Published:Updated:

ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி
பிரீமியம் ஸ்டோரி
ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

ஜி.கே.குமார், வலி நிவாரண மருத்துவர்

ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

ஜி.கே.குமார், வலி நிவாரண மருத்துவர்

Published:Updated:
ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி
பிரீமியம் ஸ்டோரி
ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

“பிளாட்பாரத்துக்குப் போய் டிக்கெட் எடுத்துட்டேன் டாக்டர். நான் வழக்கமாகப் போகும் டிரெயின்தான். ஆனால், எந்தத் திசையில் போகணும், நான் எங்கே இருக்கேன் என எல்லாமே கொஞ்ச நேரத்துக்கு மறந்துபோச்சு. உடம்பு வலி ஒருபுறம் வாட்ட, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுட்டேன்.” - ஓர் இளம் பெண், மருத்துவரிடம் பகிர்ந்த வார்த்தைகளே இவை.

கைகால் வலி, தலைவலி, மூட்டுவலி என நாம் அனைவருமே தினசரி வாழ்க்கையில் ஏதாவதொரு வலியைக் கடந்துதான் வந்திருப் போம். பொதுவாக, ஒரு வலி நிவாரணி மாத்திரையுடன் அந்த நாளை மறந்துவிடுவோம். ஆனால், இந்த வலியே நோயாக மாறினால்? அதுதான் ‘ஃபைப்ரோமையால்ஜியா’ (Fibromyalgia). அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது.

ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

ஃபைப்ரோமையால்ஜியா என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘தீராத தசைவலி’ என்பது பொருள். இதனை ‘ஃபைப்ரோமையோசைட்டிஸ்’ அல்லது ‘ஃபைப்ரோசைட்டிஸ்’ என்றும் சொல்வார்கள். ஆயிரம் ஊசிகளால் ஒரே நேரத்தில் குத்தினால் ஏற்படும் வலியை உடலின் அனைத்துப் பாகங்களிலும் உணர முடியும். ஆரம்பத்தில் இந்த அதீத வலி மற்ற நோய்களின் அறிகுறியாகத்தான் நினைக்கப்பட்டது. ஆனால், உடல்வலியுடன் மனரீதியான பிரச்னைகளும் சேர்ந்தே தாக்கியதால் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க மூட்டுவலிக் கழகத்தால் ‘ஃபைப்ரோமையால்ஜியா’ ஒரு நோயாகக் கண்டறியப்பட்டது. தற்போது, உலக அளவில் 3 முதல் 6 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 முதல் 90 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

தீராத வலி எப்படி ஏற்படுகிறது?

வலி, கோபம், மகிழ்ச்சி என அனைத்து உணர்ச்சிகளையும் மூளையில் இருந்து நரம்புகளின் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டுசெல்வது நியூரோடிரான் ஸ்மீட்டர்ஸ் என்கிற நரம்பியக் கடத்திகள்தான். ஹேப்பி ஹார்மோன் எனப்படும் செரட்டோனின் (serotonin) மற்றும் சப்ஸ்டன்ஸ் பி (substance p) போன்றவைதான் வலியைக் கடத்துவதில் ஈடுபடக் கூடியவை. சப்ஸ்டன்ஸ் பி வலியை அதிகளவில் உணரச் செய்யவும், செரட்டோனின் வலியுணர்ச்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஃபைப்ரோ மையால்ஜியா நோயாளிகளுக்கு செரட்டோனின் சுரப்பு குறைந்துவிடும் அல்லது சுரக்கப்படும் செரட்டோனின் போதுமான நேரத்துக்கு உடலில் தங்குவதில்லை. இதனால் சப்ஸ்டன்ஸ் பி அளவு அதிகமாகி, அதிகமான வலியை உடலின் அனைத்துப் பாகங் களுக்கும் கடத்தி, தீவிரமான வலியாக மாற்றும்.

ஃபைப்ரோமையால்ஜியா ஏற்படக் காரணங்கள் என்ன? யாரை அதிகம் தாக்கும்?

பெண்களை, குறிப்பாக 30 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்கு செரட்டோனின் சுரப்பு இயற்கையிலேயே சற்றுக் குறைவு. தூக்கமின்மை, உடலுழைப்பு குறைந்துபோதல், அதிகப்படியான சோகம் போன்றவையும் செரட்டோனின் சுரப்பினைக் குறைத்துவிடும். குடல் அழற்சி நோய் அல்லது ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் தீராத தசைவலி நோய் ஏற்படலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

இந்த நோயால் உடலின் இந்தப் பாகத்தில் மட்டும்தான் வலி ஏற்படும் என்றில்லை. உடலின் மேல் பகுதி, கீழ்ப் பகுதி, வலது பக்கம், இடது பக்கம் என அனைத்து உறுப்புகளிலுமே வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி ஏற்படும். இதுபோன்ற வலி மூன்று மாதங்களுக்கும் மேல் தொடர்ந்தால், அது நிச்சயம் ஃபைப்ரோமையால்ஜியா பாதிப்பாக இருக்கும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

ஃபைப்ரோமையால்ஜியா பாதிப்பில் ஏற்படும் பெரிய சவாலே, இந்த நோயைக் கண்டறிவதுதான். ஏனெனில், ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றில் இது தெரியாது. ஆர்த்ரைட்டிஸ், நரம்பியல் கோளாறுகள், எலும்பு தொடர்பான பிரச்னைகள் என வேறு எந்தப் பாதிப்புகளாலும் இந்த வலி ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மட்டும்தான் மேற்கண்ட பரிசோதனைகள் பயன்படும். வலி தொடர்ந்துகொண்டே இருந்தால், உடனடியாக வலி நிவாரண மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த நோயைக் கண்டறிய சில குறிப்பிட்ட ஆய்வுகள் உண்டு. ஃபைப்ரோமையால்ஜியா பாதிப்பு ஏற்படும்போது உடலில் உள்ள 18 டெண்டர் புள்ளிகளில் (Tender points) அதிக வலி ஏற்படும். உடம்பின் இரண்டு மூட்டுகள் இணையும் இடத்துக்கு டென்டர் புள்ளிகள் எனப் பெயர். வலி பாதிப்புள்ளவர்களுக்கு இந்த 18 இடங்களில் லேசான அழுத்தம் கொடுக்கும்போது குறைந்தபட்சம் 11 இடங்களில் அதிக வலி ஏற்பட்டால், ஃபைப்ரோமையால்ஜியா உறுதி செய்யப்படும். ‘தீவிர மதிப்பெண் ஆய்வு’ எனப்படும் ஆய்வும் மேற்கொள்ளப்படும். 40 வினாக்கள் அடங்கிய இந்த ஆய்வில், நோயாளியின் வலியின் தீவிரம் குறித்தும் மனநிலை குறித்தும் வினாக்கன் கேட்கப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

ஃபைப்ரோமையால்ஜியா சிகிச்சையில் என்ன செய்யக் கூடாது?

வயிறு வலிக்கு குடல் மருத்துவர், கால் வலிக்கு பிசியோதெரபிஸ்ட், தலைவலிக்கு நரம்பியல் மருத்துவர் என ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவரிடம் அலைய வேண்டாம். வலி நிவாரணி மாத்திரைகளும் கூடாது. இந்தப் பாதிப்புக்கு ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்றவை ஒரு சதவிகிதம்கூட உதவாது. மாறாக, வலி நிவாரணி மாத்திரைகளால் பக்கவிளைவுகளே அதிகமாகும். வலி என ஒரே இடத்தில் முடங்கிவிடவும் கூடாது. 

- க.தனலட்சுமி

குடும்பத்தினர் கவனத்துக்கு

அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் சரியாக இருந்தும், நோயாளி வலியால் துடிக்கும்போது, அவரின் குடும்பத்தினரே மனநிலை சரியில்லாதவர் எனச் சொல்லும் நிலையும் அதிகமாக இருக்கிறது. அதுதான் இந்த நோயின் தன்மை என்பதைக் குடும்பத்தார் உணர வேண்டும். இந்தத் தீவிர வலியால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்பவர்களும் இருக்கின்றனர். உடல்வலியால் துவண்டுபோனவர்களிடம் மனம்விட்டுப் பேசி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களின் வேலைகளை மற்றவர்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். வலியைக் குறைக்க மாத்திரைகள், தசைகளை வலுவாக்க உடற்பயிற்சிகள், மனதை அமைதியாக்க யோகா பயிற்சிகள் என அனைத்தையும் ஒன்றாகச் செய்துவந்தால், ஃபைப்ரோமையால்ஜியாவை முற்றிலும் குணப்படுத்தலாம்.

நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை:

* செரட்டோனின் சுரப்பினைத் தூண்டுவதற்காகவும், ஏற்கெனவே உடலில் உள்ள செரட்டோனினை நீண்ட நேரம் உடலில் தக்கவைக்கவும் மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும். இதோடு, தசை வலியைக் குறைப்பதற்காக உள்ள மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரையின்படி உட்கொள்ளலாம்.

* தினமும் காலையிலும் மாலையிலும் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், இயற்கையிலே செரட்டோனின் சுரப்பு அதிகமாகும். ஆரம்பத்தில் நடப்பது கடினமாக இருக்கும். 10 நிமிடங்கள் என ஆரம்பித்து படிப்படியாக அதிகப்படுத்தலாம்.

* ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் நடக்கப் பழகிவிட்டால், நோயின் பாதிப்பு 90 சதவிகிதம் விலகிவிடும்.

* தூங்கும் அறையை மனதுக்குப் பிடித்த மாதிரி வைத்துக்கொள்ளுங் கள். ஆழ்ந்த அமைதியான தூக்கமே, நோயைக் குறைத்து மன அழுத்தத்தையும் தவிர்த்துவிடும்.

* நீச்சல் தெரிந்தவர்கள் ‘வார்ம் பூல் பாத்’ எனப்படும் சுடுநீர் நீச்சல் செய்யலாம். அதனால் வலிகுறைந்து தசைகளும் புத்துணர்ச்சி பெறும்.

* ஏரோபிக்ஸ் பயிற்சிகள், தசை உறுதிக்கான பயிற்சிகள் என வலியின் தன்மைக்கேற்ப உடற் பயிற்சிகள் செய்து தசைகளை வலுவாக்கலாம்.

* எலும்புகளை உறுதியாக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism