Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!

பிரமிடுகளும் மம்மிகளும் எவ்வளவு தொன்மை யானவையோ, அத்தனை தொன்மையானது காசநோய். ‘உலகின் காசநோய் தலைநகரம்’ என இந்தியா அழைக்கப்படுகிறது. உலகக் காசநோயாளிகளில் நான்கு பேரில் ஒருவர் இந்தியர் என்பது அவலம் மட்டுமில்லை, அவமானமும்கூட. கடந்த 2014-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் இருந்த 104 லட்சம் காசநோயாளிகளில் 28 லட்சம் பேர் இந்தியர்களாக இருந்தனர். காசநோயால் இறந்த 18 லட்சம் பேரில் ஐந்து லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர், தங்களுக்குக் காசநோய் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே இறக்கின்றனர்.

காசநோய் முற்றிய நிலையில் பலர் அதற்கான சானடோரியம் எனப்படும் தனி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். நிறைய பெண்களுக்கு இந்த வாய்ப்புகூட கிடைப்பதில்லை என்பதுதான் வேதனை. இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பெண்கள், காசநோய் முற்றியதால் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, வீதிகளிலோ, ஆதரவற்றோர் இல்லங்களிலோ வாழ்கின்றனர். மனைவியைத் துரத்திய கணவன், அம்மாவை விரட்டிய மகன் என நாம் நிறைய பேரை பார்க்க முடியும்.

காசநோயை ஆங்கிலத்தில் ‘ட்யூபர்குளோசிஸ்’ என்பர். இது, ‘மைகோ பேக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ எனும் கிருமியால் பரவுவது. மருத்துவ உலகம் கண்டறிந்த முதல் நுண்ணுயிரி இது. 1943-ம் ஆண்டு இதைக் குணப்படுத்த ஆல்பர்ட் ஸ்காட் என்பவரால் ‘ஸ்ட்ரெப்டோமைசின்’ என்ற மருந்து கண்டறியப்பட்டது. அன்று, அதுதான் சகல நோய்களையும் வெல்லும் முதல் சஞ்சீவி ஆன்டிபயாட்டிக். அதற்கு நோபல் பரிசுகூடத் தரப்பட்டது. 74 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது காசநோயைக் குணப்படுத்த 13 வகை மருந்துகள் வந்துவிட்டன. ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர, குறையவில்லை. 

அச்சுறுத்தும் புள்ளிவிவரங்கள் எத்தனை இருந்தாலும் காசநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே. 1950-ல் காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஒருபக்க நுரையீரலையே எடுக்கப்பட்ட நிலைமையிலும் என் அம்மா 92 வயது வரை வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல; வீட்டு வேலைகளையும் இயல்பாகச் செய்தார். எங்களை எல்லாம் படிக்கவைத்தார். ஏராளமானவர்களுக்கு உதவினார். அவர் அரவணைப்பில் வாழ்ந்த நாங்கள், எவ்வித நோயுமின்றி வாழ்கிறோம் என்பது நம்பிக்கையூட்டும் செய்திதானே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!

காசநோய்க் கிருமிகள் காற்றில் எங்கும் உள்ளன.  ஆனால், அவை வறுமைப்பட்டவர்களை, ஆரோக்கியமான சூழலில் வாழ வழியற்றவர்களை, மாசுபடாத நல்ல காற்றைச் சுவாசிக்காதவர் களையே நோயாளியாக்குகின்றன. ‘வறுமை ஒரு நோய்’ என்று நம் ஔவைக்கிழவி என்றோ ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.

இது மருந்தற்ற நோயாகப் பலரைக் கொன்றுள்ளது. நேருவின் மனைவி கமலா நேரு காசநோயால் பாதிக்கப்பட்டபோது ஸ்விட்சர்லாந்த்தின் ஆல்ப்ஸ் காற்றே மருந்து என நேரு அழைத்துச் சென்றார். இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த கணிதமேதை ராமானுஜம், மருந்தின்றித் தமிழகம் வந்து இளம் வயதில் மரணமுற்றார். உத்தரப்பிரதேசத்திலிருந்து மருத்துவம் தேடி, தமிழகத்தின் பெருந்துறை சானடோரியம் வந்த நேருவின் சோஷலிச குருநாதர் ஆச்சார்ய நரேந்திர தேவா, ஈரோட்டில் மரணமடைந்தார். இப்படி எண்ணற்ற உன்னத உயிர்களைக் கொன்றிருக்கிறது, இந்தக் கண்ணுக்குத் தெரியாத காசநோய்க் கிருமி.

