Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

1965, ஜூன் மாதத்தின் விடியற்காலை. ட்ரங்க் பெட்டி, படுக்கை சகிதம் தஞ்சாவூர் ஸ்டேஷனில் இறங்கி, மருத்துவக் கல்லூரியின் பரந்து விரிந்த வளாகத்தின் பெரிய கட்டடங்களைப் பார்த்து வியந்த காலம் நினைவுக்கு வருகிறது. ஒரு பட்டதாரிகூட இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு, டாக்டராவது, மருத்துவக் கல்லூரியில் சேருவது என்பன அப்போது ஒரு பெரும் கனவு. அந்த வளாகத்தில் நுழைந்தபோது கிள்ளிப் பார்த்து, ‘இது உண்மைதான்’ என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பேராசிரியர்கள் நல்ல ஆங்கிலத்தில் கடகடவென வகுப்பெடுக்க, பாதி புரிந்தும் புரியாமலும் நாட்கள் ஓடின. உடற்கூறு வகுப்பில், அகலமான உயர்ந்த மேஜையின்மீது, கறுத்து விறைத்த உடல்கள் வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன. ‘ஆறு பேருக்கு ஓர் உடல்’ எனச் சுற்றி முதல் நாள் பயத்துடன் நின்றோம். பயம் கலைந்து, மெள்ள உடலைக் கிழித்துப் படித்த நாளில் உரக்கச் சிரித்தோம். பேராசிரியர் முத்து, ‘‘இறந்தவர்கள் வீட்டில் சிரித்துக்கொண்டிருப் பீர்களா? உங்கள் கல்விக்காக உடலைத் தந்துள்ள இவர்களிடம் மரியாதையுடன் இருங்கள்” என்று சொன்னபோது, பாடப் புத்தகம் தர முடியாத வாழ்க்கைக் கல்வி பெற்றோம்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

மூன்றாம் ஆண்டில் மருத்துவமனைப் பயிற்சி... வெள்ளை கோட்டுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு நடந்த முதல் நாளில் பெருமிதம். ‘வாழ்வின் லட்சியத்தையே எட்டிவிட்டது’ போன்ற நினைவு. அப்பாவி கிராம மக்கள், நம்மை கடவுள் போல நினைத்துக் கேட்ட கேள்விகள், முதிர்ச்சியடையச் செய்தன. மஞ்சள் பூசி, அருகம்புல்லைச் செருகியவுடன் பிள்ளையாராகிப் போகிறது சாணி. ‘மாணவன்’ என்பது மாறி, ‘மருத்துவர்’ என்ற மரியாதை சுமையாகத் தோள்களில் ஏறிவிடுகிறது. ஒவ்வொரு நோயாளியும் ஒரு பாடப்புத்தகம் ஆனார். முதல் மரணம், பெரும் அதிர்ச்சி. இரவு விளக்கை அணைத்து மௌனமாக அழுத மனது, படிப்படியாக மரணங்களை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறது. நம்முன் பிரசவ வலியுடன் புரளும் பெண்ணும், ரத்தமும் நீருமாக வெளியே வரும் குழந்தையும் நம்மைப் பக்குவப்படுத்தி, வயதுக்கு மீறிய முதிர்ச்சி பெற்ற மனிதனாக்கிவிடுகிறது. வேறெந்தப் படிப்பும் செய்ய முடியாத ரசவாதத்தை மருத்துவக் கல்லூரி செய்து விடுகிறது. கடுமையான அக்னிப் பரீட்சைகளின் பின், ‘ஹவுஸ் சர்ஜன்’ எனும் தனிப்பொறுப்பு. இரவு, பகல் பார்க்காமல்... சீஃப் இடும் கட்டளைகளை ஓர் ஆசிரம அடிமை போல நிறைவேற்றி, ஓராண்டு புடம் போட்டு வெளியே வரும்போது, முதிர்ந்த டாக்டர்.

