Published:Updated:

பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!

பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!
பிரீமியம் ஸ்டோரி
பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!

பரிதி வர்மா

பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!

பரிதி வர்மா

Published:Updated:
பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!
பிரீமியம் ஸ்டோரி
பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!

‘‘உடலளவில் குறைபாடு இருந்தாலும், திடமான மனசிருந்தா வாழறதுக்கான வழிகள் ஆயிரம் கிடைக்கும். அதுக்கு ஓர் உதாரணமா நானே இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பரிதி வர்மா. 90 சதவிகிதப் பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. 21 வயது எனெர்ஜி. ஐஐஎம் லக்னோவில் பட்டப்படிப்பை முடித்த இளம் மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்குரியவர். தற்போது ஜெய்ப்பூரில் வங்கிப் பணியில் இருப்பவரை, அலைபேசியில் தொடர்புகொண்டோம்.

‘`என் சொந்த ஊர் ஜெய்ப்பூர். என் அப்பா அம்மா மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள். பிறந்ததிலிருந்தே எனக்கு Macular Degeneration என்கிற பார்வைக் குறைபாடு இருந்துச்சு. வளர வளர,
90 சதவிகிதம் பார்வையை இழந்துட்டேன். என் அப்பாஅம்மா  சென்னை, ஹைதராபாத்னு நிறைய ஊர்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா, டாக்டர்ஸ் இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ‘ஆனாலும், என்னால சாதிக்க முடியும், யாரோட உதவியும் இல்லாம வாழ நான் பழகிக்குவேன், அந்தளவுக்கு என்னை வளர்த்துக்குவேன்’னு என் பெற்றோர்கிட்ட நான் சொன்னபோது, என்னை அவங்க நம்பினாங்க. நிறைய தன்னம்பிக்கையை எனக்குள்ள விதைச்சாங்க’’ என்று சொல்லும்  பரிதி வர்மா, தன்னுடைய 13 வயதிலிருந்து இன்றுவரை புத்தகங்களைப் பிறர் வாசிக்கச் சொல்லிப் படித்துவருகிறார். பள்ளி, கல்லூரித் தேர்வுகளையும் இவர் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதிக்கொடுக்கும் ‘ஸ்க்ரைப்’ முறைப்படியே முடித்திருக்கிறார்.

பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!

‘‘புத்தகங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதுக்கு எனக்கு ஒருத்தர் உதவ வேண்டிய கட்டாயம். பெற்றோர், நண்பர்கள்னு பலரும் ஆர்வமா முன்வந்து தங்களோட குரலைக் கொடுத்தாங்க. இப்படி என் குறையை வெல்ல நானும் என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் வழிகளைத் தேடித் தேடித்  தீர்வை அடைஞ்சோம். என்னோட இரண்டு கண்கள் அம்மாவும் அப்பாவும்தாம். என் முன்னேற்றத்தில் உரமா நிக்கிறது அப்பான்னா, என் உலகத்தில் அன்புக்குத் துளியும் குறை வராம பார்த்துக்கிறவங்க அம்மா. ஓர் இளம்பெண்ணுக்கான குதூகல உலகத்தை என்னையும் அனுபவிக்க வைக்கிறாங்க என் தோழிகள். இப்படி என்னைச் சுற்றி இவ்வளவு பாசிடிவ் வைப்ரேஷன் இருக்கும்போது,

அதைப் பயன்படுத்தி என்னை நான் முன்னேற்றிக்கணும்தானே?!

ஜெய்ப்பூர்ல உள்ள இன்டர்நேஷனல் காலேஜ் ஆஃப் கேர்ள்ஸ்ல பி.பி.ஏ முடிச்சிட்டு, CAT எக்ஸாம் எழுதி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்(IIM) லக்னோவில் எம்.பி.ஏ மார்க்கெட்டிங் அண்ட் ஹெச்ஆர் படிச்சேன். எம்.பி.ஏ படிக்கும்போதே மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் வீடியோ புரொடக்‌ஷன்ல டிப்ளோமா முடிச்சேன். CAT எக்ஸாம் எழுத நான் கோச்சிங் போன ‘கிங்ஸ் இன்ஸ்டிடியூட்’ நண்பர்கள் எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தாங்க. எனக்கு ஐஐஎம்ல சீட் கிடைக்கவும் ‘ஐஐஎம்மில் பட்டப்படிப்பை முடித்த இளம் மாற்றுத்திறனாளி’ என்ற பெருமை கிடைக்கவும் அவங்க எல்லோரும் முக்கியக் காரணம். ‘இந்தப் பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா?’னு என் பின்னாடி நின்னு கேலி செஞ்சவங்களைவிட, என் திறமையை உணர்ந்து, பாராட்டி, என்னால முடியும்னு நிரூபிக்க உதவின குரல்களும் மனங்களும்தான் என் இறுதிவரை என் நெஞ்சோட வரப்போகுது’’ என்றவர், தன் கற்றல் முறை, தினசரி வாழ்க்கை பற்றிப் பகிர்ந்தார்.

