Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!

ண்டு 2015. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார், சீனாவைச் சேர்ந்த பெண் மருத்துவ நிபுணர் யூயூ டு. மிக மோசமான மலேரியா ஜுரத்தைக் குணப்படுத்தும் ஆர்டிமிசினின் என்ற மருந்தை உருவாக்கியதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்த மருந்தை ஏதோ வேதிப் பொருட்களில் இருந்து அவர் கண்டுபிடிக்கவில்லை. ஆர்டிமீஸியா ஆனுவா என்ற தாவரத்தில் இருந்து மூலிகை மருந்தை உருவாக்கி, பல நூற்றாண்டுகளாக சீன மக்கள் மலேரியாவிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். அந்த மூலிகை மருந்தையே மாத்திரை வடிவில் நவீன அலோபதி மருந்தாக மாற்றிக் கொடுத்தார் யூயூ டு.

இந்தியாவில் உள்ள பூக்கும் தாவரங்களில், 43 சதவிகிதம் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தவை என ஆய்வுகள் சொல்கின்றன. காடுகளை அழித்து கான்க்ரீட் நகரங்களை எழுப்பும் நம் வளர்ச்சி வேகத்தில், பல தாவரங்கள் காணாமல் போகின்றன. பல இன மக்களிடம் இருந்து வரும் பாரம்பர்ய மருத்துவ ஞானமும்  இப்போதைய தலைமுறையிடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாக்க, அரசுகள் செய்யும் முயற்சிகள் போதுமானவையாக இல்லை.

ஆதிவாசிகள், பழங்குடிகள் என்றாலே அறிவற்றவர்கள், நாகரிகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் எனும் ஒரு மேட்டிமை நினைப்பு, படித்த நகர்ப்புறவாசிகளிடம் உள்ளது. ஆனால், இந்தக் காட்டுமிராண்டி பழங்குடி மக்களின் தொன்மை அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளே, மருத்துவத்திலும் வேளாண்மையிலும் இப்போதும் பயன்படுகின்றன. இவற்றுக்குக் காப்புரிமை வாங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை மட்டும் அவர்களிடம் இல்லை. 

ஆதிவாசிகளின் கண்டுபிடிப்பு, தீயில் தொடங்குகிறது. தீயின்றி நாகரிகம் ஏது? ‘தீயைக் கடவுளிடமிருந்து திருடி உலகுக்குக் கொண்டு வந்தவன் புரோமீதியஸ்’ என்கிறது கிரேக்க இதிகாசம். விவசாயம் எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தது? முதல் சக்கரம், முதல் வீடு, முதல் ஆயுதம், முதல் மருந்து, முதல் கலப்பை எல்லாம் பழங்குடிகளின் கொடையே.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் கொண்டாடும் ஆங்கில மருத்துவத்தின் வயது 400 ஆண்டுகளே. அதற்கு முன் இருந்ததை, ‘விஞ்ஞானம்’ என்று சொல்லாமல் ‘அஞ்ஞானம்’ என்பது எப்படி? நாம் நூற்றுக்கணக்கான பழங்குடி மரபுகளின் தோள் மீது நின்றுகொண்டுதான் நிலவைத் தொட்டிருக்கிறோம். அடித்தளம் மறத்தல் அடிமரம் வெட்டுவதாகும். தன் தகப்பனின் தோள் மீது அமர்ந்துள்ள குழந்தை, அப்பனைவிட அதிகம் பார்க்கிறது. இன்றைய வளர்ச்சி, அவர்கள் கொடுத்த கொடை என்ற நன்றி உணர்வை நாம் இழந்துவிடக் கூடாது. என் படிப்பறிவற்ற தந்தையே என்னை மருத்துவராக்கினார். என் அறிவுக்கு என் தந்தையின் தன்னலமற்ற தியாகம் காரணம். இந்த நன்றி உணர்வு நவீன மனிதனுக்கு அவசியம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மலையில் ஒரு மருத்துவ முகாமில் ஆதிவாசி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ‘பிரசவமெல்லாம் எப்படிப் பார்ப்பீர்கள்?’ என்றபோது, ‘‘நாங்கள் எந்த ஆஸ்பத்திரிக்குப் போவது? எல்லாம் ஊர்லதான். யானையின் நஞ்சுக் கொடியைக் காயப் போட்டு வெச்சிருப்போம். பிரசவம் கஷ்டமானா, அதை நனைச்சு பெண்ணின் முழங்காலில் போடுவோம். குழந்தை சுலபமாய் பிறந்திடும்” என்றார். ‘கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும்?’ என்று கேட்கும் திரைப்படக் காமெடிபோல, என்னோடு வந்த நண்பர் ஒருவர் முகத்தில் ஏளனச் சிரிப்பு. எங்கள் குழுவில் இருந்த டாக்டர் டி.ஜி.ராமமூர்த்தி தீவிரமாக யோசித்தார். ‘‘ஏம்பா, அதிலிருந்து ஆக்சிடோசின் வெளியாகி, கருப்பையைச் சுருக்கியதால் குழந்தை வெளிவந்திருக்கலாம் இல்லையா?” என்றார். மருத்துவமனையில் பிரசவ நேரத்தில் அதைத்தான் இஞ்செக்‌ஷனாக செலுத்துகிறார்கள். எதற்கும் ஒரு அறிவியல் பின்புலம் உண்டு.

அதுபோல, ‘‘குழந்தை உண்டாக, கருக்கலைப்பு செய்து குடும்பக் கட்டுப்பாடு செய்ய, மாதவிலக்கில் அதிக ரத்தப் போக்கைத் தடுக்க எல்லாம் எங்களிடம் மருந்துண்டு” என்றார் அந்த ஆதிவாசி.  

இன்றும் மஞ்சள் காமாலைக்கு ‘லிவ் 52’ மாத்திரைகளைத்தான் தருவார்கள், நம் ஆங்கில மருத்துவர்கள். கீழாநெல்லி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணிதான் அது. ஆனால், இலவசமான மூலிகையாகச் சாப்பிட்டால் மூடத்தனம்; மாத்திரையாகக் காசு கொடுத்து வாங்கினால் புத்திசாலி என பலருக்கு நினைப்பு.

தன்னுடைய ஆராய்ச்சித் தட்டில் பரவி இருந்த பூஞ்சைக் காளான்களில் மோசமான பாக்டீரியா கிருமிகள் இல்லை என்பதைக் கண்டார் அலெக்சாண்டர் ஃபிளமிங். அந்தப் பூஞ்சையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் பென்சிலின். மருத்துவ உலகம் கண்டறிந்த முதல் ஆன்ட்டி பயாடிக் மருந்து. பல பத்தாண்டுகள் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தந்து, பல ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாற்றிய பென்சிலினின் தாய், சாதாரணப் பூஞ்சைதான். 

கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலை. மெத்தப் படித்த தாவரவியல் நிபுணர்கள் சிலர், காணி பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வழிகாட்டியாக அமர்த்திக்கொண்டு மலையில் நடந்து கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் தாவரவியல் அறிஞர் புஷ்பாங்கதனும் ஒருவர். நடந்து நடந்து இவர்கள் களைப்பாகிவிட, அந்தப் பழங்குடி மனிதர் ஏதோ இலையை மென்றபடி உற்சாகமாக நடந்துகொண்டிருந்தார். இவர்கள் வெட்கத்தைவிட்டு அவரிடம் கேட்டனர். அவர் சில இலைகளை எல்லோருக்கும் கொடுத்து மெல்லச் சொன்னார். அதை சாப்பிட்டதுமே புத்துணர்வு கிடைத்தது. அவர்கள் வியந்தனர்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்!

அது, ‘ஆரோக்கியப் பச்சை’ என்ற மூலிகை. களைப்பு, மன அழுத்தம் என எல்லாவற்றையும் விரட்டி, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் குணம் அதற்கு இருப்பதை ஆராய்ச்சியில் கண்டு பிடித்தனர். அதற்குக் காப்புரிமை வாங்கி, ‘ஜீவனி’ என்ற மருந்து தயாரிக்கப்பட்டது. சக்தி தரும் உற்சாக டானிக். இந்த மருந்தின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு, காணி பழங்குடி மக்களுக்கே செல்லுமாறு ஏற்பாடும் செய்தது கேரள அரசு. ஒரு பழங்குடி இனம், தனது பாரம்பர்ய மருத்துவ அறிவுக்குக் காப்புரிமை பெற்றுச் சம்பாதிக்கவும் முடிந்தது இதுதான் முதல்முறை.

இது நடந்தது 1987-ம் ஆண்டு. 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னொரு ‘ஜீவனி’ இதுவரை உருவாகவில்லை.

காலம் காலமாக வேம்பும் மஞ்சளும் நம் மக்களின் பயன்பாட்டில் மருந்தாக உள்ளன. அம்மை வந்தால் மாரியம்மனுக்கு வேண்டி வேப்பிலை போட்ட நீரில் குளிக்க வைப்பார் பாட்டி. அந்த மூடத்தனம்தான் என்னை மட்டுமல்ல, எண்ணற்ற தமிழர்களைக் காப்பாற்றியது. அதை ஜெர்மன்காரர்கள் திருடிக்கொண்டு போய் காப்புரிமை பெறப் பார்த்தார்கள். நாம் ‘மஞ்சள் முகமே வருக’ என்று டூயட் பாடிக்கொண்டு, ‘மஞ்சள் மகிமை’ படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அதையும் காப்புரிமை போடத் திருடிக்கொண்டு போயினர். சூழல் அறிஞர்கள் வந்தனா சிவாவும், நம்மாழ்வாரும் போராடிக் காப்பாற்றினர்.

நமது கற்றாழையும், தேங்காய் எண்ணெயும் அருமருந்துகளாகப் புத்துயிர் பெற்றுள்ளன. இப்படி நம் நாட்டின் கிராமப்புறங்களிலும், வனப்பகுதிகளிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவத்தால் கண்ட மருந்துகள் எத்தனை எத்தனை உள்ளனவோ? காடுகளில் உள்ள மூலிகைகளில், வெறும் ஏழு சதவிகிதத்தின் பயனை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். நமது ரத்தத்தைத் திருடி ஆராய்ச்சி செய்யும் மேலைநாட்டு முகமூடிக் கள்வர்கள், அரசியல்வாதிகளின் ரகசிய அங்கீகாரத்துடன் அலைகிறார்கள். நம் பாரம்பர்ய அறிவியல் தொழில்நுட்பங்களை மூடத்தனம் எனக் களவுப்போக விடாமல் தடுத்து ஆய்வுசெய்வதும், காப்புரிமை பெற்று சமூகச் சொத்தாக்க வேண்டும். இது அரசின் கடமை மட்டுமல்ல, அறிவுச்செல்வம் பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

(நலம் அறிவோம்)