கேபிடேஷன் லட்சங்களின்றி, பரிந்துரைகளின்றி, குறுக்கு வழியின்றி, நேர்மையான மூத்த டாக்டர்களின் நேரடியான தேர்வில் இடம் கிடைத்துப் படித்தது. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயைத் தாண்டாத கல்விக் கட்டணம். 100 ரூபாயைத் தாண்டாத ஹாஸ்டல், உணவுக் கட்டணம். யார் தருவார் இந்த அரியாசனம்? எங்களுக்கு வாய்த்த பேராசிரியர்கள், ஒரு மருத்துவனாக வாழும் கலையைக் கற்றுக்கொடுத்தனர். மிடுக்கு, பெருமிதம், சுயமதிப்பு, எதிர்பார்ப்பில்லாத சேவை, துன்புறுவோர் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் நிறைவு, அன்பு, காதல், நட்பு, தோழமை, தியாகம், ஓய்வறியாது கற்கும் கல்வித்தேடல், சுயநிறைவு, மனிதாபிமானம், சுயமரியாதை, நேர்மை, கைமாறு கருதா உழைப்பு அத்தனையும் கற்றதை நினைத்துப் பார்க்கிறேன்.

இன்று என் பேரக் குழந்தையின் ப்ரீ கே.ஜி வகுப்புக்கு லட்சம் செலவு. எனக்கு அரை நூற்றாண்டுக்கு முன் மானுடக் கல்வியை மலிவாகத் தந்த அந்த மருத்துவ ஆலயம் இருக்கும் திசைநோக்கித் தொழுகிறேன். சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்கள் காரும், வீடும், சுகங்களும், மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ வழிகாட்டிய ஆசான்களை வணங்குகிறேன்.

இன்று பல லட்சங்கள் லஞ்சம் கொடுத்து இடம் பிடித்து, பகுதிநேரப் பேராசிரியர்களின் அரைகுறை வகுப்புகளில் கற்று, நோயாளிகளே இல்லாத மருத்துவமனைகளில் பயிற்சி பெற்று, எப்படியோ பட்டத்துடன் வெளிவரும் என் இளைய தலைமுறை டாக்டர்கள் இழக்கும் சொர்க்கத்தை நினைத்துப் பெருமூச்சும், ரகசியக் கண்ணீரும் சிந்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

வாழும் சமூகம் எப்படியோ, அப்படியே அங்கு மனிதனும் உருவாகிறான். மருத்துவரும் அப்படித்தான் உருவாகிறார். விதைப்பதுதான் முளைக்கிறது. ‘விதை ஒன்று விதைத்தால் சுரை ஒன்றா முளைக்கும்’ என்பது நாட்டுப்புறச் சொல்லாடல். இன்று பொதுவாக, ‘டாக்டர்கள் சரியில்லை... பணத்தாசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள். மனிதபிமானமில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் சர்வசாதாரணமாக வீசப்படுகின்றன.

சுமார் 70 வருடங்களுக்கு முன், இந்தியா தன் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த காலம். அப்போது நமது அண்டை நாடான சீனாவும் தனது விடுதலைக்கு கடுமையான போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. கொடுமைகளுக்கும், அராஜகத்துக்கும் பெயர்பெற்ற ஜப்பான் ராணுவம், சீன தேசத்தை வென்று சூறையாடிக்கொண்டிருந்தது. மக்களைத் திரட்டி நீண்ட போர்ப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் மக்கள் தலைவர் மாவோ. சீன மக்கள், போரால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களுக்கு உதவ யாருமில்லை.

