Published:Updated:

செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!

செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!
பிரீமியம் ஸ்டோரி
செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!

- தன்னம்பிக்கை நாயகி நந்திதா வெங்கடேசன்

செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!

- தன்னம்பிக்கை நாயகி நந்திதா வெங்கடேசன்

Published:Updated:
செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!
பிரீமியம் ஸ்டோரி
செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!

ம் வாழ்வில் எதிர்பாரா விதமாக நடக்கும் சில சம்பவங்கள், நமக்குள் இருக்கும் அதீத பலத்தை வெளியில் கொண்டுவரும். நந்திதா வெங்கடேசன் விஷயத்தில் இது உண்மையாகியிருக்கிறது. இரண்டு முறை தன்னைக் காசநோய் முடக்கிப்போட்டாலும் அதை எதிர்த்துப் போராடி, வென்று, இன்று தன் மனதுக்கு விருப்பமான பரதநாட்டியத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். மும்பையில் வசிக்கும் நந்திதா, வலியும் வலிமையும் நிறைந்த தன் வாழ்வனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். 

‘’இப்போ எனக்கு 27 வயசாகுது. 2007-ம் வருஷம், ஆகஸ்ட் மாசம். காலேஜ்ல சேர்ந்து ஒரு மாசம்தான் ஆகியிருந்தது. ஒவ்வொரு நாளும் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!

ஒரு நாள், எனக்கு அடிவயித்துல கடுமையான வலி. சாயங்காலமனால் பயங்கரக் காய்ச்சல். இப்படியே ஒரு வாரம் இருந்தது. டாக்டர்கிட்ட போனப்போ, ‘இது மழைக்காலம், வைரல் ஃபீவரா இருக்கும்’னு சொல்லி மருந்துகள் கொடுத்தார். ஆனா, நாளுக்கு நாள் வலி அதிகமாயிட்டே இருந்தது. பிறகு  குடல் காசநோய் மருத்துவர்கிட்ட போனப்போதான், குடலில்கூட காசநோய் தாக்கும் என்பதே எனக்குத் தெரிஞ்சது. அதுவரை பாடப்புத்தகத்துல மட்டுமே காசநோய் பத்திப் படிச்சிருந்த எனக்கு, அது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது’’ என்று சொல்லும் நந்திதாவுக்கு, வலிக்கு இணையாக அதன் மருத்துவமும் ரணமாக இருந்திருக்கிறது.

‘’ஒரு நாளைக்கு 15 மாத்திரைகள், 18 மாசத்துக்கு சாப்பிட வேண்டியிருந்தது. அது ஏற்படுத்துற பின்விளைவுகளும் நிறைய. காலையில் எழுந்ததும் வாந்தி வர்ற மாதிரி இருக்கும். எப்பவும் ரொம்ப சோர்வா இருக்கும். சில நேரம் மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். முடி கொட்டும். 17 வயசுல இந்த நோய் எனக்குத் தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்துருச்சு. ஒருவழியா இந்த நோயிலிருந்து மீண்டு கல்லூரிப் படிப்பையும் முடிச்சுட்டேன்’’ என்கிறார். அதன் பிறகு மேற்படிப்புக்காக டெல்லி சென்று அங்கே ஒரு வருடம் வேலை பார்த்தவருக்கு, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

‘’மீண்டும் மும்பை வந்து எனக்கு விருப்பமான பொருளாதாரத் துறையில் மேற்படிப்பு படிச்சு, மும்பையிலேயே செட்டில் ஆகிடலாம்னு நினைச்சேன். ஆனா, 23 வயசுல எனக்கு மறுபடியும் காசநோய் வந்தது. இம்முறை அதோட பாதிப்பு முதல்முறையைவிடக் கொடூரமா இருந்தது. மறுபடியும் ஹாஸ்பிட்டல், மாத்திரைனு வேதனைகள் தொடர்ந்தன. மூணு மாசத்துல ஆறு சர்ஜரி. அதுக்கு அப்புறம், ரெண்டு வருஷம் முழுக்கப் படுக்கையிலேயேதான் என் வாழ்க்கை கழிஞ்சது. என் வயசுல இருந்தவங்க எல்லாம் எப்படி வேலையில் முன்னேறலாம், எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ, நான் ‘இன்னைக்கு விடியுற பொழுதை இந்த வலி, வேதனையோட எப்படிக் கழிக்கிறது?’னு தவிச்சுக்கிட்டு இருந்தேன்.

இந்த வலிகளைக்கூட நான் தாங்கிக் கிட்டேன். ஆனா, சிகிச்சையோட பின்விளைவா எனக்குக் காது கேட்காம போகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. நவம்பர் 22, 2013... வாழ்க்கை எனக்கு மிகக் கொடூரமான பரிசு கொடுத்த நாள். அன்னிக்கு மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தேன். திடீர்னு, அதுக்கு முன்னே நான் அனுபவித்திராத ஒரு மயான அமைதியை உணர்ந்தேன். என் அம்மாவும் அண்ணனும் பேசுறாங்க... ஆனா எனக்கு எதுவுமே கேட்கல. டாக்டர்கிட்ட ஓடினப்போ, டிபி நோய்க்காக எடுத்துக்கிட்ட மாத்திரைகளோட பக்கவிளைவா செவித்திறனை இழந்துட்டதா சொன்னாங்க.

அந்தக் காலகட்டத்தை என்னால மறக்கவே முடியாது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அழுவேன். என் சிகிச்சைக்கு 50, 60 லட்சம் செலவாச்சு. அதுக்காக எங்க சொந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு வந்துட்டோம். நான் எல்லாருக்கும் பாரமா இருக்கேன்னு, தீவிரமான மன அழுத்தத்துக்கு ஆளானேன்’’ என்பவர், வாழ்க்கை தனக்குத் தொடர்ந்து கொடுத்து வந்த சவால்களுக்கு, ஒரு கட்டத்தில் பதிலடி கொடுக்க வழி தேடியிருக்கிறார். அதுதான்... பரதம்.

செவித்திறனைப் பறித்த காசநோய் கை கொடுத்த பரதம்!

“ஏழு வயதில் நான் பரதம் கற்றேன். அது இப்போ எனக்குக் கைகொடுத்தது. என் பரதநாட்டிய ஆசிரியர் சுகந்தி சுப்ரமணியன் உதவியால் நான் மீண்டும் பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். இசை இல்லாம கத்துக்கிறதுக்கு முதல்ல நிறைய நேரம் எடுத்துக்கிட்டேன். தாளங்களை 1-2-3-4னு எண்களா மாத்தி, ஆட ஆரம்பிச்சேன். அக்டோபர் 2015ல, மீண்டும் அரங்கேற்றம் செஞ்சேன். ஆனா, அதெல்லாம் இப்படி நாலு வரியில சொல்லிட்டுப் போற மாதிரி இல்ல. அது ஒரு நீண்ட போராட்டமா இருந்தது. தவிரவும், தினசரி வாழ்க்கையே போராட்டம்தான். டிவி பார்க்கிறது, பாட்டு கேட்கிறது, ஃபோன்ல பேசுறதுனு இதெல்லாம் என் வாழ்க்கையில இல்லாமலே போனது. குறிப்பா, மத்தவங்ககிட்ட பேச முடியாத ஆதங்கம் என்னை ரொம்ப வாட்டிச்சு. அதனால, என் வாழ்க்கையில் என்னவெல்லாம் சவால்கள் நிறைஞ்சிருக்கு, அதையெல்லாம் நான் எப்படி எதிர்கொள்ளப்போறேன்னு டைரி எழுத ஆரம்பிச்சேன். இந்த முயற்சி, என்னை நானே மேம்படுத்திக்க உதவியா இருந்தது.

முன்னாடி எல்லாம் அடிக்கடி கவலைப்படுற நான், எது வந்தாலும் சமாளிப்போம் என்ற மனநிலைக்கு மாறினேன். எனக்குள்ள  நம்பிக்கையும் வளர்ந்தது. அதுக்கு முக்கியக் காரணங்கள்... நான் ஒன்றரை வயசிலிருந்து கத்துக்கிட்ட யோகாவும், சின்ன வயசிலிருந்து கத்துக்கிட்ட பரதமும்தான்” எனக் கூறும் நந்திதா, தற்போது TEDx உள்ளிட்ட பல தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த ஆண்டு முதல், பத்திரிகைத்துறையிலும் பணியாற்றி வருகிறார்.

‘‘2016ல நிறைய நல்ல மாற்றங்கள் நடந்தன. எனக்கு வேலை கிடைச்சது. இப்போ நானே டூ வீலர்ல வேலைக்குப் போறேன். எனக்கு டிராஃபிக் சத்தங்கள் எதுவும் கேக்காது என்றாலும், சிக்னல் பார்த்து, கவனமா வண்டி ஓட்டுறதுக்குக் கத்துக்கிட்டேன். அடுத்ததா, காசநோய் பத்தின விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கத் துவங்கினேன். பாரிஸ் நகரத்துக்குப் போய், பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு (public health advocacy) பத்தின பயிற்சி எடுத்துக்கிட்டேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக என்னை  ஓர் உற்சாகமான மனுஷியா மாத்திக் கிட்டேன்.

 நம்ம உடல் நலம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு மனநலத்தையும் பார்த்துக்கிட்டா, எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சமாளிச்சிடலாம்!”

வார்த்தையாக அல்ல, நந்திதா வாழ்ந்து காட்டிச் சொல்லும்போது நமக்குள்ளும் ஒரு நம்பிக்கை மின்னல் அடிக்கிறது! 

- ஷோபனா எம்.ஆர்