Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!

யிருள்ள மனிதர்களுக்கே 24 மணி நேரமும் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முடிகிற நவீன யுகம் இது. ஆனால், இந்தக் காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் பகலில் மட்டும்தான் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். மாலையில் ஒரு சந்தேக மரணம் நிகழ்ந்தால், பிண அறையில் அந்த உடலை வைத்துவிட்டு, உறவுகள் கண்ணீரோடு இரவு முழுக்க வெளியில் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. மின்சார வசதி இல்லாத, பளிச்சிடும் விளக்குகள் பயன்படுத்த வசதியில்லாத காலத்தில் உருவாக்கப்பட்ட விதிகளை இன்னமும் மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு ஹைதர் காலத்து அரிக்கேன் விளக்கு சிந்தனை இது!

மத்தியப்பிரதேச மாநிலம், நரசிங்கபூரில் கடந்த மே 29-ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் வெட்டவெளியில், ஒரு இளம்பெண்ணின் பிரேதத்துக்கு போஸ்ட்மார்ட்டம் செய்தது பெரும் சர்ச்சையானது. அந்த ஊர் அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்குக் கதவு கிடையாது. திறந்து கிடந்த அதன் உள்ளே போன ஒரு மாடு, அங்கேயே இறந்துவிட்டது. அதை அகற்ற வழி இல்லாததால், மின்சாரம் தாக்கி இறந்த ஒரு இளம்பெண்ணின் உடலை, திறந்தவெளியில் ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்தனர். இறந்தவர்களைத் தெய்வங்களாகக் கருதி வணங்கும் மரபு நம்முடையது. போஸ்ட்மார்ட்டம், மார்ச்சுவரி போன்ற விஷயங்கள் நமக்கு அதிர்ச்சி தருவனவாகவே இருக்கும்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!

பரபரப்பான அரசு மருத்துவமனையின் ஆள் நடமாட்டமற்ற ஒரு மூலையில், மங்கிய குண்டு பல்பின் ஒளியில், பேய் பங்களா போல ஒரு பழமையான கட்டடம் இருந்தால், அதுதான் ‘மார்ச்சுவரி’ என்னும் பிண அறை. ஒரு காலத்தில் வீட்டின் ஆதாரச் சுருதியாக இருந்த ஒருவர், தன் முதுமைக் காலத்தில் ஒதுக்கப்பட்டு இருப்பது போல அந்த அறை கேட்பாரின்றிக் கிடக்கும்.

அதனுள் திடீரென நுழையும் ஒருவர், அங்கு உடல்கள் கிடத்தப்பட்டிருப்பதைக் காணும்போது ‘இறந்த மனிதரின் மதிப்பு இவ்வளவுதானா’ என்று அதிர்ந்து போகக்கூடும். தரையிலோ, சிமென்ட் மேடை மீதோ, துருப்பிடித்த ட்ராலியிலோ கிடக்கும் உடல்களைப் பார்ப்பது, காணச் சகியாத கோரக் காட்சி. இப்போது மருத்துவக் கல்லூரி மார்ச்சுவரிகளில் மட்டும் உடல்களைக் குளிரூட்டப்பட்ட அடுக்குப் பேழைகளில் வைக்கும் வசதி வந்துள்ளது.

சமீபத்தில், மருத்துவப் பேராசிரியர் நடராஜன் தனது 60 ஆண்டுக் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர், அரசுப் பணியில் முதலில் சேர்ந்தது முதுகுளத்தூர் மருத்துவமனையில். கூட்டம், ஆர்ப்பாட்டம், கலவரம் எல்லாமே அன்றைக்கு சகஜம். தினம் ஒரு மரணம் நிகழும். இன்று ஒருவரை வெட்டினால், நாளை எதிர் கோஷ்டியின் மற்றொரு உடல் போஸ்ட்மார்ட்டத்துக்கு நிச்சயம் வந்துவிடும் ‘வீர மண்’ அது. காடு போன்று பரந்த மருத்துவமனையின் ஒதுக்குப்புறமான மூலையில் ஒரு ஓட்டுக் கட்டடம். அதில் சில ஓடுகள் விழுந்துவிட்ட இடைவெளிகள் வானம் பார்த்துக்கொண்டிருக்கும்.

கல்லூரி நாட்களில் ஒரு போஸ்ட்மார்ட்டம் கூடப் பார்க்காமல், தடயவியல் பாடம் தேர்ச்சி பெற்று முதல்முதலாகப் பிணம் அறுத்துப் பார்க்கப் போவது என்பது ஒரு பேய் அனுபவம். ஃபார்மசிஸ்ட்டும் துப்புரவுத் தொழிலாளரும் தைரியம் கொடுத்து, ‘யாமிருக்க பயமேன்’ என அழைத்துச் சென்றனர். துப்புரவுத் தொழிலாளரே எல்லாம் செய்து முடிக்க, ஃபார்மசிஸ்ட் ஒவ்வொரு தடயம் பற்றியும் விவரிக்க, பாதி பார்த்தும் பார்க்காமலும் பதிவுசெய்த அனுபவத்தைச் சொல்லி முடித்தார் நடராஜன்.

தலைவர்கள் ஒரு சில மணி நேரம் பேசும் கூட்டத்துக்காக மேடைக்கு ஏ.சி போட்டு, பாத்ரூமும் கட்டும் இந்தக் காலத்தில்கூட, பிணக்கிடங்குகள் பெரிய மாற்றமின்றி அப்படியே உள்ளன. தடயவியல் பரிசோதனை என்பது குற்றவியல் வழக்கின் பிரதான ஆதாரம். ‘கொலையா... தற்கொலையா?’, ‘எப்படி, ஏன், எதனால் இறப்பு நிகழ்ந்தது’ என்பதை முடிவு செய்யும் இடம் அதுவே. எனினும், சட்டம் போல அதுவும் ஒரு இருட்டறையாகவே உள்ளது. நீதிக்கு உள்ள சோதனைகள், நிர்பந்தங்கள் இங்கும் உண்டு. உண்மை மறைக்கப்படுவதும், பொய்கள் புதைக்கப்படுவதும், தீராத சந்தேகங்கள் உலவிக்கொண்டிருப்பதும் இளவரசன் வரை தொடரும் கதைதான்.

இறந்து கிடப்பவரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய, காவல்துறையின் அனுமதி வர வேண்டும். அதற்கு பல மணிகளோ, நாட்களோ கூட ஆகலாம். பல நாட்கள் குவிந்து கிடக்கும் பல சிதைந்த உடல்கள், சாதாரண மனிதர்கள் நுழையவும்  முடியாத நிலையில் இருக்கும். ஒரு கட்டு ஊதுவத்தியும், மணமூட்டப்பட்ட முகமூடியும் இல்லாமல் எவரும் பிணக்கிடங்குக்குள் நுழைய முடியாது. ரிட்டயர் ஆன பின்னும், ஊதுவத்தி மணக்கும் பூஜை அறைக்குச் செல்லும்போது பிணவறைதான் நினைவுக்கு வரும்.

போஸ்ட்மார்ட்டம் ஒன்றும் புதிதல்ல... 5,000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் பிரமிடுகளில் வைக்கப்பட்ட மம்மிகள் அப்படிப் பதப்படுத்தப் பட்டவையே. கொலை செய்யப்பட்ட மன்னன் சீஸரின் உடல்கூடப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாம். 23 கத்திக் குத்துகளில் இரண்டாவது குத்துதான் மரணத்துக்குக் காரணம் எனப் பதிவு செய்யப்பட்டது.

சந்தேகத்தின்பேரில் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதையும், புதைக்கப்பட்ட பிணம் தோண்டி எடுக்கப்பட்டு மறு பரிசோதனை செய்யப்படுவதையும் படிக்கிறோம். அதைச் செய்யும் மருத்துவக் குழுவின் மனநிலை, மன அழுத்தம் பற்றி எவ்வளவு அக்கறை செலுத்தப்படுகிறது? செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழிலாளர் போல, சாராயத் துணையை நாடுவதைத் தவிர இந்தப் பணியில் இருப்பவர்களுக்கும் மாற்று இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு!

போஸ்ட்மார்ட்டம் பற்றிய காலாவதியான அணுகுமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படுவதும், மார்ச்சுவரிகளில் மனிதாபிமானச்  சீர்திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வலியுறுத்துவதும் மருத்துவத் துறையின் கடமை. பிரேதப் பரிசோதனையை, வந்த சில மணி நேரங்களில் செய்து முடிக்க வேண்டுமெனும் சட்ட வலியுறுத்தலை அரசு கொண்டு வர வேண்டும். அகால மரணமுற்றோரின் உறவுகள் வேதனையுடன் காத்திருக்கும் நிலையை மாற்றுவது அரசின் சமூகக் கடமை. தினமும் விபத்துகளும், அகால மரணங்களும் பெருகிவரும் காலத்தில் விரைவாகப் பிரேதப் பரிசோதனை செய்து தருவது, துன்பத்தில் காத்திருக்கும் குடும்பத்தினருக்குத் தரும் மிகப்பெரிய ஆறுதல்.

நல்ல ஒளி வசதிகொண்ட அறுவைச் சிகிச்சை அரங்கு போல போஸ்ட்மார்ட்டம் அரங்கை மாற்றுவதற்கு பெரிய செலவு ஆகாது. இறந்தவர்களை எரிக்கும் மின் மயானங்களைக்கூட அழகிய நந்தவனங்களைப் போலச் சமூக நோக்கம் கொண்ட தொண்டு நிறுவனங்கள் மாற்றி, நிர்வகித்து வருவது அரசுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும்.

பிரேதப் பரிசோதனை செய்யும் சூழலிலும், குழுவினரின் நலன்களிலும் சிறப்பான மாற்றங்கள் தேவை. ஒரு பிரேதப் பரிசோதனையை முடிக்கும் டாக்டருக்கு, அடுத்த சில மணி நேரங்களில் அக்கறையோடு பல நோயாளிகளுக்குச் சிகிச்சை தர வேண்டிய பணிச்சுமை ஏற்படும். அவர் என்ன மனநிலையில் சிகிச்சை தர முடியும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அரசு அலுவலகங்களின் எந்த நிலையிலும் பணம் பிடுங்குவது என்ற மனிதாபிமானமற்ற சூழல், சோகத்தில் வாடுவோரையும் ஆத்திரக்காரர்களாக மாற்றிவிடுவதாகவே உள்ளது. மரணம் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும், சமூகக் குற்றங்களைக் குறைக்கவும் பெரிதும் உதவும் பிரேதப் பரிசோதனைகளுக்கான முக்கியத்துவமும் வசதிகளும் அவசியம்.

(நலம் அறிவோம்)