Published:Updated:

ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்... குறைபாடா, வரமா? - மருத்துவ விளக்கம் #AnxietyDisorder

ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்...  குறைபாடா, வரமா? - மருத்துவ விளக்கம் #AnxietyDisorder
ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்... குறைபாடா, வரமா? - மருத்துவ விளக்கம் #AnxietyDisorder

ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்... குறைபாடா, வரமா? - மருத்துவ விளக்கம் #AnxietyDisorder

ண்மைக்காலமாக அந்த இளைஞனுக்கு ஒரு பிரச்னை. இயல்பாக இருக்கும்போதே உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் வியர்த்துக் கொட்டியது. காரணம் புரியவில்லை. அவ்வப்போது, காரணமில்லாமல் பதற்றம் ஏற்பட்டது. முக்கியத் தருணங்களில்கூட அவனுடைய சிந்தனை தடைப்பட்டது. இந்த அறிகுறிகள் மெள்ள மெள்ள அவனுக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தின. அவன் மருத்துவரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னான். அவர் சொல்லித்தான், இது `ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்' (Anxiety disorder) எனும் குறைபாட்டுக்கான அறிகுறி என்பது தெரிந்தது.

ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் ' ஏற்படுவது ஏன்... இதன் அறிகுறிகள் என்னென்ன... தடுப்பது எப்படி? -  விளக்குகிறார்  மனநல மருத்துவர் அசோகன்... ``எதிர்பாராத சம்பவங்கள் நமக்கு நிகழ்வதும், அவற்றிலிருந்து நாம் மீண்டுவருவதும் இயல்பானது. ஆனால், நடந்த ஒரு நிகழ்வைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்ப்பது, நமக்குத் தொடர்பில்லாத விஷயத்தை, யாரோ சொல்லிக் கேட்டதை வைத்துக்கொண்டு நாமாகவே சில விளைவுகளை யூகிப்பது போன்றவை தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கும். இதனுடன் பயமும் சேர்ந்தால் `ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்' ஏற்படும்.

காரணங்கள்..

இதற்கான காரணத்தை உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என இரண்டாகப் பிரிக்கலாம். தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தால் இதயம் வேகமாகத் துடிக்கும். இதனால், `ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அட்ரினல் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் `அடிசோனியன் க்ரைசிஸ்' (Addisonian crisis) என்ற நிலை ஏற்படும். அதாவது, ரத்த அழுத்தம் மாறும். இதனாலும் பதற்றம் ஏற்படலாம். இதயத்திலிருந்து ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் முழுமையாக வெளியேறாமல் சிறிதளவு ரத்தம் பின்னால் செல்லும். இதை `மிட்டல் வால்வ் புரோலேப்ஸ்' (Mital valve prolapse) என்று குறிப்பிடுவோம். இதுவும் ஒரு காரணமாகலாம். ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளும்போது அதன் விளைவாகவும் ஏற்படலாம். எதிர்மறையான அனுபவங்களின் தாக்கத்தை மனதுக்குள் அசைபோட்டபடியே இருப்பதால் உருவாகும் பதற்றமும் பயமும் ஆங்சைட்டி டிஸ்ஆர்டருக்கு வழிவகுக்கும். இதேபோல் நமக்கு நடக்காத நிகழ்வுகளை கற்பனையாக நாமே யூகித்துக்கொண்டிருப்பதும் இந்தக் குறைபாடு ஏற்படக் காரணமாகிவிடும்.

ஒரு நாளைக்குச் சாதாரணமாக 4,000 எண்ண ஓட்டங்கள் நம் மனதுக்கும் மூளைக்கும் சென்று வரும். 14 நிமிடங்களுக்கு ஒருமுறை வேறு எண்ணங்கள் தோன்றும். இது ஏற்படும்போது எண்ணவோட்டங்கள் அதிகமாக இருக்கும். தினசரி நடவடிக்கைகளில்கூட குழப்பம் உண்டாகலாம். ஞாபகமறதி அதிகமாகும். தன்னிச்சையாக இயங்கும் நரம்பு மண்டலம் `சிம்பதெட்டிக் மோடு’க்கு (sympathetic mode) மாறும். இதனால் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், வியர்வை அதிகரிக்கும். பேசுவதில் சிரமம் ஏற்படலாம். சிறுநீர், மலம் கழிக்கத் தோன்றும். நடுக்கமும் உண்டாகும்.

யாருக்கெல்லாம் ஏற்படும்?

பொதுவாக எல்லோருக்குமே சிறிய அளவில் `ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்' இருக்கும். அது, அதன் எல்லையைத் தாண்டும்போதுதான் பிரச்னையாக மாறுகிறது. பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்குத்தான் இந்தக் குறைபாடு அதிகமாக இருக்கிறது. பாலியல்ரீதியாக ஆண்களுக்கு விரைப்புத்தன்மை, திருப்தி ஏற்படுதலில் இருக்கும் தாழ்வுமனப்பான்மையே இதற்கு அடிப்படையான காரணம். மது உள்ளிட்ட போதைப்பழக்கங்கள் இருப்பவர்களுக்கு இது ஏற்படலாம். பதின்பருவத்தில் உள்ளவர்களுக்கும் இந்தக் குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தீர்வுகள்

`ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்' என்கிற குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே எளிய பயிற்சிகள் மூலம் சரிசெய்துவிட முடியும். மனதைச் சாந்தமாக வைத்துகொள்வது, இசை கேட்பது,  புத்தகங்களைப் படிப்பது, நல்ல சினிமாக்களைப் பார்ப்பது போன்றவற்றில் மனதைச் செலுத்தலாம்.

 `த்ரீ ஃபோர் செவன்’ (347) மூச்சுப்பயிற்சி நல்ல பலனைத் தரும். முதலில் `ஒன், டூ, த்ரீ ’(1, 2, 3) என எண்களை எண்ணிக்கொண்டே மூச்சை

நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். பிறகு, `ஒன், டூ, த்ரீ, ஃபோர் (1, 2, 3, 4) என எண்ணியபடியே மூச்சை அடக்கி வைக்க வேண்டும். பிறகு  `ஒன், டூ, த்ரீ, ஃபோர், ஃபைவ், சிக்ஸ், செவன்’ (1, 2, 3, 4, 5, 6, 7) என எண்ணியபடியே மூச்சை வெளியேவிட வேண்டும்.

மேலும், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள், யோகா போன்றவற்றைச் செய்யலாம். நமக்கு மகிழ்ச்சியைத் தரும் கற்பனைகளை, எண்ணங்களை நினைத்து ஆனந்தம் அடைவதும்கூட சிறந்த பயிற்சிதான். ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் தீவிரமான கட்டத்தை எட்டியிருந்தால், இந்தப் பயிற்சிகளோடு, மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

இது சிறிய அளவில் இருப்பது நல்ல விஷயம்தான். தேர்வு நேரங்களில் அது குறித்த பயம் நம்மைத் தயார்ப்படுத்தி, சிறப்பான முறையில் தேர்வு எழுதவைக்கும். ஆனால், அதே பயம் அளவைக் கடந்துவிட்டால் மொத்தமாக நம் திறனை முடக்கிப்போட்டுவிடும். குறைபாட்டின் தன்மைக்கேற்ப அளவறிந்து, கவனமாகக் கையாண்டால், ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் குறைபாடு அல்ல... வரம்’’ என்கிறார் அசோகன்.
 

அடுத்த கட்டுரைக்கு