Published:Updated:

கண்கள் துடித்தால் அன்பு தேவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்கள் துடித்தால் அன்பு தேவை!
கண்கள் துடித்தால் அன்பு தேவை!

ரவீந்திர மோகன், கண் மருத்துவர்ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி
கண்கள் துடித்தால் அன்பு தேவை!

ண்கள்... உலகின் அத்தனை அற்புதங்களையும் நமக்குக் காட்டும் உடலின் அற்புதம். 576 மெகாபிக்சல் கேமரா... அந்தக் கேமராவில் அவ்வப்போது ஏற்படும் துடிப்பை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் இடைவிடாத துடிப்பு, கண்கள் முழுமையாக மூடிக்கொள்ளும் ஆபத்துவரை கொண்டு செல்ல நேரலாம். கண் துடிப்பைக் கவனித்து முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம், சத்துக்குறைபாட்டால் கண்கள் துடிக்கின்றனவா போன்றவற்றுக்கான விடைகளை இங்கே பார்ப்போம்.

குழந்தைகளைக் கவனியுங்கள்

குழந்தைகள், தாங்கள் தனித்துவிடப்படுகிறோம், தங்களை யாரும் கவனிப்பதில்லை என்று கருதும்போது, அனிச்சையாக அவர்களின் கண்கள் துடிக்க ஆரம்பித்துவிடும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என யாரைப் பார்த்தாலும் குழந்தைகளின் கண்கள் துடிக்கும். இது ஒரு கவன ஈர்ப்புக்காக மட்டுமே. இரண்டிலிருந்து மூன்று வாரங்களில் அதுவாகவே சரியாகிவிடும். இல்லாத பட்சத்தில் கண் பரிசோதனை செய்வதில் தவறில்லை. மேலும், குழந்தைகளை அன்பாக அரவணைத்துப் பாதுகாத்தாலே, அவர்களுக்கு உண்டாகும் தனிமை மற்றும் பாதுகாப்பாற்ற உணர்வு தவிர்க்கப்படும்.

பெரியவர்கள்

ஆர்பிகுலாரிஸ் மியோகைமியா (Orbicularis myokymia) என்பது பெரியவர்களுக்கு வரக்கூடிய கண் துடிப்புப் பிரச்னை. தேவையான அளவு தூக்கம் இல்லாதது, சரியான நேரத்துக்குத் தூங்காமல் இருப்பது, அதிக அளவில் காபி குடிப்பது, மனஅழுத்தம், பதற்றம் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. கவுன்சலிங் மற்றும் கண்ணில் ஊற்றுவதற்கான மருந்தைக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம்.

கண்கள் துடித்தால் அன்பு தேவை!

முதியவர்கள்

முதியவர்களுக்குப் பெரும்பாலும் ஒரு கண் மட்டும் துடிக்கும். இதை, ஹெமிஃபேஷியல் ஸ்பாசம் (Hemifacial spasm) எனச் சொல்வார்கள். சிலருக்கு இந்தத் துடிப்புப் பிரச்னை கண்களோடு நிற்காமல் கன்னம், வாய்ப் பகுதிகளுக்கும் பரவும். இந்தப் பிரச்னை அடிக்கடி வந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

கவனம்...

அவ்வப்போது 10-15 முறை கண்கள் துடித்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் கண் துடித்துக் கொண்டிருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும். மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இரண்டு கண்களும் அதிகமாகத் துடிக்கும். பிறகு கண்கள் தானாகவே மூடிக்கொள்ளும். இந்தப் பிரச்னை பிளிஃபேரோஸ்பாசம் (Blepharospasm) எனப்படுகிறது.

அப்ராக்ஸியா (Apraxia) எனும் பிரச்னையிலும் கண்கள் துடிக்கும். அப்ராக்ஸியாவால் பாதிக்கப்பட்டவரின் கண்களும் திடீரென மூடிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னையால் மூடிய கண்களைத் திறக்கவே முடியாது. விரல்களை வைத்துதான் திறக்கவேண்டியிருக்கும். இது ஏறக்குறைய பார்வையை இழந்தது மாதிரியான நிலைமைதான். இந்த இரண்டு பிரச்னைகளும் ஒரே நேரத்தில் ஒருவருக்கே வரக்கூடும்.

என்ன தீர்வு?


ஹெமிஃபேஷியல் ஸ்பாசம், பிளிஃபேரோஸ்பாசம், அப்ராக்ஸியா போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாட்டுலினம் டாக்ஸின் (Botulinum toxin) எனும் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். கண் துடிப்பை ஏற்படுத்தும் தசைகளை நீக்கும் ஆர்பிகுலாரிஸ் மியோக்டமி (Orbicularis myectomy) என்ற அறுவை சிகிச்சையையும் செய்து கொள்ளலாம்.

சத்துக்குறைவு காரணமா?

கண்ணில் ஏற்படும் துடிப்புக்குச் சத்துக் குறைபாடுதான் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. அதிகமாகக் கண் துடித்தால் அதற்கு மூளையின் நரம்புகளில் ஏற்படும் பிரச்னையே காரணம். ஆனால், இந்தப் பிரச்னை எவ்வாறு உருவாகிறது என்பது இதுவரை கண்டறியப் படவில்லை.

கண் துடிப்பு கடுமையான நிலையை அடைவது மிக அரிதான நிகழ்வுகளில் ஒன்று. முறையாகச் சோதனை செய்யாமல் சாதாரண கண் நோய்களுக்குப் பயன்படுத்தக்கூடிய கண் மருந்தையே எல்லாக் கண் நோய்களுக்கும் சில மருத்துவர்கள் தருகிறார்கள். இது தவறு. அதிக அளவு கண் துடிப்பால் பாதிக்கப்பட்டால், உடனடியாகச் சரியான மருத்துவரை அணுக வேண்டியது மிக மிக முக்கியமாகும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்னை முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே.

- அகில் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு