Published:Updated:

உடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது தளராத தன்னம்பிக்கை கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது  தளராத தன்னம்பிக்கை கதை!
உடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது தளராத தன்னம்பிக்கை கதை!

ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

``அப்போ எனக்கு பதினைஞ்சு வயசு.  நடக்க சிரமமா இருக்குன்னு டாக்டர் கிட்ட போனேன். எல்லா சோதனைகளையும் செஞ்சு பார்த்துட்டு  உனக்கு முப்பது வயசு வரும் போது வீல் சேர் தான்னு பேரதிர்ச்சியைத் தந்தார். இன்னும் பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு நடக்க  முடியாதுன்னு தெரிஞ்சா ஒரு மனுஷனோட மனநிலை எப்படி இருக்கும்?  எனக்கும் இருந்தது. ஆனா, அந்த மனநிலையை மாத்திக்க ஆரம்பிச்சேன். என்னை அந்தத் துயரத்துலிருந்து  வெளியே கொண்டு வந்தது இசைதான். அந்தத் தேடல் இப்போ என்னை இசையமைப்பாளராவும் மாத்தி ஓர் அடையாளத்தைக் கொடுத்திருக்கு..." மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ரகுராம்.

ரகுராம் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். மனிதனை உருக்கிவிடும் அந்த கடும் நோயைச் சகித்துக்கொண்டு  இசைத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.  ‘ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.

உடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது  தளராத தன்னம்பிக்கை கதை!

"எல்லா உயிருக்கும் இறைவன் ஒரு எக்ஸ்பயரி டேட் கொடுத்திருப்பார். தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு அதை சீக்கிரமா குறிச்சிட்டார் அவ்வளவுதான். மறுபடி சொல்றேன் இதைச் சொல்றதனால் நான் ஒரு நெகட்டிவான ஆளுன்னு நினைக்க வேண்டாம். ஏன்னா என்னைப் பாதிச்ச நோயின் தன்மை அப்படி. அப்போ எனக்கு முன்னால ரெண்டு ஆப்ஷன்ஸ் இருந்தன.  எல்லாம் முடிஞ்சதுன்னு சோர்ந்து போய் வீல் சேர்லயே முடங்கிக்கிடக்கிறது... அல்லது, அதைப் புறந்தள்ளிட்டு நமக்குப் பிடிச்ச விஷயத்தில் சாதிக்கறது. நான் ரெண்டாவதைத்  தேர்ந்தெடுத்தேன்...'' நம்பிக்கை மனிதராகச் சொல்கிற ரகுராமை மீட்டெடுத்ததும், வாழவைத்திருப்பதும் அவரது இசைஆர்வம்தான்.

''காலையில் எழுந்திருக்கறதில ஆரம்பிச்சு, சாப்பிடறது, நடக்கறதுனு எல்லாத்துக்கும் இன்னொருத்தர் உதவி தேவைப்படும். வலி இருந்துக்கிட்டே இருக்கும். அந்த வலியை மறக்கறதுக்கான மருந்தாக என்கிட்ட இருந்தது இசைதான்.

நல்லா படிக்கற மாணவன் நான். இந்தப் பாதிப்பு வந்ததுக்குப் பிறகு ஸ்கூலுக்கு நடந்து போறது, படி ஏறுவதுனு எல்லாத்துக்கும் சிரமப்பட்டேன். ‘ஏன் மந்தமா இருக்கே?'னு ஆசிரியர்கள் கேட்பாங்க. ‘என்னால முடியல'னு சொன்னா நம்பமாட்டாங்க. டீச்சர்களால என் பிரச்னையைப் புரிஞ்சுக்க முடியல. ஏன்னா,  என் கைகால் எல்லாம் பார்க்கிறதுக்கு நல்லாயிருக்கும்.  சரி இவங்களுக்குப் புரிய வைக்கறதுக்குப் பதிலா நாம படிப்பை நிறுத்திடலாம்னு முடிவு பண்ணி, பத்தாவதோட படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டேன்..

படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லைனு நம்பறவன் நான். ரொம்பப் பின் தங்கிய ஊர்ல இருந்து வந்து இசையமைப்பு பற்றி டெக்னிக்கலா நிறைய விஷயங்களைக் கத்துகிட்டு, இசையமைச்சு, சவுண்ட் மிக்ஸ் பண்ற அளவுக்கு முன்னேற முடிஞ்சதுக்குக் காரணம் என் தேடல்.  எனக்கு மட்டுமில்லை... யாரா இருந்தாலும் தேடல், அவங்கள வழிநடத்திக் கொண்டு போயிடும்.

இசைதான் இனிமேனு முடிவு பண்ணினதும் நண்பர்களோடு சேர்ந்து இசைக்குழு ஒண்ணு ஆரம்பிச்சோம். கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போய் வாசிக்கறதுதான் வேலையே. ஊர் ஊரா போய் வாசிப்போம். அப்படி வாசிக்கும்போது என்னுடைய சொந்தப் பாட்டையும் உள்ள கலப்பேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்போ ஒரு குறும்படம் மூலமா சேலத்தில் ஒரு விளம்பரப்படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து இசையமைக்கணும்னு நிறைய அலைஞ்சேன். இடையில்  விளம்பரப்படங்களுக்கு ஜிங்கிள்ஸ் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. அந்த சமயத்தில்தான் கார்த்திக் சுப்பராஜ், முண்டாசுபட்டி ராம், காக்கா முட்டை மணிகண்டன் இவங்களோட நட்பு கிடைச்சது. அவங்க மூலமா நிறைய குறும்படங்களுக்கு இசையமைச்சேன். ‘கிடாயின் கருணை மனு'வுக்கு முன்னாலயே சினிமா வாய்ப்பு ஒண்ணு வந்தது. பெரிய படம், பெரிய பேனர்.. ஆனா, சில காரணங்களால் அது நழுவிடுச்சு. இங்க ஒரு புது ஆள் உள்ள வந்து இசையமைப்பாளர் ஆகுறதே சிரமமான விஷயம். அதிலும் என்னை மாதிரி ஒரு ஆள்னா இன்னும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதை எல்லாம் மீறி திறமை இருந்தா வாய்ப்பு கண்டிப்பா வந்தே தீரும், அதுதான் எனக்கு நடந்தது...'' சோதனைகளை வென்ற ரகுராமின் மிகப் பெரிய பலங்கள் என்றால், அவரது தன்னம்பிக்கை... அதற்கடுத்து அவரின் மீது அளவிலா அன்பைப் பொழியும் குடும்பமும் நட்பும்தாம்.

உடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது  தளராத தன்னம்பிக்கை கதை!

''குடும்பம், நண்பர்கள் இல்லைனா நிச்சயம் என்னால இவ்ளோ தூரம் வந்திருக்க முடியாது. என் அம்மாவுக்கு நன்றி சொல்லணும், என்னைப் புரிஞ்சுகிட்டதுக்காக. என்னுடைய ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு என் போக்குல விட்டுட்டாங்க. அப்பா எங்ககூட இல்ல. அந்த ஸ்தானத்தில் இருந்தது தாய் மாமன்கள் தான். என்னை இசை படிக்க வெச்சதில் துவங்கி, தன்னம்பிக்கையா வெளிய வர வச்சது வரை அவங்கதான் கூட நின்னாங்க...

நிறைய சிரமப்பட்டிருக்கேன். தனியா எங்கேயும் போகமுடியாது. உதவியாளர் போட்டுப் பார்த்துக்கும் அளவுக்குப் பண வசதி கிடையாது. நண்பர்கள் ஜெயசீலன், ஜாஸ்மின் வீட்லதான் நான் தங்கியிருக்கேன். சென்னைல என்னை தைரியமா என் குடும்பம் விட்டிருக்குன்னா அதுக்குக் காரணம் இந்த ரெண்டுபேர் தான். எங்கேயாவது வெளிய போணும்னா, ஐயோ அங்க படி இருக்குமேனு பயம் வரும். சமதளமா இருந்தா நடந்து போயிடுவேன்.  படி இருந்தா என்னால ஏற முடியாது. இந்த வீல் சேரை திருப்பறதில் ஆரம்பிச்சு, இப்போ நான் இசையமைச்ச படத்துடைய ஆடியோ லான்ச் வரை போய் உட்கார்ந்திருக்கேன்... என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போனது நண்பர்கள்தான்.

நான் நிறைய படிக்கணும்னு  ஆசைப்பட்டேன்.  என்னுடைய நோய் அதுக்கு இடம் கொடுக்கலை. தவிர, இந்த நோயைப் பற்றிய விழிப்புஉணர்வு நம்ம நாட்டுல  ரொம்பக் கம்மி. வெளிநாட்டு நண்பர்கள்கூடப் பேசும்போது, ‘நீங்க எங்க நாட்டுக்கு வந்துடுங்க.. இங்கே உங்களுக்கான எல்லா வசதிகளும் இருக்கு’ன்னு சொல்வாங்க. மக்கள்தொகையில முன்னிலை வகிக்கிற நம்ம நாட்டுல, அந்த விழிப்புஉணர்வு இல்லையேங்கிறது கவலையைக் கொடுக்குது.

தசைச்சிதைவு நோயைப் பத்தி நிறைய பேருக்குத் தெரியலை. ஆரம்ப காலத்துல நான் கால் வலிக்கிறதா சொன்னா, நான் ஏதோ வேலை செய்யச் சோம்பேறித்தனப்பட்டுக்கிட்டு அப்படிச் சொல்றதா நினைச்சிருக்காங்க. என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு நடக்கிறதோ, நிற்கிறதோ பெரிய சிரமம்னு புரிஞ்சுக்காம ‘அதெல்லாம் நீங்களா நினைச்சுக்கிறது... முயற்சி பண்ணினீங்கன்னா நடந்துடலாம்’னு சொல்றவங்க இருக்காங்க. தசைச் சிதைவு நோயை முழுமையா குணப்படுத்த முடியாது. பிசியோதெரபி பண்ண வேண்டியிருக்கும். அதுவும்கூட நோயைக் குணப்படுத்தறதுக்கான சிகிச்சை இல்லை. மூவ்மென்ட்டே இல்லாம போயிடுச்சுன்னா, தசைகள் இன்னும் மோசமான நிலைக்குப் போயிடும்னு அதைத் தவிர்க்கத்தான் பிசியோதெரபி பண்ணச் சொல்வாங்க.

நாம ஒண்ணும் தாழ்வான ஆள் இல்லைனு நம்பிக்கை கொடுத்ததில் விகடனுக்கும் பங்கு இருக்கு. ஒருமுறை விகடன்ல வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி பத்தின கட்டுரை ஒண்ணு  வந்திருந்தது. அவங்க சந்திச்ச பிரச்னைகள், அதை அவங்க தைரியமா கையாண்ட விதம் எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. எந்த பிரச்னை என்றாலும் அதை பாசிட்டிவ்வா பார்க்கணும்ங்கறதை நிறைய கத்துக்கிட்டேன்.

‘ஒரு கிடாயின் கருணை மனு' பட இசை வெளியீட்டு விழா போனபோது, சுத்தி இருந்த மனிதர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவங்க வேலைகளைப் பாத்திட்டிருந்தாங்க. நான் வந்ததும் என்னை கவனிச்சாங்க. அங்க ஒரு கவன ஈர்ப்பு நடந்தது. அதுவும் பாசிட்டிவ்வான விஷயம் தானே. அவங்கள்ல இருந்து நான் கொஞ்சம் ஸ்பெஷல்னு தோணுச்சு.

தசைச் சிதைவு நோயோட தன்மையே போகப்போக தீவிரமாகுறதுதான். முன்னாடி மாதிரி என்னால கீ-போர்ட் வாசிக்க முடியல, அதை என்னால இப்போ உணர முடியுது. எனக்கு அமைஞ்ச டீம் மெம்பர்ஸ் என்னுடைய பிரச்னையைப் புரிஞ்சிக்கிட்டுத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினாங்க. அது அமைஞ்சது கடவுளுடைய அருள்தான். என்னால் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் நம்பிக்கையோட போவேன், அதுக்குப் பிறகு அந்த நம்பிக்கையை இன்னொவருக்குக் கொடுத்து, அவங்கள ஓட வைக்கணும்... "

வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் நம்பிக்கை தேக்கிப் பேசுகிறார் ரகுராம்.

- பா.ஜான்ஸன்

படங்கள்: முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு