Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

து நாங்கள் ‘விடியல்’ எனும் திரைப்படக் கழகத்தை நடத்திக்கொண்டிருந்த காலம். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற படங்களை ஒரு பள்ளி வகுப்பறையில் இருபது முப்பது பேர் கூடிப் பார்த்து, விவாதிப்போம். ‘பேட்டில் ஷிப் ஆஃப் போட்டம்கின்’, ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற படங்களைப் பார்த்துப் பெருமைப்பட்டுக்கொள்வோம். ஒருமுறை ‘சோமன துடி’ எனும் கன்னடப் படத்தைத் திரையிட்டோம். கர்நாடக மலைப்பகுதியின் காபி தோட்டத்தில் வேலைசெய்து சாகும் ஏழைத் தொழிலாளியின் கதை. அது, ஜனாதிபதி விருது பெற்ற படம்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

கொத்தடிமையாக வாழும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் சோமன். சொந்தமாக நிலம் வாங்கி, உழுது பிழைக்க வேண்டும் என்பது, அவனுடைய வாழ்நாள் கனவு. காட்டில் திரிந்துகொண்டிருந்த இரண்டு மாடுகளைப் பிடித்துவந்து வளர்க்கிறான். அவனுக்கு நான்கு மகன்கள்; ஒரு மகள். மகன்களில் இருவர், கடனை அடைப்பதற்காக, தூரத்து காபி எஸ்டேட் ஒன்றில் உழைக்கிறார்கள். ஒரு மகன் மலேரியாவில் செத்துப்போகிறான். குளிர் காய்ச்சலில் அவன் தன் மனைவியையும் பிற உறவினர்களையும் இழக்கிறான். தனிமையின் சோகத்தில் அவனுக்குத் துணையாக இருப்பது அவனது அந்தத் ‘துடி’ எனும் சிறு உடுக்கை போன்ற இசைக் கருவிதான். அந்தத் துடியின் வாசிப்பில் தன் தனிமையையும் சோகத்தையும் கரைத்து வாழ்கிறான். இதுதான் கதை.

காபி எஸ்டேட், டீ எஸ்டேட் போன்ற மலைத் தோட்டப் பகுதிகளில் மலேரியா, ஒரு பெரும் உயிர்குடிக்கும் நோய். மலைத் தோட்டத் தொழிலாளிகள், காடுகளில் வாழும் விலங்குகள் போல் மிகக் குறைவான கூலிக்கு, குறைவான வசதிகளுடன் தகரக் குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். நோய் எதுவும் வந்தால் பராமரிக்கவும், மருந்து தரவும் அந்த வனாந்திரக்காட்டில் டாக்டர்கள் எவருமில்லை. பெரும்பாலும் தோட்டக் கூலிகளைக் கொல்லும் நோய், மலேரியாதான். சோமன் ஒரு தோட்டத் தொழிலாளி.

மலேரியா என்பது அன்று சமூகத்தை அச்சுறுத்திய பெரும் சவாலான நோய். நாற்பதாண்டுகளுக்கு முன், மருத்துவக் கல்லூரி காலத்தில் ஒரு மலேரியா நோயாளியைக்கூடப் பார்க்காமல் வந்த எனக்கு, ஒரு குடும்பமே மலேரியாவால் சாவதுப் பெரும்அதிர்ச்சி தரும் பாடமாக இருந்தது. பின் தோழர் எஸ்.வி.ராஜதுரை ஒரு கதையைச் சொன்னார். அது, ஆல்பர்ட் ஸ்விச்சர் என்பவரின் கதை. ஆப்ரிக்கக் காடுகளில் வாழும் கருப்பின மக்களுக்கு ஏசுவைப் பரப்பப் போனவர் ஸ்விச்சர். அவர்களின் துயர வாழ்வைக் கண்டு, தன்னை ஒரு ஆசிரியராகவும் டாக்டராகவும் மாற்றிக்கொண்டு, அவர்களுடன் வாழ்ந்து மடிந்த தியாகி ஆல்பர்ட் ஸ்விச்சர். அவர், ஆப்ரிக்காவின் கேபோன் என்ற நாட்டில் மிகுந்த சிரமமான சூழலில் ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். ‘மக்களுக்குச் சேவை செய்வதற்கு மதபோதகர் ஆவதை விடவும் மருத்துவராக மாறுவது முக்கியமானது’ என்பதை அவரது வாழ்வு உணர்த்தியது. அவர் உருவாக்கிய அந்த மருத்துவமனை இன்றும் ஒரு சிகிச்சை தலமாகவும், மலேரியா ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

எஸ்.வி.ராஜதுரை, உதகமண்டலம் சின்கோனா மலைத் தோட்டத்தில் பணிபுரிந்தவர். அந்தக் காலத்தைப் பற்றியும் விரிவாகச் சொன்னார்.

மலேரியா நோய் அப்போது உலகையே பயமுறுத்தியது. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில், சின்கோனா மரப்பட்டையில் இருந்து கஷாயம் தயாரித்து மலேரியாவைக் குணப்படுத்தினார்கள். உடனே, அந்த மரம் உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டது. ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ்காரர்களும் மற்றவர்களும் கப்பல் கப்பலாக இந்த மரப்பட்டைகளை இறக்குமதி செய்தார்கள். ஒரு கட்டத்தில் மற்ற நாடுகளிலும் சின்கோனா மரத்தை வளர்க்க முடிவு செய்தார்கள். பெரு நாட்டின் மலைக்காடுகளிலிருந்து ஊட்டிக்கும் வால்பாறைக்கும் இந்த மரங்கள், இப்படித்தான் வந்தன.

