மூளை... மனித உடலில் உள்ள இன்றியமையாத ஒரு பகுதி. ஏறத்தாழ 86-100 பில்லியன் நியூரான்களைக் கொண்ட மூளைக்கு மட்டுமே, உடலில் உள்ள அனைத்து நரம்பு மண்டலங்களுக்கும் கட்டளையிடும்

அதிகாரம் உள்ளது. பல் தேய்ப்பது, துணி துவைப்பது, சாப்பிடுவது போன்ற சிறுசிறு விஷயங்களில் தொடங்கி முக்கிய முடிவுகள் எடுப்பது வரை அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செய்கைக்கும்
நம் மூளைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தினந்தோறும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் நாம் செயல்பட மூளை சரியாக இயங்க வேண்டியது அவசியமாகும்.
மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பெருமூளைப் பகுதியானது, வலது மற்றும் இடதுபக்க மூளை என இருவகைப்படும். இந்த இரண்டு பகுதிகளும் கார்பஸ் கலோஸம் (Corpus Callosum) எனப்படும் நரம்புப் பிணையங்களின் மூலம் உடலின் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும். உதாரணமாக, உடலின் வலது பாகங்கள் யாவும் இடதுபக்க மூளையின் மூலம் செயல்படும். இடது பாகங்கள் அனைத்தும் வலதுபக்க மூளையின் மூலம் இயங்கும்.
மூளைக்கு என்ன பயிற்சி?
மூளையைக் குறைவாகப் பயன்படுத்தினால் அது, தனது செயல்திறனைக் குறைத்துக்கொள்ளும். இருபக்க மூளையில், ஒருபகுதியைக் குறைவாகப் பயன் படுத்துவோமேயானால், மற்றொரு பகுதி தனது செயல்திறனைக் குறைத்துக்கொள்ளும். எனவே, இருபக்க மூளையும் சிறப்பாகச் செயல்படச் சில பயிற்சிகள் தேவை.
இடதுபக்க மூளை
இடதுபக்க மூளையானது மொழி, பேச்சு மற்றும் பிரச்னைகளுக்கான முடிவுகளை எடுப்பதோடு பகுத்துணரும் செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்ளும். இடதுபக்க மூளை அதிகம் இயங்கும்போது ஒருவரது பகுத்துணரும் திறன் அதிகரிக்கும். அனைத்துச் செயல்களிலும் கவனமாக ஈடுபடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இடதுபக்க மூளைக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சிகள்
மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்கும் விஷயங் களான கணிதம் படிப்பது, சதுரங்கம் விளையாடுவது, சுடோகு விளையாடுவது, குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றைச் செய்து வரலாம்.
மனதுக்குப் பிடித்த இனிமையான பாடல்களைக் கேட்கலாம். அது மனஅழுத்தம் ஏற்படாமல் காக்கும்.
வாக்கியங்களைச் சரியான இலக்கணத்தோடு கொடுக்கப்பட்ட இடத்துக்குள் உருவாக்க முயல வேண்டும். இப்படிச் செய்வது, யோசிக்கும் திறனை மேம்படுத்துவதோடு படைப்பாற்றலையும் அதிகரிக்கும்.
புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு மொழியையோ விளையாட்டையோ, ஒரு பொழுது போக்கையோ கற்றுக்கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது, கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.
வலதுபக்க மூளை
வலதுபுற மூளையானது உணர்ச்சிகள், நம்பிக்கைகள், கற்பனைகள், படைப்பாற்றல், உள்ளுணர்ச்சிகள் போன்ற வற்றுக்கு உதவக்கூடியது. ஆகவே, இவற்றைத் தூண்டும் சில செயல்களைச் செய்து வருவதன்மூலம் வலப்பக்க மூளை சிறப்பாகச் செயல்படும்.
வலதுபக்க மூளைக்கு வகைவகையான பயிற்சிகள்
அவரவர்க்கு விருப்பமான கலை சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம். உதாரணமாக, இசைக்கருவிகள் வாசிப்பது, ஓவியம் வரைவது எனத் தங்கள் கலையை வளர்த்துக் கொள்ளலாம்.
உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்துச் செயல்களையும் கூர்ந்து கவனியுங்கள். ஞாபக சக்தியை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது வலதுபுற மூளை அதிகமாகச் செயல்படத் துவங்கும்.
மனதுக்குள் உதிக்கும் எண்ணங்களை வைத்து, அன்றாடம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அன்றாட நிகழ்வுகளின் சூழல்களைப் புரிந்துகொள்வது, அதைப் பரிசோதித்துப் பார்த்து உங்களை நீங்களே கேள்விகள் கேட்பது போன்ற செய்கைகள், வலதுபக்க மூளையை வேகமாகச் செயல்படுத்தும். மனஇறுக்கத்தையும் குறைக்கும்.
அதிகமான படைப்பாற்றலோடு ஒவ்வொரு செய்கையை யும் செய்து வாருங்கள். காகிதங்களில் விதவிதமான வடிவங்கள் செய்வது, பாட்டில்களில் செடி வளர்ப்பது, ஐஸ்க்ரீம் குச்சிகளில் ஃபோட்டோஃப்ரேம்கள் செய்வது எனச் சிறுவயதில் செய்துவந்த படைப்புச் செயல்பாடுகளைக் கூச்சமின்றிச் செய்யப் பழகுங்கள். மனதுக்குள் இருக்கும் அழுத்தங்கள் நீங்க, இது பேருதவியாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வது, மூளைச் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும். வலதுபக்க மூளை, சீராகச் செயல்பட இது அவசியம்.
- ஜெ.நிவேதா