அப்போது நேரு, இந்திய மருத்துவர்களுக்கு ஓர் அறைகூவலை விடுத்தார். `‘போர்க்களத்தில் வாடும் சீன மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது நம் கடமை. தம் உயிரையும் பொருட்படுத்தாது சேவை செய்யும் உள்ளம்கொண்ட இந்திய மருத்துவர்கள் இதற்கு முன்வர வேண்டும்” என்றார். அதை ஏற்று, பம்பாயில் இருந்த டாக்டர் கோட்னீஸ், சீனா செல்ல முன்வந்தார். டாக்டர்கள் குழு இந்தியாவிலிருந்து சென்றது. சீனாவின் வடகோடிப் போர்க்களத்தில் கோட்னீஸ் பணியாற்றினார். அவரது சேவையை அறிந்து மாவோவும், சூ என் லாயும் அவரைச் சந்தித்து வாழ்த்தினர். பின் அவர் ஒரு சீன மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த  பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். சீன மண்ணில் டாக்டர் கோட்னீஸ் மரணமடைந்தார். சீன அரசு, அவர் பணியாற்றிய பகுதியின் மருத்துவமனைக்கு அவரது பெயரை வைத்தது. அவரது பெயரால் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தியா வரும் சீனத் தலைவர்கள், தவறாமல் மும்பை சென்று, அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதை ஒரு கடமையாகவே நிறைவேற்றி வருகின்றனர்.

அப்போது இந்தியா விடுதலை பெறவில்லை. நேரு பிரதமராக இல்லை. இருந்தும், அவர் சொன்னதற்காக உயிரைப் பணயம் வைத்து எங்கோ கண்காணாத ஓர் இடத்துக்குச் சென்று சேவை செய்ய டாக்டர்கள் குழுவை உந்தியது எது? பணமா... புகழா?

தன்னலமற்ற நேருவைப் போன்ற அன்றைய தலைவர்களின் தியாக வாழ்வே காரணம். படித்த படிப்பு, பெறும் வருமானம் அனைத்தையும் உதறி சிறை வாசத்தையும், தடியடியையும், தூக்குக் கயிறையும் ஏற்ற தியாக பரம்பரையினர் வாழ்ந்த காலமும், சமூகமும்... ஒவ்வோர் இளைஞனையும் அவர்கள் வழியில் தன்னலம் மறந்து நாட்டுக்குச் சேவை செய்ய உந்தித் தள்ளியது.

இன்று தன்னலமற்ற தலைவர்கள் யார்? காசுக்கு ஆசைப்படாத, தவறு செய்யாத தலைவர்கள் யார்? பட்டம் பதவி மறந்து நாட்டுச் சேவைக்கு வரும் நல்லவர்கள் எத்தனை பேர்? எந்த அரசு அலுவலகத்தில் காசின்றி எது நடக்கிறது? எந்தப் பதவியை, உதவியை, மாற்றத்தை லஞ்சமின்றி எவர் பெற முடிகிறது? சட்டப்படி செய்ய வேண்டிய கடமையையும் கூட காசின்றிப் பெற முடிவதில்லை. வாக்களிக்கத் தரும் காசை மறுக்கும் குடிமக்கள் யார்? கண் முன்னே நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் கோபக்கார இளைஞன் எங்கே?

இவையெல்லாம் இல்லாத நாட்டில், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. பூனைப்படை, அடியாட்கள் படை ஏதுமின்றி, நள்ளிரவிலும் தன்னந்தனியே மருத்துவம் பார்க்க உலவும் மருத்துவரைத் தாக்குவது என்ன வீரம்?
கல்வியை வியாபாரமாக்கி, அரசே கொள்ளைக்கு அனுமதிக்கிறது. கட்டடம் மட்டுமே உள்ள தனியார் கல்லூரிகளில் கோடிகளைக் கொடுத்து மருத்துவராக வேண்டியுள்ளது. கைட்லைன் வேல்யூ 100 ரூபாய் என்றால், 1,000 ரூபாய் கொடுத்து இடம் வாங்கி, மாமனார் கொடுத்த வரதட்சணையில் மருத்துவமனை கட்டும் இளைஞன் என்ன சேவை செய்ய வேண்டுமென இச்சமூகம் எதிர்பார்க்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

ஆனால், இதையும் மீறி ஒவ்வோர் ஊரிலும் அமைதியாக, ஆர்ப்பாட்டம், விளம்பரமின்றி கொடுத்த காசை வாங்கிக்கொண்டு, நள்ளிரவு வரை சேவை செய்யும் டாக்டர்களைப் பார்க்க முடியும். கோவையில் 20 ரூபாய் ஃபீஸ் வாங்கிக்கொண்டு மருத்துவச் சேவை தந்த டாக்டர் பாலசுப்பிரமணியனை, அவர் இறந்தபோதுதான் பலரும் அறிந்துகொண்டோம்.