சீனக் கைதிகளைப் பணியாளர்களாக வைத்து இங்கு மரங்களை வளர்த்தனர். இதன் பட்டையிலிருந்து வடித்த சாறு கொண்டு, கொய்னா என்ற கசப்பு மருந்தும் மாத்திரைகளும் தயாரிக்கப்பட்டன. நடுவட்டம் பகுதியில் இதற்கான கம்பெனி வந்தது. மழைக்காடுகளை அழித்து சின்கோனா மரம் வளர்த்து, அதன் பட்டை, இலைகளைத் தனியார் கம்பெனிகளுக்கு அரசே தந்துவிடும். அதை அவர்கள் மாத்திரையாக்கி விற்பார்கள். அன்று மலேரியாவுக்கு இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கசப்பு கொய்னாவே மருந்து. சின்னச்சின்ன ஊர்களிலும் அஞ்சலகங்களிலும் மாத்திரைகளை விற்றனர்.

நவீன விஞ்ஞானம் பேசினாலும், அடிப்படையான மருந்துகளுக்கு மரங்களையும் மூலிகைகளையும்தான் நம்பி இருக்கிறோம் நாம். இன்னும் இது மாறவில்லை. சிக்குன் குனியாவுக்கு நிலவேம்புக் கஷாயம்தானே சஞ்சீவியாகக் காப்பாற்றுகிறது. மஞ்சள் காமாலைக்குக் கீழாநெல்லியே மாத்திரையாகி வருகிறது. நாட்டு மருந்து என பலரும் மட்டமாகப் பேசும் மருந்துகளே, பல ஆங்கில மருந்துகளின் மூலமாக உள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தெளிவு நமக்கு வந்தால், இந்தியாவும் தனது பாரம்பர்ய அறிவுகொண்டு விஞ்ஞான உலகில் பெரும் வியாபாரியாகி லாபம் சம்பாதிக்க முடியும்.

நாம் மூலப்பொருட்களையும், பாரம்பர்ய அறிவையும் விற்று ஏழையாக வாழ்கிறோம். அதற்கு மதிப்புக் கூட்டி வெளிநாட்டுக்காரன் கோடீஸ்வரனாகிறான். நம் மூலிகைகளை மருந்தாக்கும் ஆய்வுக்கு முதலிடம் தராத, மேற்கத்தியக் கல்வியின் பிரதிநிதியாகவே நம் கல்வி முறையை வைத்திருக்கிறோம். நல்லவேளை, நமது சர்க்கரைக் கழிவைச் சாராயமாக்கும் கலையை நாம் விற்றுவிடாமல் நமது அரசையே சாராயத்தால் நடத்திக்கொண்டுள்ளோம்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது!

கொய்னாவுக்கும் மாற்றாக, ரசாயன க்ளோரோக்வின் சல்போடாக்சின் போன்ற மாத்திரைகள் வந்தன. சின்கோனா காடுகளும் சத்தமின்றி காணாமல் போயின. ஆனால், வால்பாறையிலும் உதகமண்டலத்திலும் சில சின்கோனா மரங்களும் பாழடைந்த கட்டடங்களும் இன்றும் வரலாற்றுச் சான்றாக நிற்கின்றன. மக்களின் நோய் தீர்க்கும் மருந்துகளை அஞ்சலகங்களில் விற்ற காலம்கூட இன்று பழங்கதையாகிவிட்டது. மலிவுவிலை ஜெனரிக் மருந்துகளை விற்கும் Jan Aushadhi (மக்கள் மருந்தகங்கள்) மருந்துக் கடைகளாக அஞ்சலகங்கள் மாறுவதன் மூலம், கூரியர் காலத்தில் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இன்றும் நான்கரை லட்சம் ஏழை அடித்தட்டு மக்கள், எளிய பத்து ரூபாய் மருந்துகள்கூடக் கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மரணமடைகிறார்கள். குட்டி நாடு இலங்கைகூட, தன் மண்ணில் மலேரியாவை 2015-ம் ஆண்டிலேயே ஒழித்துவிட்டதாகப் பெருமைப்படுகிறது. ஆனால், ஓரளவு கட்டுப்பட்டிருந்த மலேரியா நம் நாட்டில் மீண்டும் தலை தூக்கி வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் இந்தியர்களைப் பலி கொள்கிறது கொசு.

“சின்னஞ்சிறிய அனாபிலஸ் கொசுக்களைக்கூட 70 ஆண்டுகளில் ஒழிக்க முடியாத நமது அறிவியல், அணுகுண்டு செய்து உலக வல்லரசாகிறதாம். சிறியது அழகானது மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட” என்று அவலச் சுவையுடன் விமர்சிப்பார் முதிய நண்பர் எஸ்.நாகராஜன். ஆம்! எதை எதையோ வெல்லும் நாம், கொசுக்களின் முன் தோற்று வருகிறோம். இப்போது மலேரியாவைத் தடுக்கும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரப் போகிறது என்ற நல்ல செய்தி வந்துள்ளது. RTS,S எனும் இந்த ஊசி, முற்றாக மலேரியா வராமல் தடுத்துவிடுமாம். பில்கேட்ஸ் அறக்கட்டளை உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இது, மலேரியா மரணங்களைக் குறைக்கும் என்று நம்புவோம்.

நமது மருத்துவ அறிவியல், வானம் ஏறி வைகுண்டம் போகும்முன், கூரை ஏறிக் கோழி பிடிக்க வேண்டும். அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது. கொசுக்களை வென்று மானுடம் காக்கும் காலம் விரைவில் வரப் பிரார்த்திப்போம். அதுவரை கொசு வலைகளுக்குள் பதுங்கி, ரசாயனப் புகையில் நம்மைக் காப்பாற்றிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லையே. சோமன்களின் துடியின் சோகம், இன்னும் காடுகளில் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது.

(நலம் அறிவோம்)