Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?

பாரம்பர்யமாகத் துணி வாங்கும் கடை, அரிசி வாங்கும் இடம், நகை செய்து தருபவர் என நம்பிப் போன காலம் ஒன்று இருந்தது.இன்று அவையெல்லாம் மூடநம்பிக்கைகளாகிப் போய், விளம்பரம், வெளிச்சம் பார்த்துப் போகும் காலத்துக்கு வந்து விட்டோம்.

அன்று தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி... சிக்கலான பிரசவமானாலும் சரி... ஒரே டாக்டரிடம் போவோம். அவர் சர்வரோக நிவாரணியாக, சஞ்சீவி பர்வதமாகக் கண்களுக்குத் தெரிந்தார்.

ஒரு பழைய வீடு, திண்ணை தாண்டி உள்ளே நுழைந்தால் மூங்கில் சிம்பு ஸ்கிரீன் போட்ட முன் தாழ்வாரத்தில் நீளமாக இரண்டு மரப் பெஞ்சுகள். நம் இருமல் சத்தம் கேட்ட உடனேயே, பெயரைச் சொல்லி அழைப்பார் டாக்டர். உள்ளே போய், அவர் பக்கத்தில் உள்ள ஸ்டூலில் உட்கார்ந்த உடனேயே, ‘‘லீவ் விட்டாச்சே... எங்கடா இவனைக் காணோமேன்னு நினைச்சேன். என்ன சுப்பிரமணி, நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டானா?” என்று கேட்டுக்கொண்டே, வாய் திறக்கச் சொல்வார். மருந்து மணக்கும் டங் டிப்ரெசரை வைத்து நாக்கை அழுத்தி, டார்ச் அடித்துப் பார்த்து விட்டு, ‘‘வேறென்ன, வழக்கமான டான்சில்தான்” என்று ஆறுதலாகச் சொல்வார். சீமாத்துக் குச்சியில் பஞ்சு மிட்டாய் போல் சுற்றிய பஞ்சில் மேண்டில் சொல்யூஷனை நனைத்து, அடித் தொண்டையில் தடவுவார்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?

‘‘மூணுவேளை சுடு தண்ணியில உப்பு போட்டுக் கொப்பளி’’ என்று கூறியபடியே, பழைய பென்சிலின் பாட்டிலில் மேண்டில் சொல்யூஷனையும், கையில் பஞ்சையும் கொடுத்து அனுப்புவார். ‘‘ஒருவாரம் பார்ப்போம். ரொம்ப தொல்லை குடுத்தா, இந்த லீவுல எடுத்திடுவோம்” என்பார். அடிபட்டால் கட்டு, காய்ச்சல் வந்தால் மாத்திரை, மைனர் ஆபரேஷன், லீவ் லெட்டர் எல்லாத்துக்கும் அவர்தான். முழுக் குடும்பத்துக்கும் தாத்தா துவங்கித் தம்பி வரை அவர்தான்.

அவர்தான் குடும்ப டாக்டர். மருத்துவத்தின் மூலைக் கல் அவர்தான். எதுவானாலும், அவர் சொன்னால் சரி. டாக்டர் - நோயாளி உறவு என்பது குடும்ப உறவுதான். ‘என்ன மருந்து எழுதுவது, எவ்வளவுப் பணம் வாங்குவது’ எல்லாம் ஆளுக்கு ஆள் மாறும். குடும்பக் கஷ்ட நஷ்டம் கூட அவருக்கு அத்துப்படி, அதற்கேற்ப மருந்தும் மாறும். குடும்ப டாக்டர், நோய்க்கு மருந்து எழுதுவதில்லை; மனிதனுக்கே மருந்து தருவார்.

நாம் எதைச் சாப்பிடுவது, எதைச் செய்ய வேண்டும் என எல்லாமே அவர் சொல்வார். நம் குடும்பத்தின் ஒவ்வொரு மனிதரின் உடல்வாகும் அவருக்குத் தெரியும். யாருக்கு எது அலர்ஜி எனத் தெரிந்து நெறிப்படுத்துவார். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் அவர் வழிகாட்டல் இருக்கும். காதுகுத்து முதல் கல்யாணம் வரை நம் குடும்ப விசேஷங்களில் அவரும் ஒரு விருந்தினர்.

எங்கள் குடும்ப டாக்டராக இருந்த நல்லசாமி இப்போது இல்லை. நல்லசாமி போலவே இருந்த பலரும் இன்று இல்லை. தொண்டை வலிக்கு ஒரு டாக்டர், தலைவலிக்கு ஒரு டாக்டர், கீழே விழுந்தால் ஒரு டாக்டர், டென்ஷன் வந்தால் ஒரு டாக்டர் என ஸ்பெஷலிஸ்ட்களிடம் ஓடும் காலம் இது. வலது கண்ணுக்கு ஒரு டாக்டர், இடது கண்ணுக்கு ஒரு டாக்டர் என ஸ்பெஷலிஸ்ட்கள் வந்தாலும் ஆச்சர்யமில்லை.

எல்லா விஷயங்களிலும் நாம் மேலை நாடுகளைக் காப்பி அடிக்கிறோம். ஆனால், அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இன்றும் குடும்ப டாக்டர் முறை இருக்கிறது. நம்மைப் போன்ற வாழ்க்கைச்சூழல் கொண்ட பிரேசில், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் குடும்ப டாக்டர்கள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்?

இந்தியாவில் ‘குடும்ப டாக்டர்’ என்பதை அழிந்து வரும் அரிய உயிரினம் போல ஆக்கிவிட்டோம். ‘வெறும் எம்.பி.பி.எஸ்’ டாக்டர்களை நோயாளிகள் நாடிப் போவதில்லை. ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடமே ஓடுகிறார்கள். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு குடும்ப டாக்டராக பிராக்டீஸ் செய்யும் ஆசையில் ஒருவர் க்ளினிக் வைப்பதும் சுலபமில்லை. க்ளினிக் வாடகை, பராமரிப்பு, ஊழியர்களுக்குச் சம்பளம் என செலவழித்தாலும், வருமானம் வருமா என்று பயம். தங்கள் கண்ணெதிரே ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் லட்சங்களில் சம்பாதிப்பதைப் பார்க்கிறார்கள். அதனால், ஸ்பெஷலிஸ்ட் பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வோடு பல ஆண்டுகள் போராடுகிறார்கள்.

உண்மை என்னவென்றால், இங்கு சுமார் 80 முதல் 90 சதவிகித நோய்களை, குடும்ப டாக்டர்களே சரிசெய்துவிட முடியும். இதற்கான சிஸ்டம் இல்லாததால், கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான கார்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.ஏதாவது பிரச்னை என்றால், நேரடியாக ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் போவதே இப்போது ‘மெடிக்கல் ஃபேஷன்’ என ஆகிவிட்டது. சமயங்களில் எந்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் போவது என்று புரியாமல் குழம்பிப் போகிறார்கள். நெஞ்சில் வலிக்கிறது என ஒரு இதய நிபுணரிடம் போனால், அவர் எக்கோ, ஈ.சி.ஜி பார்த்துவிட்டு, டிரெட் மில் ஈ.சி.ஜி எடுத்து உறுதி செய்துகொண்டு ‘‘உங்களுக்கு இதயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை’’ எனச் சொல்லி அனுப்பி வைப்பார். ‘பிறகு எதனால் நெஞ்சு வலி வந்தது’ என உங்கள் குழப்பம் தீராது. ஒரு ஜீரண மண்டல நிபுணரிடம் போய் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 

எந்த ஒரு பிரச்னைக்கும் முதலில் குடும்ப டாக்டரிடம்தான் போக வேண்டும். அவர் பரிந்துரை செய்தால்தான் மேல் சிகிச்சைக்காக ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுக வேண்டும். இதுவே மரபு. கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் எம்.பி.பி.எஸ் முடித்த டாக்டர்கள் இருக்க வேண்டும். அவர்கள் முதலில் பார்த்துவிட்டு, ஸ்பெஷலிஸ்ட் சிகிச்சை தேவையா என்று பரிந்துரை செய்ய வேண்டும். இதைத்தான் மேலை நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால், ‘வருமானம் குறைந்துவிடும்’ என்பதால் இங்கு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் நேரடியாக நோயாளிகள் வருவதை கார்ப்பரேட்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். சின்ன பிரச்னைக்குக்கூட ஏகப்பட்ட பரிசோதனைகள், ஏராளமான செலவு. காசும் காப்பீடும் இருந்தால் நல்ல மருத்துவம் கிடைத்துவிடும் என நிறைய பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவசியமில்லாத ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டால், அதற்காக ஒரே ஒரு ரூபாய்கூட நீங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் வாங்க முடியாது.

இங்கு பிரச்னை நம் மருத்துவக் கல்வியிலேயே இருக்கிறது. இந்தியாவில் ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்றால், 500 படுக்கைகள் கொண்ட சிறப்புச் சிகிச்சை மருத்துவமனை இருக்க வேண்டும் என்பது விதி. தமிழ்நாட்டில் பல மாவட்டத் தலைநகரங்களில் இப்போது மருத்துவக் கல்லூரிகள் வருகின்றன. அங்கெல்லாம் ஏற்கெனவே இருக்கும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் இதை ஆரம்பிப்பது இல்லை. தனியாக சிறப்பு மருத்துவமனையை உருவாக்குகிறார்கள். இங்கு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களே இருக்கிறார்கள். அவர்களே மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள். ‘சாதாரண எம்.பி.பி.எஸ்’ டாக்டரை நாம் மருத்துவப் பேராசிரியராக மதிப்பதே இல்லை. ஸ்பெஷலிஸ்ட் பேராசிரியர்களையே தங்களின் ரோல் மாடலாக, வருங்கால டாக்டர்கள் பார்க்கிறார்கள். சிறப்பு  சிகிச்சைகளே அவர்களின் பாடங்கள் ஆகின்றன. உலகின் பல நாடுகளில் ‘குடும்ப மருத்துவம்’ என்பது அடிப்படைப் பாடங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு அதுபற்றி சொல்லித் தருவதே இல்லை. எனவே, அவர்களின் கனவு ‘ஸ்பெஷலிஸ்ட்’ ஆவதாகவே இருக்கிறது. சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்க்கும் குடும்ப டாக்டர் ஆவதில் யாருக்கும் விருப்பம் இல்லை.

இந்தியாவில் எம்.பி.பி.எஸ் முடிப்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே எம்.எஸ்., எம்.டி என உயர் கல்வியில் சேர முடியும். அவ்வளவுதான் இடங்கள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் எம்.பி.பி.எஸ் இடங்களைவிட உயர்கல்வியில் இடங்கள் அதிகம். அதனால், இந்திய டாக்டர்கள் பலரும் அமெரிக்கா சென்று உயர்கல்வி முடித்து, அங்கேயே செட்டில் ஆவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களில் பலரும் அங்கு படிப்பது ‘குடும்ப மருத்துவம்’தான். ஆம், அமெரிக்காவில் ‘குடும்ப மருத்துவம்’ என்பது உயர்கல்வியில் மிக முக்கியமான பிரிவு. இதில்தான் அதிக இடங்கள் உள்ளன. இந்திய டாக்டர்கள் அங்கு சென்று அதிகம் படிப்பதும் இதைத்தான்.   

இந்தியாவில் பாரம்பர்யமாக இருந்து வந்த இம்முறை அழிந்து போனதால், 2002-ல் உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவக் கொள்கை, குடும்ப மருத்துவத்துக்கான மூன்றாண்டு பயிற்சியைத் தொடங்க முடிவு செய்தது. அதன்படி முதல் குடும்ப மருத்துவ உயர்கல்வி, கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் துவங்கியது. இப்போதைய ‘தேசிய மருத்துவக் கொள்கை 2017’, குடும்ப மருத்துவத்துக்கு ‘மூன்று ஆண்டு எம்.டி’ படிப்பைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ‘குடும்ப டாக்டர்கள் அகாடமி’ ஒன்று, அக்கறையுள்ள மருத்துவர்களால் துவக்கப்பட்டுள்ளது. குடும்ப டாக்டர் முறையை இந்தியாவில் மீண்டும் கொண்டுவர, இது உறுதி ஏற்றிருக்கிறது. குடும்ப டாக்டர் ஒரு அணைபோலத் தடுத்து, ‘யாரிடம் செல்வது? என்ன செலவாகும்? என்ன முன்னேற்றம் கிடைக்கும்? சிகிச்சையால் பலன் கிடைக்குமா?’ என்பதையெல்லாம் அக்கறையுடன் கூறி வழிநடத்துவார். அலைச்சல் குறையும், செலவு குறையும், ஏமாற்றம் குறையும், வீண் வன்முறைகள் தவிர்க்கப்படும்.

தலைவலி என்று பையன் சொன்னவுடன் நியூராலஜி ஸ்பெஷலிஸ்ட், சி.டி ஸ்கேன், MRI என்று ஓடும் என் மகனைப் பார்க்கும்போது, எனக்கு டாக்டர் நல்லசாமி நினைவு வருவது தடுக்க முடியாததாகி விடுகிறது.

நாம் எதையும் சந்தேகிக்கும் காலத்துக்கு வந்து விட்டோம். எதன் மீதும் நம்பிக்கையில்லை. கும்பிடும் கடவுள் கூட வெறும் கல்தான் என்ற பகுத்தறிவு சிந்தனை நம்முள் ஓடிக்கொண்டுள்ளது. ‘குடும்பமே இல்லாது போய்க் கொண்டிருக்கும் காலத்தில் குடும்ப டாக்டரா...? குடும்ப மருத்துவமா?’ எனும் கேள்விகள் சிலருக்கு வரலாம். எனினும் இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.

(நலம் அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism