Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7

நியாயமான விலையில் மருந்து! - வந்துவிட்டன மக்கள் மருந்தகங்கள்டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7

நியாயமான விலையில் மருந்து! - வந்துவிட்டன மக்கள் மருந்தகங்கள்டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7

ருந்துகளின் விலை, எட்டாத உயரத்துக்கு ஏறிவிட்டது. ஐம்பது வயது தாண்டினாலே, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயக் கோளாறு என்று ஏதோ ஒன்றுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை. மாதம் குறைந்தது 3,000 ரூபாயை மருந்துக்கு மட்டும் ஒருவர் ஒதுக்க வேண்டியுள்ளது. சமாளிக்க முடியாமல் புலம்புவோர் ஏராளம். ‘நோய்களைவிட நோய்களுக்கான தீர்வுகளே கொல்கின்றன’ என்போரையும் காண்கிறோம். மருத்துவக் கடன் சுமை தாங்காமல் தற்கொலைகள் பெருகி வருகின்றன.

இந்த புலம்பலுக்கு நியாயமான தீர்வாக, மத்திய அரசின் ‘மக்கள் மருந்தகங்கள்’ (Jan Aushadhi) செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதற்கான இந்த முயற்சி, கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது. ஆனால், அரசு ஆமை மெல்ல நகர்ந்து, செயல்பாட்டு எல்லையைத் தொட பத்தாண்டுகளாகி விட்டன. இந்த நல்ல திட்டத்தை நடைமுறைக்கு வரவிடாமல் தடுத்த காரணகர்த்தாக்கள், இன்னும் அரசு அலுவலகங்களில் இருக்கிறார்கள். மக்கள் இதைப் பயன்படுத்த விடாமல் தடுக்க, ஆயிரம் வழிகளை அவர்கள் கண்டுபிடிக்கக்கூடும். பெரு முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்குத் தடையென்றால், இந்த மக்கள் மருந்தகங்களை முடக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். மக்கள் விழிப்பு உணர்வோடு இருந்து, இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த மக்கள் மருந்தகங்களில் சுமார் ஆயிரம் வகை மருந்துகள் மட்டுமின்றி, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சைக்கான துணைப்பொருட்கள் போன்றவையும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எப்படி இங்கு மட்டும் விலை குறைவு? மருந்து நிறுவனங்கள், தமது உற்பத்தியில் ஒரு பகுதியை, விளம்பரச் செலவு, இடை வியாபாரிகள் கமிஷன் போன்றவை இல்லாமல் அரசுக்குத் தர வேண்டும் என்பது சட்டம். இதுவரைத் தூங்கிக் கொண்டிருந்த இந்தச் சட்ட நடைமுறையை, தூசு தட்டி எடுத்து இப்போது செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்கள் மருந்தகங்களில் மருந்துகளின் விலை குறைவாக இருக்க இன்னொரு காரணம், இங்கு விற்கப்படுபவை ஜெனரிக் மருந்துகள். வேதியியல் பெயர் அல்லது இயற்பெயரில் வழங்கப்படும் இந்த ஜெனரிக் மருந்துகள், கம்பெனிகளின் பிராண்ட் பெயரோடு விற்கப்படும் மருந்துகளுக்கு சற்றும் தரம் குறையாத மருந்துகளே. பிராண்ட் பெயரோடு விற்கப்படும் மருந்துகளின் விலையைவிட மூன்று மடங்கு, நான்கு மடங்கு குறைவான விலையில் இந்த ஜெனரிக் மருந்துகள், மக்கள் மருந்தகத்தில் கிடைக்கும்.

உதாரணமாக, கால்பால். சாதாரணமாக காய்ச்சல், தலைவலிக்கு டாக்டர்களின் மருந்துச் சீட்டின்றி மருந்துக் கடைகளில் நேரடியாக இரண்டு ரூபாய் கொடுத்து, இதை வாங்கிச் செல்வதைக் காண்கிறோம். இந்த கால்பால் ஒரு மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பெயர். இதன் வேதியியல் பெயர், பாராசிட்டமால். இதை மக்கள் மருந்தகத்தில் 40 காசுக்குப் பெற முடியும். இதேபோல் நோய் தடுப்புக்கான ஆன்ட்டிபயாடிக், சர்க்கரை நோய் மருந்துகள், விலையுயர்ந்த இதய நோய் மருந்துகளையும் வேதியியல் பெயரில் நான்கு மடங்கு குறைவான விலையில் பெற முடியும்.

மருந்துகளின் விலை ஏன் உச்சத்துக்குப் போகிறது? மருந்து நிறுவனங்கள், தம் மருந்துகளுக்கு கவர்ச்சிகரமாகப் பெயர் வைத்து, விதம்விதமாக அலங்கார பேக்குகளில் அவற்றை அடைத்து, மார்க்கெட் பிடிக்க விற்பனைப் பிரதிநிதிகளை அமர்த்தி, டாக்டர்களுக்கு அதன் பெருமை களை விளக்கி, மாதிரி மருந்துகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து, அறிமுகம் செய்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நான்கு இடைத்தரகர்களின் கைமாறி அது, மக்களை வந்து சேர்கிறது. இத்தனை பேருக்குமானச் செலவுகள், மருந்துக் கம்பெனியின் கொழுத்த லாபம், டாக்டர்களுக்குத் தர வேண்டிய அன்பளிப்பு இவையெல்லாம் சேரும்போது 40 பைசா பாராசிட்டமால், இரண்டு ரூபாயாகி விடுகிறது.

உலக நாடுகளின் அரசாங்கங்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றவை மூன்று நிறுவனங்கள். ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள். தங்கள் கொள்ளை லாபத்துக்குத் தடையாக இருந்தால், அரசையே வீழ்த்தி விடுவார்கள் இவர்கள். ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் பணக்குவியலுக்குக் கூலிகள் ஆகின்றனர். மக்களுக்கான அறிவியல், சில பெருமுதலாளிகளின் நலனுக்கானதாக மாற்றப்படுகிறது. படிப்படியாக மருத்துவர்களையும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக்கி, அவர்களை தங்கள் மருந்துகளை எழுதும் கருவிகளாக ஆக்குகின்றனர். கவர்ச்சி விளம்பரங்கள், அறிமுக விருந்துகள், இலவச மருந்துகள், அன்பளிப்புகள், பரிசுகள், இன்னபிறவும் அவர்களின் பெரும் லாபத்தில் கிள்ளி வீசும் சிறு துகள்களே.

இந்தத் தேவையற்ற செலவுகளை ஒதுக்கி, இடைத்தரகர் இல்லாமல், அரசே உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளைப் பெற்று, அரசு சலுகைகளுடன் நேரடி விற்பனை யாளர்களுக்கு வழங்க இந்திய அரசு பொதுத்துறை மருந்துகள் பிரிவு (BPPI-Bureau of Pharma Public Sector Undertakings of India) உருவாக்கப் பட்டுள்ளது. மருந்தாளுனர் படிப்பு முடித்த எவரும், இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, மக்கள் மருந்தகம் தொடங்க முடியும். 120 சதுர அடி இடம் இருந்தால் போதும். குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகளை விற்கும் மனநிறைவு கிடைப்பதோடு, கணிசமான லாபமும் கிடைக்கும்.  

இத்திட்டத்தின் நோக்கம், முதற்கட்டமாக 630 மாவட்டங்களில் குறைந்தது ஒரு மக்கள் மருந்தகத்தைத் துவக்குவது. இதற்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில அரசு இதை சிறப்புடன் செய்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பல்வேறு காரணங்களால் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தன. தமிழகத்துக்காக வினியோக உரிமையை எனது நண்பர் டாக்டர் கே.கே.ராஜகோபால் பெற்று, சேலத்தில் ஒரு கடையைத் துவங்கியுள்ளார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களிலும் துவக்கத் திட்டமிட்டுள்ளார்.  பல நகரங்களில் இப்போது இவை வந்துவிட்டன. பெரிய இடமோ, முதலீடோ தேவையற்ற இத்தொழிலில் சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்பில், மலிவாக மருந்துகள் மக்களை எட்டிவிடும்.

ஜெனரிக் மருந்துகளின் தேவை பற்றியும், பயன்பாடு பற்றியும் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு’ (Me’decins Sans Frontie’res) மிகவும் புகழ்ந்து கூறுகிறது. போர், இயற்கை அழிவு, தொற்றுநோய்கள் பரவிய நாடுகளில், அரசு அழைப்பை எதிர்பாராமல் விரைந்து சென்று உதவும் டாக்டர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. ‘‘ஏழை நாடுகளின் மக்களைக் காக்கும் கவசம்’’ என ஜெனரிக் மருந்துகளைப் புகழ்கிறது இந்த அமைப்பு. ஜெனரிக் மருந்து பயன் பாட்டால், இந்த அமைப்பின் மருந்து செலவு 260 கோடி டாலரிலிருந்து 120 கோடி டாலராகக் குறைந்துள்ளது. இவர்களின் மருந்து தேவையில் மூன்றில் இரண்டு பங்கை, இந்திய மருந்து நிறுவனங்களே தருகின்றன. அமெரிக்க மருந்து நிறுவனங்கள், எய்ட்ஸ் நோயால் சாகும் ஆப்ரிக்க மக்களுக்கு 10,000 டாலருக்கு விற்ற மருந்துகளை, இந்திய மருந்து நிறுவனங்கள் 100 டாலருக்கு வழங்குகின்றன. இதை எதிர்த்து பன்னாட்டு நிறுவனங்கள் போட்ட வழக்கை, இந்தியாவின் சிப்லா நிறுவனம் வென்றுள்ளது. இப்படிப்பட்ட, ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைக்கச் செய்யும் அரசின் முயற்சிக்குத் தோள்கொடுப்பது சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் கடமை.

மத்திய அரசின் இந்தப் பயனுள்ள திட்டத்தை மாநில அரசு முழுமையாக ஏற்று, சலுகைகள் வழங்கி, ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் மருந்தகங்கள் உருவாக்க முன்வர வேண்டும்.

விலை மலிவான மருந்துகள் தரமற்றவை என்ற மாயையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்.

மக்கள் நலனையே முதன்மையாகக் கருதி, ஜெனரிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். இதை மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்துவதன் மூலம் மக்களிடம் நற்பெயர் பெற முடியும்.

அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் இம்மருந்தகங்களை நடத்த முன்வந்தால், லாபத்துடன் சமூக சேவையையும் செய்ய முடியும்.

சுயநல சக்திகளின் தன்னலம், ஊழல் ஆகியவற்றுக்கு அரசு பலியாகாமல், இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட உதவ வேண்டும்.

மருத்துவம் சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாகிவரும் வணிகச் சூழலில், மக்களைக் காப்பாற்றும் மகத்தான ஆயுதம் இந்த மக்கள் மருந்தகங்கள். இதை முடங்கிவிடாமல் வளர்க்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

(நலம் அறிவோம்)

படம்: தி.விஜய்