பெருந்துறை சானடோரியம் என்றவுடன் பரந்த வேலமரங்கள் கொண்ட வறண்ட காற்று வீசும் மேட்டு பூமி, எங்கோ அகவும் மயிலின் குரல், வீட்டின் முன் தோகை விரித்தாடும் மயில்கள், வெள்ளை கோட்டுடன் கம்பீரமாக ரவுண்ட்ஸ் போகும் டாக்டர் பி.எஸ்.விஸ்வநாதன், உடன் காசநோய் கிருமிகளைக் கிழித்துக்கொண்டு செல்லும் அவரது உதவியாளர்கள் டாக்டர் ஆறுமுகம், டாக்டர் முத்துசாமி, டாக்டர் ஜோசப் என பலரும் நினைவுக்கு வருகின்றனர். நல்ல சத்தான உணவு, ஆரோக்கியமான காற்று, ஸ்டெப்டோமைசின், அபூர்வமான அறுவைசிகிச்சை, அர்ப்பணிப்புமிக்க தியாக சீலர்களான செவிலியரின் அன்பான பராமரிப்பு... எல்லாம்தான் ஆயிரமாயிரம் ஏழைகளைக் காத்து, புதுவாழ்வு தந்தது.

இன்று சானடோரியத்தில் தங்கத் தேவை யில்லை... Revised National Tuberculosis Control Program (RNTCP) என்ற புதிய சிகிச்சை முறைப்படி வீட்டிலிருந்தே குணம் பெறலாம். DOTS (Directly Observed Treatment, Short-course) மருந்து முறை காசநோய்க்கு நல்ல நிவாரணம் தருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மட்டுமல்ல, வர முடியாவிட்டால் அஞ்சலட்டை போட்டு வரவழைத்துக் கொடுக்கும் அளவுக்கு மருத்துவமனைகள் நோயாளிகளை நோக்கி வந்துவிட்டன.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து!

மாலைக் காய்ச்சல், ஓயாத இருமல், சளியில் அவ்வப்போது ரத்தத்துளி, உடல் இளைப்பு, எடை குறைவு ஆகியவை காசநோயின் எச்சரிக்கை அபாய சங்கு. சந்தேகத்துடன் செல்லும் எவரையும் பரிசோதிக்க, அரசு மருத்துவமனைகளில் காசநோய் மருத்துவர்கள் உள்ளனர். நோயாளி அரசு மருத்துவமனைக்குச் சென்றால் போதும். எல்லாம் நடக்கும். ஓராண்டு காலம் தொடர்ந்து மருந்து, மருத்துவப் பரிசோதனைகள் அவசியம்.

இத்தனை இலவசமாக அரசு செய்தாலும், மருத்துவத்தை அரைகுறையாக நிறுத்திவிட்டு மருந்துகளுக்கு மசியாத தடுப்புச் சக்தியை வளர்த்துக்கொள்ளும் பொறுப்பற்ற நோயாளிகள் 35 சதவிகிதத்தினர் உள்ளனர் என்பதுதான் வேதனை. இன்று Multi Drug Resistant TB எனப்படும் ‘மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய்’, இந்தியாவின் பெரிய பிரச்னையாக இருக்கிறது. முறையான சிகிச்சை பெறாத காசநோயாளிகள், தங்கள் உடலில் உள்ள கிருமிகளை, மருந்துக்குக் கட்டுப்படாத வையாக மாற்றுகின்றனர். வேதனை என்னவென்றால், இவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும் காசநோயும், மருந்துகளுக்குக் கட்டுப்படாத வகையாக இருக்கிறது.

இதற்கான சிகிச்சை மிகவும் சிக்கலானது. தினம் 10 மாத்திரைகள் என இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தமாக 14,600 மாத்திரைகள். ஒருவரின் தவற்றால், அவரிடமிருந்து தொற்று வாங்கிக் கொண்ட எல்லோருக்கும் இந்த வேதனை. மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய் என்பது ஒரு மருத்துவ ஆபத்தாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்றவற்றைப் பீதியுடன் அணுகும் அரசும் ஊடகங்களும், இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்வதில்லை.  
 
கண்ட இடத்தில் எச்சில் துப்பும் அநாகரிகப் பழக்கம் ஒழிக்கப்பட்டால், நோயாளி துண்டு கொண்டு வாயை மறைத்துக்கொண்டு இருமினால் நோய்க்கிருமிகள் நம் குழந்தைகளுக்குப் பரவுவது குறையும். ‘வறுமையை ஒழிப்போம்’ என்பது வெறும் கோஷமாக அன்றி, இல்லாமை இல்லாத நிலை வரும் நாளில், காசநோயும் இல்லாமல் போகும்.

(நலம் அறிவோம்)