Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3

‘நமது உடல் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் திறன்கொண்டது’ என்பதை மருத்துவக் கல்லூரிகள் சொல்லித்தருவதில்லை. பெரும்பாலான நேரங்களில், நாம் நோய் என நினைப்பது தானாகவே சரியாவது இதனால்தான்! அசாதாரண சூழ்நிலைகளில், மிக அரிதாகவே வெளி உதவி தேவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ‘ஒவ்வொரு நோய்க்கும், ஏதோவொரு மருந்து அல்லது அறுவைசிகிச்சை தேவை’ என்றே இங்கு டாக்டர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.

‘‘ஒவ்வொரு மருந்தும் ஒரு நோயைக் குணப்படுத்துவதில்லை. மாறாக, ஒவ்வொரு மருந்தும் வேறொரு நோய் தரும்” என்கிறார், டாக்டர் பி.எம்.ஹெக்டே.

இவர், எம்.ஆர்.சி.பி படித்து, மணிபால் மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியராகவும் முதல்வராகவும் இருந்து, உலக நாடுகளின் உயர்கல்விக்கான பேராசிரியராகச் சுற்றி வரும், மதிக்கத்தக்க மருத்துவர்.

‘‘மனிதனும் பூமியும் வேறு வேறல்ல. ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. இந்த மண்ணை உயிரற்ற ஜடம் என நவீன அறிவியலும், ரசாயன விவசாயமும் கருதுகின்றன. சோலைக் காடுகளின் வானுயர்ந்த மரங்களுக்கு யார் உரமிட்டார், தண்ணீர் பாய்ச்சினார்? ‘எல்லாவற்றையும் நான் சரிசெய்வேன்’ எனும் ஆணவச் சிந்தனையை விடுவோம். ‘மண்ணுக்கும் உயிருண்டு’ என்று சொல்லும் ‘கையா’ சிந்தனையை ஏற்போம். அதுதான் இயற்கை வேளாண்மை. மனம் மாறினால் வேதியியல் பொருட்கள் (மருந்துகள்) வெளியிலிருந்து தேவையில்லை. மருந்துகளும், மருத்துவமனைகளும் வெளியிலிருந்து குவிக்கும் நோய்களால், மனிதன் பெரும் செலவுடன் சாகிறான்” என்றார், வேளாண் மேதை நம்மாழ்வார்.

‘கடைசி வரை ரசாயனங்களையோ, மேலை நாட்டு மருத்துவத்தையோ மறுத்த அவர் என்ன ஆனார்? நோயால்தானே செத்தார்?’ என்று கேள்விகள் கேட்போர் உண்டு. அது சரி... மிகப் பெரிய மருத்துவமனையில், பல நாடுகளின் மருத்துவ விற்பன்னர்களை அழைத்து, கோடிக்கணக்கில் செலவு செய்தவர்களும் சாவதைத்தான் தினம் தினம் பார்க்கிறோமே!

சரி... மருந்தும், மருத்துவமும், மருத்துவமனைகளும் தேவையற்றனவா? ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்கிறார் வள்ளுவர். அது, பிறப்பில் துவங்கும் மாற்று வாழ்வுமுறைக்கே பொருந்தும். அது இல்லாதபோது, மருந்துகள் தேவையே. எனவே, புதிய தலைமுறைக்கு மருந்தின்றி வாழும் வாழ்வுமுறை மாற்றத்தைப் பயிற்றுவிப்பதே அடிப்படை வாழ்வியல் கல்வியாக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3

‘மருத்துவத்தில் அலோபதி எனும் மேலை நாட்டு மருத்துவம் சரியா அல்லது சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி சரியா... எது நீண்ட ஆயுசு தரும்?’

‘ஒரு அலோபதி மருத்துவர், இந்தக் கேள்விக்குத் தீர்ப்பு சொல்லும் தகுதியற்றவர்’ என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரவர் நம்பிக்கைக்கு அவரவர் தெய்வம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். எனவே, அலோபதியில் தரப்படும் மருந்துகள் பற்றி மட்டுமே பேசும் தகுதி எனக்கு ஓரளவு உண்டு என நம்புகிறேன்.

டாக்டர் ஹெக்டே சொன்னது போல், ஒவ்வொரு மருந்தும் ஒரு நிவாரணி அல்ல! அது கெமிக்கல்தான். இப்போதைய மருந்து கம்பெனி விற்பனைப் பிரதிநிதிகள் அவற்றை ‘மருந்து’ என்று சொல்வதில்லை. ‘மாலிக்யூல்’ என நவீன நாமகரணத்துடன் அறிமுகம் செய்கிறார்கள். எனவே ‘அவை மருந்து அல்ல, ஏதோ வேதியியல் பொருட்களின் புதிய கூட்டணி’ என்று அவர்களே சொல்கின்றனர்.

இந்த மருந்துகளை உருவாக்குவது யார்? ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற பரந்த சிந்தனையில் இருக்கும் சித்தர்கள் உருவாக்கித் தருவன அல்ல. பல கோடிகளை முதலீடாகப் போட்டு, உருவாக்கி, பல வணிக உத்திகளுடன் அதிகபட்ச விலையில் விற்று, கொள்ளை லாபம் எடுக்கும் மந்திரம் தெரிந்த அசுர கம்பெனிகளின் உற்பத்தி அவை. உலகில் ஆயுத உற்பத்தியை அடுத்து மிகப் பெரும் பணம் புரள்வது, மருந்து உற்பத்தித் தொழில். இவர்களின் விரல் அசைவில் ஆடும் பொம்மைகளாக அரசுகளே மாறும்போது, மருத்துவர்களை என்ன சொல்வது?

ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க அவை பல நூறு கோடிகளைச் செலவிடுகின்றன. ‘இந்தக் கிருமிக்கு, இந்த நோய்க்கு, இந்த மாலிக்யூல் வேலை செய்யுமா’ என்பதே ஆய்வு. தன்னையே பலி கொடுத்து, ரேடியம் என்ற கதிரியக்கப் பொருளைக் கண்டுபிடித்து, ‘இதற்குக் காப்புரிமை பெற மாட்டேன். அறிவியல் கண்டுபிடிப்பான இது, உலகின் பொதுவுடமை’ என்று அறிவித்த மேரி க்யூரியின் காலம் அல்ல இது. எல்லாவற்றுக்கும் காப்புரிமை பதிவு செய்து, எழுதிய எழுத்து, பேசிய பேச்சு, பாடிய பாடல் என்று அனைத்தையும் காசாக்கத் துடிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட முடியுமா?

‘மருந்து கண்டுபிடி... அல்லது மருந்துக்கு ஏற்ற நோயைக் கண்டுபிடி’ என்பதுதான் மருந்து நிறுவன அதிபர்களின் மூல மந்திரம். நோய்த் தொற்றுக்கு பென்சிலினும், காசநோய்க்கு ஸ்ட்ரெப்டோமைசினும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் மருந்தாக இருந்து பல கோடி உயிர்களைக் காத்தன. இன்றைய புதிய மாலிக்யூல்கள் அப்படி இல்லை. புது மாடல் செல்போன், மாநகரை விட்டு நகரத்தை எட்டும் முன் அவுட் ஆஃப் மாடலாவதைப் போல பயனற்றதாகி விடுகின்றன. டை கட்டிய மருந்து முகவர்கள், புதிய லேமினேடட் அறிமுக வேதப்புத்தகத்துடன் வந்து டாக்டருக்கு வகுப்பெடுப்பது இன்று மருத்துவமனைகளில் காணும் காட்சி. யாருக்கு யார் வாத்தியார் எனும் கேள்வியே எழுகிறது.
இதற்கும் மேலே போய், கவர்ச்சிகரமான உறைகளில் போட்ட மாத்திரைகளை அடுக்குவதுடன் நிற்காமல், ‘இத்தனை வாங்கினால் இத்தனை ஃப்ரீ... இத்தனை ஆர்டர் கொடுத்தால் இது பரிசாகக் கிடைக்கும்...  இத்தனை எழுதினால் இந்த டூர்...’ என்று நவீன சந்தை மாட்டு பேரத்தைத் துண்டு போட்டு மூடாமல் செய்யும் திறமையான மருந்து முகவர்கள் உண்டு. இவை எதற்கும் சிக்காமல், அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, மேஜை முன் அடுக்கும் சாம்பிள்களையும் ஏற்க மறுக்கும் டாக்டர்கள் கூட்டமும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.

அறிமுகமாகும்போது பல நூறு ரூபாய் விலையில் விற்கப்படும் மருந்துகள், வேறொரு புதிய மாலிக்யூல் வந்தவுடன் அதிரடித் தள்ளுபடி விலைக்குத் தள்ளி விடப்படுகிறது. அத்தனை விலை மதிப்புள்ள மருந்து, எப்படி இத்தனை குறைவான விலைக்கு இப்போது தரப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

மருந்துகள் மக்களுக்காகவா... லாபத்துக்காகவா? நாம் எதிர்கொள்ளாமல் தவிர்க்கும் கேள்வி இது. மருந்துகள் மக்களுக்காக என்றால், மருத்துவமும் மக்களுக்காகவே இருக்க முடியும். லாபத்துக்காக என்றால், மருத்துவமும் லாபத்துக்காகவே என்பதை ஏற்றாக வேண்டும். மருத்துவர் ஆவதற்கான கல்வியே வணிகச் சரக்கான பின், மருத்துவம் மட்டும் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? மருத்துவக் கல்வியை வணிகமயமாக்கிவிட்ட சமூகம், மருத்துவரை மட்டும் சேவையாளராக இருக்கக் கேட்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

(நலம் அறிவோம்)

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 3

பெரிய தலைவலிதான்!

லைவலி சாதாரணமாக அனைவரும் அனுபவிப்பது; சாதாரண தலைவலிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். சில தலைவலிகள் தானாகச் சரியாகும்; சில, தற்கொலை வரை இட்டுச் செல்லும். துயரம் தரும் உணர்வுகள், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம். இதற்கு ஓய்வு, உறக்கம், தியானமே மருந்து. மைக்ரைன் எனப்படும் வாந்தியுடன் வரும் ஒற்றைத் தலைவலிக்கு, கைகளை மூடிக்கொண்டு இருட்டறையில் படுப்பதே தீர்வு. பெரும்பாலான தலைவலிகள், நீர்ச்சத்துக் குறைவால் கோடைக்காலங்களில் வரும். இதற்கு தண்ணீர், ஜூஸ் போன்றவையே மருந்து.

அதிகம் இருமினாலும், வயிற்றில் புண் இருந்தாலும், கண் பார்வைக் குறைபாடு இருந்தாலும், பல்லில் பிரச்னைகள் இருந்தாலும், காதில் கோளாறுகள் இருந்தாலும் தலைவலி வரலாம். புகைப்பதும், அதிகக் குடியும்கூட தலைவலி தரலாம். ஏன், சில மருந்துகளும்கூட தலைவலியை ஏற்படுத்தும்.

மூளை மற்றும் நரம்பு மண்டலக் குறைபாடுகளால் ஏற்படும் தலைவலிகள், கவனத்துடன் சிகிச்சை பெற வேண்டியவை.

மற்றபடி தலைவலிக்கு, டாக்டரின் ஆலோசனையின்றி கடையில் வாங்கும் ஒரு ரூபாய் மாத்திரையோ, தைலமோ தேவை இல்லை. தண்ணீர், தூக்கம், தியானம் மற்றும் ஓய்வு போன்றவை செலவின்றி குணம் தரும்!