Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!

‘நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்’ என்பதே எல்லோருடைய வேண்டு தலாகவும் இருந்துள்ளது. விவிலியத்தைப் படிக்கும்போது, ஏசு தன் வாழ்நாள் முழுவதும் போதனை செய்ததைவிடவும் நோயையும் துயரையும் போக்கியதே பெரும்பகுதி. இதை ஒரு நாடு தன் மக்களுக்குச் செய்ததுடன், உலக நாடுகளைத் தேடித் தேடி செய்துகொண்டிருக்கிறது. அது, அமெரிக்காவோ, ஐரோப்பாவின் செல்வம் கொழிக்கும் நாடுகளோ அல்ல! அது, கம்யூனிஸ்ட் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவால் கட்டி எழுப்பப்பட்ட க்யூபா.

‘‘அமெரிக்கா, உலக நாடுகளுக்குப் போரையும் அழிவையும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் நாங்கள் டாக்டர்களையும் மருந்துகளையும் மனித நேயத்தையும் அனுப்பி வைக்கிறோம். உலகின் எல்லா போர் முனைகளிலும் க்யூபா வுக்குப் பங்கு இருக்கும். ஆனால், ஆயுதங்களை ஏந்தி மக்களைக் கொல்வதற்கு அல்ல. அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை தந்து காப்பாற்றவே எங்கள் டாக்டர்கள் அங்கு போகிறார்கள்’’ என காஸ்ட்ரோ ஒருமுறை சொன்னார்.

க்யூபா தன் மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி தருவதுடன், இலவச மருத்துவமும் தந்து வருகிறது. மருத்துவக் கல்லூரியில் சேர பல லட்சங்கள் லஞ்சம், அல்லது வசதிமிக்க மேல்தட்டு மாணவர்கள் மட்டுமே சேர வழிவகுக்கும் ‘நீட்’ (சுத்தம்) இல்லாத கல்வி முறை அங்கு இல்லை. அங்கு மருத்துவம் படிக்க இரண்டு வகை மாணவர்களுக்கு முன்னுரிமை. ஒன்று, தன் ஏழை சகோதரர்களுக்குச் சேவை செய்யும் உணர்வு. இரண்டு, மருத்துவம் எட்டாத கிராமப்புற, மலைப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்யூபாவில் மருத்துவம் படித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் கட்டாயமாகக் கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றியாக வேண்டும். க்யூபா, தன் இளைஞர்களுக்கு மருத்துவக்கல்வி தருவதுடன் மட்டும் திருப்தியடையவில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகள், ஏழை நாடுகளின் மாணவர்களுக்கும் இலவச மருத்துவக் கல்வி தருகிறது. இங்கு கல்விபெற்ற மாணவர்கள் ‘அதிக வருமானம் தரும் நாடுகளுக்கு ஓடிவிட மாட்டோம்’ என்ற உறுதிமொழி தர வேண்டும். அது மட்டும்தான் நிபந்தனை. ஏழை நாடுகளின் மாணவர்களுக்கு முழுமையான உதவித் தொகையுடன் மருத்துவக் கல்வி தந்து வருகிறது க்யூபா. அமெரிக்காவின் 100 மாணவர்களும்கூட அங்கு மருத்துவம் படிக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு நேர் கீழே இருக்கும் குட்டி தேசம் க்யூபா. இங்கு கம்யூனிச அரசு அமைந்ததும், அமெரிக்காவின் தூக்கம் தொலைந்தது. அதனால் பொருளாதாரத் தடை விதித்தது. பெட்ரோல், சிமென்ட், மருந்துகள், உரங்கள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. இதையெல்லாம் மீறி க்யூபா படைத்த சாதனை இது.

பணக்கார தேசமான அமெரிக்காவில் முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் சார்ந்ததாக மருத்துவச் சேவை இருக்கிறது. அடித்தட்டு மக்கள் மருத்துவக் காப்பீடு செய்துகொள்வதில்லை. ‘ஏழைகள் சிகிச்சை பெறாமல் செத்துப் போனால்தான் என்ன?’ என்ற நினைப்பு அங்கு இருக்கிறது. க்யூபாவில் மக்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம், கல்வி தருவது அரசின் பொறுப்பு. எவ்வளவோ நெருக்கடிகள் வந்தபோதும் தன் மக்களை அந்தத் தேசம் பட்டினியால் சாக விட்டதில்லை. மாட மாளிகைகள் இல்லையென் றாலும், எல்லோருக்கும் கண்ணியமாக வாழ முடிகிற அளவில் வீடு இருக்கிறது. மருத்துவத்தில் க்யூபா அடைந்த முன்னேற்றம் மகத்தானது. உலகிலேயே க்யூபாவில்தான் டாக்டர்கள் அதிகம். 155 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். தனிமைப்படுத்தல், பொருளாதாரத் தடைகள், மருத்துவர்களைத் தம் பக்கம் இழுத்தல், அவதூறுகள் பரப்பல் என அனைத்தையும் வென்று க்யூபா, உலகின் முதன்மை மருத்துவ நலம் பெற்ற நாடு என்ற நிலையை எட்டியுள்ளது. இதை முழுமையான ஆய்வுக்குப் பின் உலகச் சுகாதார நிறுவனமே அறிவித்துள்ளது. நோயைக் குணப்படுத்துவதை விடவும், நோய் வராமல் தடுப்பதற்கே க்யூபா முன்னுரிமை தந்து வருகிறது. குடும்ப நலத்தைப் பாதுகாக்கும் குடும்ப மருத்துவத்துக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரசவத்தில் குழந்தைகள் இறந்துபோவது உலகிலேயே க்யூபாவில் மிகக் குறைவு. ‘2000-மாவது ஆண்டில் அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற உலகச் சுகாதார நிறுவனத்தின் கனவை நனவாக்கியுள்ள ஒரே நாடு க்யூபா.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு!

க்யூபா ‘சர்வதேச மருத்துவச் சுற்றுலா’ என மருத்துவத்தை வியாபார லாபப் பொருள் ஆக்க வில்லை. அதை அர்ப்பணிப்பான சேவையாகவே உலகத்துக்குத் தருகிறது. நோய் தடுப்பு ஊசிகள், மருந்துகள் ஆராய்ச்சியில் க்யூபா முதலிடம் வகிக்கிறது. மலிவு விலையில் மருந்துகளைத் தயாரிப்பதுடன், அவற்றை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உலகின் எந்த மூலையில் என்ன நோய் தாக்கினாலும், இயற்கைச் சீற்றம் எங்கு நிகழ்ந்தாலும், அங்கு முதலில் சென்று சிகிச்சை அளிப்பது க்யூபா டாக்டர்கள்தான்.

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் சூறாவளி தாக்கியபோது, காஸ்ட்ரோ உடனே ஒரு மருத்துவக் குழுவை அங்கு அனுப்பினார். அவர்கள் அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் இரவு - பகல் பாராது சேவை புரிந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு எடுத்த ஒரு கணக்கின்படி, க்யூபாவின் 50,000 மருத்துவர்கள், உலகின் 60 ஏழை நாடுகளில் சேவை புரிந்து கொண்டிருந்தனர். இதையெல்லாம் சுட்டிக் காட்டி, ‘இன்னும் எத்தனை காலம் நாம் க்யூபா மீது பொருளாதாரத் தடை விதித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?’ என ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் காட்டமாகக் கேட்டது. அமெரிக்கா - க்யூபா உறவு சீரடைய, அதுவே அடித்தளமிட்டது.

க்யூபாவில் பயிற்சி பெறும் மருத்துவர்கள் அனைவருமே, மக்கள் எத்தகைய வசதிகளுடன் வாழ்கிறார்களோ, அதே வசதியுடன் வாழ்ந்து, சேவை செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். தான் பிறந்த சமூகத்தை மறந்து, வஞ்சித்து நகர்ப் புறங்களின் பளபளப்புக்கும், வசதிகளுக்கும் மயங்கிவிடும் மருத்துவர்கள் கற்க வேண்டிய முதன்மைப் பாடம் இது.

மருத்துவக் கல்வியை முற்றிலும் வணிக மயமாக்கி, வசதிமிக்க, நகர்ப்புற மேல்தட்டு மக்களுக்கே மருத்துவக் கல்வி என்று மாற்றிவரும் நமது மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி மருத்துவக் கல்வி முறை க்யூபாவிடம் உள்ளது. நமது அரசின் அணுகு முறையும், நமது மருத்துவக் கல்வி முறையும், நமது மாணவர்களின் மருத்துவக் கல்வி பற்றிய சிந்தனையும் மாறாத வரை, அனைவருக்கும் நலவாழ்வு என்பது எட்டாக் கனவாகவே இருக்கும். மருத்துவம் பெற முடியாது மரணிப்பவர்களின் துயரங்களும், மருத்துவத்துக்குச் செலவுசெய்து கடனாளியாகி தற்கொலை செய்துகொண்டு சாகிறவர்கள் கதையும் முடியாத தொடர் கதையாகவே இருக்கும்.

(நலம் அறிவோம்)