‘‘வகுப்பறையில் ஆசிரியர் நடத்துறதைக் காதுகளால் கூர்ந்து கவனிப்பேன். பார்வைக் குறைபாடு உள்ளவங்க படிக்க உதவுற NVDA என்கிற சாஃப்ட்வேர் மூலம் அனைத்துப் பாடங்களையும் கற்றேன். தகவல் தொழில்நுட்பத் துறை மாற்றுத்திறனாளிகளுக்கான தீர்வை யோசிச்சிட்டே இருக்கிறது சந்தோஷமா இருக்கு’’ என்று சொல்லும் பரிதி வர்மாவுக்கு, அவரது ஆப்பிள் ஃபோனின் வாய்ஸ் ஓவர் சாஃப்ட்வேர், ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் குறித்துத் தகவல் சொல்கிறது.

‘`என் ஆடைகளைத் தேர்வு செய்றது என் அம்மாதான். பார்வை பறிபோன ஆரம்பத்தில் அம்மாதான் எனக்கு டிரெஸ் போட்டுவிடுவாங்க. பிறகு, நானே கைகளால் தடவி உள்பக்கம் வெளிப்பக்கம் தெரிஞ்சு, டிரெஸ் போட்டுக்க ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கு அதிக நேரம் ஆகும். குறிப்பா, பரீட்சை நேரத்துல அதுவே பிரச்னையா இருக்கும்.

அம்மா அப்பா கைக்குள்ளயே வளர்ந்துட்டு, ஐஐஎம் லக்னோவில் சீட் கிடைச்சபோது  முதன்முதலா வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டல் வாழ்க்கையில பயணிக்க ஆரம்பிச்சேன். எனக்காக என் அப்பா லக்னோவில் வீடு பார்த்துக் குடியேறிடலாம்னு சொன்னாங்க. ஆனா, ‘நான் தனிச்சு இயங்கப் பழகணும்ப்பா’னு சொல்லி மறுத்துட்டேன். ஹாஸ்டல்ல நான் கத்துக்கிட்டது நிறைய. ஷாப்பிங் போறது, இசை, இயற்கையை ரசிக்கிறதுனு முழுக்க முழுக்க நண்பர்கள் சூழ் உலகு அது. என்னால யார் துணையும் இல்லாம இருக்க முடியும்னு என்னை நானே நம்பின தருணம் அது” எனும்போது நீர் பூக்கிறது அவர் கண்களில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!

’`மாதவிடாய் நாள்கள்தான் என் வாழ்வின் வலி மிகுந்த நாள்கள். ஒரு நாள் க்ளாஸ்ரூம்ல இருந்தப்போ திடீர்னு பீரியட்ஸ் வந்திடுச்சு. என்ன பண்ணுறதுனு தெரியாம அழ ஆரம்பிச்சிட்டேன். தோழிகள்தான் என்னை ரெஸ்ட்ரூமுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் அந்தச் சம்பவத்துலேருந்து என்னால மீள முடியல. அதன்பிறகு, தினமும் டிரெஸ் மாத்துற மாதிரி நாப்கினையும் பயன்படுத்துறேன்’’ என்கிறவர், தடைகளைத் தாண்டிச் சாதித்தவற்றையும் பகிர்ந்துகொள்கிறார்.

‘`எனக்கு மாடலிங் பண்றது பிடிக்கும். என் தோழி ஒருத்தி ஃபேஷன் டிசைனர். அவளோட தூண்டுதலால் கேட் வாக்கும் பண்ணியிருக்கேன். பள்ளி நாள்களில் கால்பந்து என்னோட பொழுதுபோக்கா இருந்துச்சு. நண்பர்கள் குரலை ஃபாலோ செஞ்சே பந்தை அடிச்சிருவேன். அந்தப் பந்தைப்போலத்தான் பல விஷயங்களும். கவனம் இருந்தால் போதும், தடைகளை வென்றிடலாம்.

என் வாழ்க்கையில இரண்டு விஷயங்களை பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன். ஒன்று, ஜெய்ப்பூர் முதல்வர் வழங்கின ‘Woman of the Future’ விருது. மற்றொன்று, ஒரு சேவை அமைப்பு வழங்கிய ‘Kailash Satyarthi Award’. 2015-ல் இந்த விருதுகளை வாங்கினபோது நான் இளங்கலைதான் முடிச்சிருந்தேன். அந்த விருதுகள்தான் நான் இன்னும் அதிகமா சாதிக்கணும்னு உத்வேகம் கொடுத்தன. 20 வயசுல இந்த உலகத்தையே நான் எட்டிப் பிடிச்சிட்ட மாதிரி உணர்ந்தேன்’’ என்பவர், தன் தற்போதைய பணிச்சூழல் பற்றிப் பேசினார்.

‘`இப்போ ஜெய்ப்பூர், ஜனலட்சுமி பேங்க்ல கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸிக்யூட்டிவாக வேலை பார்க்கிறேன். பெரிய பதவி, பொறுப்புக்கு முன்னேறணும் என்பதுதான் என்னோட லட்சியம். சக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வாழ்த்து, சில வார்த்தைகள் சொல்லணும். நம்மளால எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு நம்ம திறமையை வெளிப்படுத்தணும்; பயன்படுத்தணும். வாய்ப்புகள் விரைவில் கிடைக்க வாழ்த்துகள்!”

- வெ.வித்யா காயத்ரி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism