கோலின்... சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்ட நீரில் கரையும் வைட்டமின்களில் (Water Soluble Vitamin) மிக முக்கியமான உயிர்ச்சத்து. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்லீரல் செயல்பாடு, மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் உயிர்ச்சத்தான இது, செரிமானம் சரியாக நடைபெற உதவக்கூடியது. வைட்டமின் பி குடும்பத்துடன் தொடர்புள்ள, ஒரே தன்மையுள்ள வைட்டமின் இது.

உடலுக்குச் சக்தியைக் கொடுப்பதுடன் டிஎன்ஏ (DNA) உற்பத்தியிலும், நரம்புகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் பணியிலும், ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்குவதிலும் (Detoxification) முக்கியப் பங்கு வகிக்கிறது. மிக முக்கியமாக நமது உணவில் தேவையான அளவு கோலின் சத்து கிடைத்துவிட்டால், மூப்படைவதைத் தாமதப்படுத்திவிட முடியும். நினைவாற்றலை மேம்படுத்துவதோடு இனப்பெருக்கம் மற்றும் எண்டோக்ரைன் (Endocrine) உறுப்புகளின் செயல்பாட்டைச் சீராக்கவும் கோலின் பயன்படுகிறது.
ஒருநாளைக்கு எவ்வளவு தேவை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* உடலில் இந்தச் சத்து சிறிதளவே உற்பத்தி ஆகிறது. ஆனாலும், உணவின் மூலம் எடுத்துக்கொள்வதே சிறந்த பலன்களை அளிக்கும்.
* 0-12 மாதக் குழந்தைகள்: 125 முதல் 150 மி.கி.
* 1-8 வயது: 150-250 மி.கி.
* 8-13 வயது வரை: 250-375 மி.கி.
* பெண்கள் 14 வயது முதல்: 425-550 மி.கி.
*ஆண்கள் 14 வயது முதல்: 550 மி.கி.
* கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்: 550 மி.கி.
எதில் கோலின் உள்ளது?
* முட்டையின் மஞ்சள் கரு.
* கல்லீரல், மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சி வகைகள்.
* தாய்ப்பால்.
* காலிஃப்ளவர் மற்றும் முளைகட்டிய பயறு வகைகள்.
* கோதுமைத்தவிடு, ஈஸ்ட், சோயாபீன்ஸ்.
* வேர்க்கடலை.
* கொழுப்பு நீக்கிய பால்.
கோலின் குறைபாட்டால் வரும் பிரச்னைகள்
* கோலின் குறைவதால் உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டு ஃபேட்டி லிவர் (Fatty liver) என்ற நோய் ஏற்படலாம். நீண்ட நாள் கவனிக்கப்படாத நிலையில் கல்லீரல் சிதைய நேரிடும்.
* மூளை வளர்ச்சிக் குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஏற்படும்.
* நரம்பு மண்டலம், செரிமான மண்டலம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படும்.