Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 - மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?

 மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 -  மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 - மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 - மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
 மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 -  மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 - மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?

‘‘எனக்கு வயது 40. நான் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியமா?’’ - நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். என்ன சொல்வது எனத் தயக்கம். ‘‘அவசியம்” என்று சொன்னால் ‘டாக்டர்கள், கமிஷனுக்காக எல்லா டெஸ்ட்டையும் செய் என்பார்கள்’ என நினைப்பார். ‘‘வேண்டாம்” என்றால், ‘திடீரென ஏதாவது வந்தால் என்ன செய்வது? எதற்கும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வது நல்லதுதானே?’ என்பார்.   

 மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 -  மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?

எனவே, அவருக்குப் புரியும் வகையில், “உங்கள் வண்டிக்கு ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல்    எஃப்.சி செய்துதானே அனுமதி பெறுகிறீர்கள்? தேவையா, தேவையில்லையா என்ற கேள்விக்கே இடமில்லை அல்லவா? அதுபோல உங்கள் வயதுக்கு ஏற்ப குறைந்தபட்ச பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது” என்றேன்.

“என்ன என்ன பார்த்துக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். குடும்ப டாக்டர் என்ற வகையில், “உங்கள் வயதுக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, யூரியா, க்ரியாடின் என அடிப்படையான பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள். இதயப் பரிசோதனைக்கான ஈ.சி.ஜி, தேவையானால் இதயச் செயல்பாடு அறியும் ட்ரெட் மில் செய்யலாம். குறைந்தபட்சமாக இவற்றைச் செய்துகொண்டால் போதும்” என்றேன்.

சில நாட்களுக்குப் பின் அவர் திரும்பவும் வந்தார். கோவையில் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் அவரும், அவரது மனைவியும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொண்ட இரண்டு கனத்த ஃபைல்களை என் முன் வைத்தார். அவர் முகத்தில் பெரிய திருப்தியும், நம்பிக்கையும் தெரிந்தது. “எங்கள் இருவருக்கும் ஒரு குறையுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரையும் பார்டரில் இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கும் சில மருந்துகள் எழுதிக்கொடுத்தார்கள். அடுத்த வருடம் அவசியம் செக்கப்புக்கு வரச் சொன்னார்கள்” என்றார். அந்த ஃபைலில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளின் பதிவுகள் இருந்தன. பல சிறப்பு மருத்துவர்களும் பார்த்திருந்தனர். டிரெட்மில் ஈ.சி.ஜி, முழு உடல் ஸ்கேன், எம்.ஆர்.ஐ, Abdominal Sonogram என மூளை, இதயம், வயிறு என உடல் உறுப்புகள் அனைத்தும் அக்குவேறு ஆணி வேறாக அலசிப் பார்க்கப்பட்டிருந்தன. நண்பர் ஒரு பெரிய கம்பெனியின் அதிகாரி என்பதால் அவருக்கும் அவரது மனைவிக்குமான கனத்த தொகை பற்றிய கவலை எதுவும் இல்லை. ‘இனி ஒரு வருடத்துக்குக் கவலையில்லை’ என்ற திருப்தி அவர்கள் முகத்தில் இருந்தது.

ஆனால், அடுத்து என்னைப் பார்க்க வந்த ஒரு சாதாரண நடுத்தர வர்க்க, தனியார் நிறுவன ஊழியருக்கு இது தாங்குமா? அவர் இத்தனை பரிசோதனைகளையும் காசு கொடுத்துச் செய்துகொள்ள முடியாது. அவருக்கு என்னைவிட்டால் வேறு வழியில்லை. எனக்கு எனது கை, ஸ்டெதஸ்கோப், வாய் தவிர வேறு கருவி இல்லை. சில எளிய பரிசோதனைகளைச் செய்து கொள்ளுமாறு எழுதிக்கொடுக்கலாம். அருகில் இருக்கும் இதய மருத்துவர், மகளிர் மருத்துவர் ஆலோசனையைப் பெறச் சொல்லலாம். தேவையானால் குறைகள் உள்ள உறுப்பைப் பரிசோதிக்க சிறப்பு மருத்துவரிடமும் அனுப்பலாம். அவ்வளவே!     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 20 -  மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா?

ஒரு மனிதனுக்கு நடுவயதைக் கடக்கும்போது இயல்பாக ஏற்படும் பிரச்னைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொடிய சிறுநீரகக் கோளாறு போன்றவையே. இவை தவிரப் பெண்களுக்கு ரத்தச் சோகை, பிறப்புறுப்புப் பிரச்னைகள், மார்பக நோய்கள் ஏற்படலாம். குறைந்தபட்சமாக இவற்றுக்குப் பரிசோதனை செய்துகொண்டு, பிரச்னை இருந்தால் எளிய மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதும், தேவைப்படும்போது தமது டாக்டரின் ஆலோசனையைப் பெறுவதும் போதுமானது. மருத்துவ இன்ஷூரன்ஸ், பணிபுரியும் நிறுவனத்தின் மருத்துவ உதவி இல்லாதபோது, அதிகச் செலவு பிடிக்கும் பரிசோதனைகள் தாங்கமுடியாத பொருளாதாரச் சுமையாகவே இவர்களுக்கு இருக்கும்.

கடந்த ஆண்டு தமிழக அரசு ‘அம்மா மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதேபோல பெண்களுக்கான சிறப்பு ஹெல்த் செக்கப் செய்யும் திட்டமும் உருவானது. மாவட்ட அரசு தலைமை மருத்துமனைகளில் குறைந்த கட்டணத்தில் இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொண்டு, மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். கொஞ்சம் சகிப்புத் தன்மை தேவைப்படும், அவ்வளவே! இதுதவிர ‘அம்மா ஆரோக்கியத் திட்டம்’ என்ற பெயரில் அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இப்போது ஒரு மருத்துவப் பரிசோதனை செய்கிறார்கள். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், ஹீமோக்ளோபின் அளவு, சருமப் பரிசோதனை, எக்ஸ்ரே, புற்றுநோய் பரிசோதனை, ஈ.சி.ஜி போன்ற அடிப்படைப் பரிசோதனைகளை இலவசமாகச் செய்கிறார்கள்.
 
இத்தகைய பரிசோதனைகளும், முன் கண்டறிதலும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளம் வயதினருக்கும் மிகவும் தேவை. பள்ளிக் கல்வித்துறை புத்தெழுச்சியுடன் செயல்படத் துவங்கியுள்ள இந்த நேரத்தில், நமது குழந்தைகள் கல்வியில் மட்டுமின்றி ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்க முயற்சி மேற்கொள்வது அவசியம். ஏற்கெனவே அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றபோதிலும், அது எத்தனை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை நாமறிவோம்! பள்ளி முடித்து, உயர் கல்வி பெறச் செல்லும் மாணவர்கள் ஒவ்வொருவரின் மருத்துவநல விபரத்தை அரசு அறிவது, ஆதார் அட்டை பெறுவதைவிட முக்கியமானதாகும்.

பள்ளி நிறைவுச் சான்றிதழுடன் மருத்துவநலச் சான்றிதழ் பெறுவதையும் கட்டாயமாக்குவது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நற்சான்றிதழ் தருவதாகும். முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு நிதியில் ஓரளவை மாணவர் நலனுக்கு ஒதுக்குவதன் மூலம், இதைச் சிறப்பாகக் கல்வித்துறையே செய்துவிட முடியும். தனியார் பள்ளிகளிலும் இதைச் செய்ய வைக்க முடியும். நிறைய கட்டணம் வாங்கும் இப்பள்ளிகள் நிச்சயமாக இதை ஒரு சுமையாக அன்றி, சமூகக் கடமையாக மேற்கொள்வார்கள் என நம்பலாம்.

இதன் நீட்சியாகத் தொழிற்சாலைகளையும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளையும், கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் இணைப்பதன் மூலம் நாட்டின் ஆரோக்கியத்தை விரைவாக உயர்த்திவிட முடியும். மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்பது ஏதோ டாக்டர்களின் லாபத்துக்கானது என்று கருதாமல், சமூக அர்ப்பணிப்புடன் அரசும், மருத்துவர்களும், இணைந்து செயல்படுவதன் மூலம் உலகின் மருத்துவத் தரம் குறைந்த நாடு என்ற இழிவை விரைந்து சீர்படுத்தும் நல்லரசாக உயர்த்த முடியும்.

(நலம் அறிவோம்)

எது நல்ல செக்கப்?

பல டாக்டர்கள், மாஸ்டர் ஹெல்த் செக்கப்பை பரிந்துரை செய்வதில்லை. இதற்குக் காரணம், இதில் நிகழும் சில தவறுகள்தான். எல்லா பரிசோதனைகளுமே நூறு சதவிகிதம் துல்லியமானவை அல்ல. சில சமயங்களில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே சில பரிசோதனைகள் தவறான ரிசல்ட்டைக் காட்டும். அதைப் பார்த்து பயந்துவிடத் தேவையில்லை.

நிறைய டெஸ்ட் எடுக்க எடுக்க நிறைய தவறான ரிசல்ட்கள் வந்து நம்மை நிம்மதி இழக்கச் செய்யும். அந்த ரிப்போர்ட்களை வைத்துக்கொண்டு நிறைய ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களைச் சந்தித்து... இன்னும் நிறைய பரிசோதனைகளைச் செய்து... இன்னும் நிறைய பயமும் சந்தேகமும் சுமந்துகொண்டு... அது ஒரு முடிவில்லா சுழற்சி. இதனால்தான், ‘‘கார்ப்பரேட் பரிசோதனைக் கூடங்கள் தங்களுக்கு நோயாளிகள் வராத நேரங்களில், ஆரோக்கியமான மனிதர்களைக் கூப்பிட்டுப் பரிசோதனை செய்து நோயாளிகளாக மாற்றிக்கொள்கின்றன’’ என சில டாக்டர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால், எல்லா சோதனைகளும் மோசமானவை அல்ல. நோய்கள் வரும்முன் காப்பதற்கு பரிசோதனைகள் அவசியம். புத்திசாலித்தனமாக, தேவையான அளவில் அந்தச் சோதனைகளைச் செய்துகொண்டு, அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டால் பிரச்னை இல்லை. உதாரணமாக, கருப்பையை ஸ்கேன் பரிசோதனை செய்தால், நிறைய பேருக்குக் கட்டிகள் இருப்பது தெரியவரும். பெண்களுக்கு இது சர்வசாதாரணமாக இருக்கும் பிரச்னை. இந்தக் கட்டிகளுடனேயே 90 வயதைத் தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்து முடிக்கும் பெண்கள் பலர் உண்டு. 

வெறுமனே ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து, இந்தக் கட்டி பெரிதாகும் என்றோ, வெடிக்கும் என்றோ, புற்றுநோய்க் கட்டியாக மாறும் அபாயம் இருக்கிறது என்றோ சொல்லி அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பது சரியல்ல; இந்த இடத்தில்தான் ஒரு அனுபவசாலி டாக்டர் தேவைப்படுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism