளை, இந்த கலப்படப்பெருங்காயமும் எளிதில் செரிமானம் ஆகிறது, பெருங்காயத்துக்கான மருத்துவப் பலன்களைக் கொடுக்கிறது என்றால் அது பெருங்காயத்தால் கிடைத்ததாக இருக்காது. இதற்காக வேறு வேதியியல் மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. கோந்தையும் மாவையும் சேர்த்து தயாரிக்கப்படும் கறுப்புப் பெருங்காயத்தில் ஒரு வகை எசென்ஸைச் சேர்த்துக் கலவையாகத் தயாரிக்கின்றனர். இந்த எசென்ஸே பெருங்காயத்திற்கு வாசனையைக் கொடுக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயப் பால் அதிகம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘பால் பெருங்காயம்’ ஆர்கானிக் ஸ்டோர், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. இதனை வாங்கிப் பயன்படுத்தலாம்.

கவனம்


பெருங்காயம், வீரியமான மருத்துவ உணவு. குறிப்பாக, இது உடலுக்கு உஷ்ணத்தைத் தரக் கூடியது. எனவே, பெருங்காயத்தை யாரெல்லாம் சேர்க்கக் கூடாது என்று வரையறுக் கப்பட்டுள்ளது. பித்தம், அல்சர், வாய்ப்புண், சிறுநீர்ப் போக்கு எரிச்சல், அதிக உதிரப்போக்குள்ள பெண்கள் கட்டாயம் சேர்க்கக்கூடாது.

- ஜி.லட்சுமணன்

கலப்படமில்லாத பெருங்காயம் கண்டறிவது எப்படி?

நீரில் ஒரிஜினல் பெருங்காயத்தைக் கலந்தால், நீரானது பால் போல வெண்மையாக மாற வேண்டும். ஆனால், இதற்காகச் சோப்புத் துகள்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் சுத்தமான பெருங்காயம் முழுவதும் நீரில் கரைந்துவிடும்; அடியில் தங்காது.

அதேபோல, சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம்போலப் பற்றிக் கொண்டு முற்றிலும் எரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு