ஹெல்த்
Published:Updated:

வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!

வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!

அசோகன், மனநல மருத்துவர்

‘வர வர உன் சேட்டை கூடிக்கிட்டே போகுது. ஹாஸ்டல்ல சேர்த்துடறேன் பாரு’ எனப் புலம்பும் அம்மாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘பக்கத்து வீட்டுப் பசங்களோடு சண்டை இழுத்துட்டு வர்றான். வெளியிடங்களுக்கு நிம்மதியா போக முடியலை. கேள்வி கேட்டே கொன்னுடுறான். இவனை எப்படியாவது அமைதியா இருக்க வைங்க டாக்டர்’ என மருத்துவரிடம் படையெடுக்கிறது பெற்றோர் பட்டாளம். ‘சுட்டித்தனம்’ என ரசிக்கப்பட்ட குழந்தைகளின் மழலைப் பேச்சு, ‘பிஞ்சிலே பழுத்தது’ என மாறிவிட்டது. உண்மையில், அதிகச் சுட்டித்தனம் என்பது நோயா? இதற்குத் தீர்வு என்ன?

‘‘இவர்கள் எல்லாம் ‘ஹைப்பர் ஆக்டிவ்’ குழந்தைகள். ஐன்ஸ்டீன் உள்பட பல சாதனையாளர் களும்

வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!

ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளாக இருந்தவர்கள்தான். மற்ற பிள்ளைகளிடம் இல்லாத ஒரு தனித்தன்மை, இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும். அதற்காக எல்லா குழந்தைகளையும் ஹைப்பர் ஆக்டிவ் என்று சொல்ல முடியாது’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

 ‘‘நாம் சிறு வயதில் செய்த குறும்புத்தனங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றை எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று கடந்து போனார்கள் நம் பெற்றோர். இன்று நினைத்தாலும் சிரிப்பைத் தரக்கூடிய நினைவுகளாக இருக்கின்றன. நம் பிள்ளைகளின் குறும்புகளும் அப்படியே. குறும்புக்கும் ஹைப்பர் ஆக்டிவிட்டிக்கும் ஒரு மெல்லிய இடைவெளியே இருக்கிறது. உங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிற விஷயங்கள் குறும்புகள். ஓர்  இடத்தில் நில்லாமல், அதே சமயம் குறும்புகளை மிச்சம் வைக்காமல் தொடர்ச்சியாகச் செய்து கொண்டே இருந்தால் அவர்கள் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள்.

ஹைப்பர் ஆக்டிவிட்டி என்றால் என்ன? மற்ற குழந்தைகளிடமிருந்து இவர்கள் எப்படி மாறுபடுகிறார்கள்?

 ‘அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிசார்டர்’ என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்னை, பொதுவாக ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்தான் அதிகம் காணப்படும். அட்டென்ஷன், ஹைப்பர் ஆக்டிவிட்டி, இம்பல்சிவிட்டி என மூன்று அறிகுறிகளில் ஏதாவது ஒன்றோ, அல்லது மூன்றுமோ சில குழந்தைகளிடம் காணப்படலாம்.

வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!

அட்டென்ஷன்

சாதாரண நிலையில் உள்ள ஒரு குழந்தை, பொம்மையைச் சிறப்பான பொருளாக நினைக்கும். ஆனால், சிறப்புக் குழந்தைகளுக்கு அந்தப் பொம்மையும் சாதாரண பொருள்தான். இரண்டு நிமிடம்கூட அந்தப் பொம்மையின்மீது தங்கள் கவனத்தைச் செலுத்த மாட்டார்கள். தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு இரண்டே நிமிடத்தில் கிரிக்கெட் மட்டையுடன் வெளியே கிளம்புவார்கள். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்களின் கவனம் வெளியில் செல்லக்கூடிய காரின் மீதோ, சுவரில் நகரும் பல்லியின் மீதோ போய்விடும். இப்படி சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனச்சிதறல் ஏற்படும். இதனால், அதிக நேரம் கவனம் செலுத்தவேண்டிய வீட்டுப் பாடங்கள், தேர்வுகள் என அனைத்தையுமே புறக்கணிக்கப் பார்ப்பார்கள்.

ஹைப்பர் ஆக்டிவிட்டி

ஹைப்பர் என்றாலே, அதிகம் என்று பொருள்.ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள் ஓர் இடத்தில் நிற்க மாட்டார்கள். வகுப்பறைகளில் பத்து நிமிடங்கள் அவர்கள் அமைதியாக உட்காருவதே கடினம். தன்னுடன் இருக்கும் மற்ற மாணவர்களையும், பாடங்களைக்  கவனிக்கவிடாமல் செய்துவிடுவார்கள். மேஜை, படிக்கட்டுகள், மரங்கள் என கண்ணில்பட்டவை மீது கால் வைத்து ஏறிவிடத் தோன்றும். இவர்களால் விளையாட்டுகளின் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது. பேட்ஸ்மேனாக இருந்துகொண்டு பந்து வீசுவார்கள். தவறு எனச் சொல்லும் மற்ற பிள்ளைகளை அடித்துவிடுவார்கள்.

இம்பல்சிவிட்டி

ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தேவையே இல்லாமல் இடையில் பேசுவது, வகுப்பின் கேள்வி நேரத்தில் தனது முறை வருவதற்கு முன்னரே முந்திக்கொண்டு பதில் சொல்வது எனத் தேவையற்ற பேச்சுகள் அதிகம் இருக்கும். மேலே சொன்ன அறிகுறிகளில்  ஏதேனும் ஒன்றோ அல்லது மூன்றுமே ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து குழந்தைகளிடம் காணப்பட்டால், பெற்றோர் குழந்தைகளுடன் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

ஏ.டி.ஹெச்.டி - ஏன் ஏற்படுகிறது?

பொதுவாகவே, மனநலம் தொடர்பான பிரச்னைகள் மரபியல் ரீதியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான குழந்தைகளின் குடும்பத்தில் கேட்கும்போது, ‘நானும் இப்படித்தான் சின்ன வயசுல குறும்பா இருந்தேன்’ என்பார்கள். இந்த மரபியல் காரணங்களால், ஒரு குழந்தை உருவாகும்போதே மூளையில் சில மாறுதல்கள் ஏற்படலாம். மூளைதான் உடலின் அனைத்துச் செயல்களையும் கட்டுப்படுத்தும் மானிட்டர். மூளையின் அலகுகளான நியூரான்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தால்தான், நம்மால் எந்தச் செயலையும் செய்ய முடியும். இரண்டு நியூரான்கள் இணையும் இடத்துக்கு நரம்பு முடிச்சு சினாப்ஸ் (Synapse) என்று பெயர்.  இங்குதான் தகவலைக் கடத்துவதற்குத் தேவையான வேதிப்பொருள்களான டோபமைன் (Dopomine), செரட்டோனின் (Serotonin), நார் எபிநெஃப்ரின் (Norepinephrine) போன்றவை சுரக்கின்றன. இந்தப் பொருள்களின் சுரப்பில் ஏற்படும் பாதிப்புகள்தான் மனநலம் தொடர்பான பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இது மட்டுமல்ல, ஒரு குழந்தைக்குத் தன் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்த முடியாத குடும்பச் சூழல் அமையும் போதோ பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப் படுத்தப்படும்போதோ, அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கும் பள்ளிகளாலோ அல்லது மனதுக்குப் பிடிக்காத சூழல் நிகழ்வதாலோ மனநல பாதிப்புகள் சற்றுக் கடுமையாக ஏற்படுகின்றன.

ஹைப்பர் ஆக்டிவிட்டி பாதிப்பினை எப்படி உறுதிப்படுத்தலாம்?

 மனநல மருத்துவர்களால் குழந்தைகளைச் சற்று நேரம் நோக்குவதன் மூலமே கண்டுபிடித்துவிட முடியும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக உள்ள சில வினாப் படிவங்களைப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கொடுத்து நிரப்பச் சொல்லி, அதன் மூலம் குழந்தைக்கு எந்த அளவு பாதிப்புள்ளது என்பதை அறியமுடியும்.

ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளுக்கும் நார்மல் குழந்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன?

* கை, கால், கழுத்து, தலை என உடலின் ஏதாவது ஒரு பாகத்தைத் தேவையே இல்லாமல் அசைத்துக்கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட 100 முறைகூட தொடர்ந்து இம்மாதிரியான செயல்களைச் செய்வார்கள்.

வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதிகப்படியான கோபம் வரும். சின்னச் சின்ன விஷயத்துக்கும் பொருள்களைத் தூக்கிப்போட்டு உடைப்பார்கள்.

பொய் சொல்லுதல், கெட்ட வார்த்தை பேசுதல், வீடு அல்லது வெளியிடங்களில் திருடுதல் போன்ற செயல்களைச் செய்வார்கள்.

பாலியல் உணர்வு தொடர்பான செயல்களில் அதிக நாட்டம் ஏற்படும்.

மன அழுத்தம் அல்லது மன எழுச்சி பாதிப்புகளும் ஏற்படும்.

இவையெல்லாம் எந்த குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறதோ அவர்களுக்கு ஹைபர் ஆக்டிவிட்டி பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். நார்மல் குழந்தைகளிடம் இம்மாதிரியான வித்தியாசப் பழக்கவழக்கங்கள் இருக்காது.

ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளைக் குணப்படுத்துவது எப்படி?

‘ஸ்டிமுலன்ட்ஸ்’ என்று சொல்லப்டும் மீத்தைல்ஃபெனிடேட் (Methylphenidate) அல்லது அடாமாக்சிட்டைன் (Atomoxetine) போன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. குழந்தையின் வயது, செயல்கள் போன்றவற்றைப் பொறுத்து இந்த மாத்திரைகள் கொடுக்கப்படும். மருந்துகளோடு சேர்த்து அவர்களின் நடவடிக்கைகளை மாற்றுவதற்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள‌ வேண்டும். பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஆலோசனை வழங்கப்படும்.

மனநலம் தொடர்பான நோய்களுக்கு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டுமா? இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

சர்க்கரை நோய், தைராய்டு போன்று மனநல பாதிப்புகளும் உடலில் சுரக்கக்கூடிய வேதியப் பொருள்களின் சுரப்பிப் பாதிப்பினால் ஏற்படுகிறது. இந்த மாதிரியான நோய்களுக்கு மாத்திரைகளை வாழ்நாள் முழுக்க எடுக்கவேண்டியது அவசியம்தான். மருத்துவரின் அறிவுரையின்றி மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தினாலோ அல்லது அளவினைக் குறைத்து உட்கொள்ளும் போதோ பக்கவிளைவுகள் அதிகமாக ஏற்படும்.

கெட்ட வார்த்தைகள் பேசுதல், எதிர்த்துப் பேசுதலைக் குறைக்க என்ன செய்யலாம்?

பெற்றோரையும் சுற்றியுள்ளவர்களையும் அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிதான் குழந்தைகள். அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகின்றனர். எனவே, குழந்தைகள் முன் சண்டையிடுவதையோ, திட்டிக்கொள்வதையோ பெற்றோர் விட வேண்டும். பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள் எனப் பார்த்து, அந்தக் குழந்தைகளிடம் இதுபோன்ற பழக்கம் இருந்தால், மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள். வார்த்தைகளைத் தவறாகப்  பேசுவதால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய மன வலிகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்தாலே போதும்.

ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளை ஆசிரியர்கள் எப்படி வழிநடத்தலாம்?

வகுப்பறை வாசல் அல்லது ஜன்னலுக்கு பக்கத்தில் இக்குழந்தைகளை அமரவைக்கும் போது, வெளியில் நடக்கும் விஷயங்களால் கவனச்சிதறல் அதிகமாக ஏற்படும். எனவே, இடத்தை மாற்றி நடுவரிசையில் உட்கார வைக்கலாம்.

பாடங்களிலிருந்து கவனச்சிதறல் ஏற்படுத்தக் கூடிய பொம்மைகள் அல்லது ரப்பர் பேண்ட் போன்றவை பிள்ளைகளின் கைகளில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வகுப்பறையில் முன்னால் நின்று பேசுவதைவிட, அந்தக் குழந்தையின் அருகில் நின்று பேசும்போது ஆசிரியரின் மீதான கவனம் அதிகமாகும்.

குட், வெரிகுட், ஸ்டார் எனக் குழந்தைகளைக் குஷிப்படுத்தும் செயல்களை அதிகமாக்க வேண்டும். சின்னச் சின்ன பாராட்டுகளில்தான் பெரிய பெரிய சாதனைகள் ஒளிந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற குழந்தைகளிடமிருந்து இவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம். ஆரோக்கியமான நட்புறவை ஏற்படுத்தச் சொல்லிக்கொடுக்கலாம்.

இவர்கள் நீண்ட நேரம் வகுப்பறையில் உட்காருவது கடினம் என்பதால், வகுப்புக்கு இடையில் பத்து நிமிடங்கள் நூலகத்துக்கு அனுப்பி, குறிப்பிட்ட புத்தகத்தைப் பார்த்துவிட்டு வரும் ஆக்டிவிட்டிகள் கொடுக்கலாம்.

ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளுக்கும் படிப்பு, விளையாட்டு, ஓவியம் என அனைத்துப் பயிற்சிகளும் கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் அதிகமாக உள்ளது என்பதை ஆசிரியர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஒருமுகப்படுத்த முடியும்.

- க.தனலட்சுமி

அட்டைப்படம் : கே.ராஜசேகரன்

மாடல்: சந்தோஷி மீனாட்சி கார்த்திக்

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுதல், பெற்றோர் மீதான வெறுப்பை பிள்ளைகளிடம் அதிகம் உருவாக்கும். உங்கள் பிள்ளையின் தனித்தன்மை என்ன என்பதை மட்டுமே பார்க்கவும்.

வீட்டுக்கு வந்தவுடன் ‘டெஸ்ட்டில் எவ்வளவு மார்க்’ எனக் கேட்பதைவிட, ‘மதியம் லன்ச் பிடித்ததா... யாருடன் விளையாடினாய்?’ என அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை மனம் விட்டுப் பேசவிடுங்கள்.

இவன் இப்படித்தான் என எதற்கெடுத்தாலும் குழந்தையிடம் குறையைக் கண்டுபிடிக்க வேண்டாம்.

அதீத ஆசைதான் மற்றவர்களின் பொருள்களைத் திருடத் தூண்டும் என்பதால், பொருள்களின் மீதான அளவுக்கு அதிகமான ஈடுபாட்டைப் பிள்ளைக‌ளிடம் ஏற்படுத்தக் கூடாது.

‘என் குழந்தைக்கு எந்தக் கஷ்டமும் தெரியக்கூடாது’ என மகிழ்ச்சியான விஷயங்களை மட்டுமே காண்பித்து வளர்க்க வேண்டாம். துக்கம் நடக்கும் வீடாக இருந்தாலும் அழைத்துச் செல்லுங்கள். மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து உணர்வுகளையும் குழந்தைக்குப் புரியவையுங்கள்.

ஒரு பொம்மை என்றாலும், உங்களுக்குப் பிடித்ததை அவர்களிடம் திணிக்க வேண்டாம். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள, அவர்கள் விளையாடும் பொம்மையாகப் பெற்றோர்தான் மாற வேண்டும்.
‘உங்கள் குழந்தையின் சேட்டைத் தாங்கவில்லை’ என அன்று ஆசிரியரால் வேண்டாம் என ஒதுக்கப்பட்ட எடிசனுக்கு, அவரது அம்மாவே ஆசிரியராக மாறியதால்தான் இன்று நாம் வெளிச்சத்தையே பார்க்கிறோம்.

‘பியானோ கம்போசிங் என்பதெல்லாம் உனக்கு ஒத்துவராத வேலை’ என ஒதுக்கப்பட்ட பீத்தோவன், அதே துறையில் தன் முத்திரை யைப் பதித்த‌ ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைதான். எனவே, ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளைத் தனிமைப்படுத்தாமல், அவர் களின் தனித்தன்மையை வளர்த்தெடுங்கள். அந்தக் குழந்தைக்குள்ளும் ஒரு விஞ்ஞானியோ, இசை மேதையோ இருக்கலாம்.

வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!

உங்கள் குழந்தைகளின் மனநலம் எப்படி?

சம  வயதுள்ள குழந்தைகளுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்களா?

பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் உள்ளதா?

வயதுக்கேற்ற முதிர்ச்சி பேச்சிலும் செயலிலும் இருக்கிறதா?

‘வரிசையில் நிற்க வேண்டும்’ என ஏதேனும் கட்டுப்பாடு வைக்கும்போது அதற்கான பொறுமை இருக்கிறதா?

குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு அவர்களால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடிகிறதா?

பையில் புத்தகத்தை எடுத்துவைத்தல், பாக்ஸில் பென்சில், ரப்பர் வைத்தல் போன்ற வேலைகளை அவர்களே செய்யும்போது பதற்றமின்றி இருக்கிறார்களா?

இந்த ஆறு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்பது உங்கள் பதிலாக இருந்தால், உங்கள் குழந்தையின் மனநலம் சூப்பர். இதில் ஏதேனும் ஒன்றுக்கு ‘இல்லை’ என்பது பதிலானால், அட்டென்ஷன், ஹைப்பர் ஆக்டிவிட்டி, இம்பல்சிவ்  என ஏதாவது ஒன்று உங்கள் பிள்ளையிடமும் இருக்கலாம்.