இப்படிப்பட்டவர்களைக் காணவும், பாராட்டவும் மறுக்கும் அகங்கார சமூகம்தான், டாக்டர்களைத் தண்டிக்கச் சட்டத்தைத் தன் கைகளில் எடுக்கிறது. 36 மணி நேரம் தொடர்ச்சியாக ட்யூட்டி பார்த்து இலவச மருத்துவம் வழங்கும் அரசு மருத்துவமனை டாக்டர்கள்கூட தாக்கப்படுகின்றனர். ஆனால், சமூக விரோதிகளாகச் சுற்றிவரும் எத்தனை பேரை மக்கள் தாக்கியுள்ளனர் என்ற கேள்வி தவிர்க்க முடியாது எழுகிறது.

சமீபத்தில் வந்த ஒரு வாட்ஸ்அப் செய்திதான் நினைவுக்கு வருகிறது. ‘இந்த சமூகத்துக்கு இன்னார் கிடைக்காமல் சே குவாராவா கிடைப்பார்?’ என்றது அது. டாக்டர்கள் சரியில்லை, சரி. டாக்டர்களை உருவாக்கும் சமூகம், குடும்பம், அரசு கல்விமுறை சரியாக உள்ளனவா?

(நலம் அறிவோம்)

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 4

மூன்றே நிமிடங்கள்தான்!

வானொலி கேட்கும்போது சில நேரங்களில் குரல் ஒழுங்கின்றி கொரகொரக்கும். டி.வி திரையில் படம் தாறுமாறாக சிதையும். இவற்றுக்கு மின்தகவல்தொடர்புக் கோளாறே காரணம். இதுபோல மூளையும் நரம்புகளும் இடும் கட்டளைகளை, சில சமயங்களில் தசை கேட்காமல் போய்விடும். இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.

கை, கால், உடல் முழுவதும் முறையற்ற இழுப்பு வந்து, மயக்கமடைந்து சுயநினைவு இழப்பது ஒரு வகை. உடலின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் வலிப்பு உண்டாவதும், சுயநினைவை இழக்காமல் இருப்பதும் இன்னொரு வகை. சிலருக்கு முகம் மற்றும் உடலின் ஒரு சிறு தசைப்பகுதியில் துடிப்பு உண்டாவதும் உண்டு.

வலிப்புக்குப் பல காரணங்கள். மூளை மற்றும் நரம்புக்கோளாறு, மூளையில் அடிபடுதல், அதிகக் காய்ச்சல், ரத்த சர்க்கரை மாற்றம், தூக்கமின்மை, மன உளைச்சல், பசி, அதிக ஒலி மற்றும் ஒளி பாதிப்பு, மதுபோதை ஆகியவற்றோடு மரபுரீதியான காரணங்களும் இருக்கலாம். உலகில் ஆறரை கோடி பேர் வலிப்புடன் வாழ்கின்றனர். வலிப்பு வராமல் தடுக்க பல மருந்துகள் இருந்தும், பூரண குணம் தரும் மருந்து ஏதுமில்லை. வலிப்பு உண்டாக்கும் மூளையின் பகுதியை அறிந்து, அதை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் அறுவைசிகிச்சை புதியது. இத்தனை இருக்க, கையில் சாவி கொடுப்பது என்பது, மாமியாரிடமிருந்து சாவியை வாங்கும் உத்தியே தவிர வேறு இல்லை. எந்த வலிப்பும் மூன்று நிமிடங்களுக்கு மேல் தொடராது என்பதால்தான், சாவி வைத்தியம் பலன் தருகிறது. வலிப்பு தடுக்கும் மருந்துகளுடன், ஜூஸ், தண்ணீர், சர்க்கரை, நிழல், ஓய்வு, உறக்கம் என எல்லாமும் இருந்தால் நிம்மதி.