ஃபோலிக் அமிலம் Folic Acid (B9)... இது நீரில் கரையும் வைட்டமின்களில் மிகவும் முக்கியமானது. அனீமியா எனும் ரத்தச்சோகை நோயைக் குணப்படுத்துவதில் வைட்டமின் B12 உடன் ஃபோலிக் அமிலமும் இணைந்து செயல்படுகிறது.

நமது உடலில் கல்லீரலில் 3 முதல் 4 மாதத்துக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் சேர்த்து வைத்துக்கொள்ளப்படுகிறது. நமது உணவின் மூலம் ஃபோலிக் அமிலம் கிடைத்தாலும் அது சரிவர உறிஞ்சப்படுவதில்லை. மேலும் கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகத் தண்ணீரில் வேக வைக்கும்போது இந்தச் சத்து அழிந்துவிடுகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை?
* 0-6 - மாதக்குழந்தைக்கு - 40 மைக்ரோகிராம்
* 7-12 மாதக்குழந்தைக்கு - 60 மைக்ரோகிராம்
* 1-12 வயது வரை - 100 மைக்ரோகிராம்
* 13 வயதுக்கு மேல் - 200 மைக்ரோகிராம்
* பாலூட்டும் தாய்மார்களுக்கு - 300 மைக்ரோகிராம்
* கர்ப்பிணிகளுக்கு - 400 மைக்ரோகிராம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதில் ஃபோலிக் அமிலம் உள்ளது?
* தானிய வகைகள்.
* பச்சைக் காய்கறிகள்.
* மாமிசம் மற்றும் ஆட்டின் ஈரல்.
* கீரைவகைகள் (அடர் பச்சை நிறம் கொண்டவை - பசலைக் கீரை, லெட்யூஸ், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை)
ஃபோலிக் அமிலம் குறைபாட்டால் வரும் பிரச்னைகள்:
B12 வைட்டமினுடன் இணைந்து ஃபோலிக் அமிலம் செயல்படக்கூடியது. ஆனால், இதில் ஏற்படும் குறைபாட்டால் ரத்தச்சோகை ஏற்படுகிறது. பெண்கள் கருவுற்றிருக்கும்போது, ஃபோலிக் அமிலம் குறைபாட்டால் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது. இவை தவிர, வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் ஏற்படும். வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் சரிவரச் சுரக்காமல் போகும்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் முதுகெலும்பைப் பாதிக்கும் ஸ்பைனா பிஃபைடா (Spina bifida) என்கிற பிரச்னையால் முதுகெலும்பு மட்டுமின்றி, கால் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளின் இயக்கமும் பாதிக்கப்படும். இப்படிப் பிறக்கும் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும்.