Published:Updated:

மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்
மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்

மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்

பிரீமியம் ஸ்டோரி

“எத்தனையோ குழந்தைகளைப்போல நானும் இறந்துபோயிருப்பேன்; அல்லது, சவம்போல படுத்த படுக்கையாக இருக்கும் சூழல் எனக்கு  ஏற்பட்டிருக்கும். மருத்துவர்கள் சொல்லிக்கொடுத்த பயிற்சி மட்டுமின்றி, என் அம்மா என்னை மனரீதியாகத் தயார்படுத்தியதால் இப்போ  உங்கள் முன்னால் பேசிக்கிட்டிருக்கேன்” என்று உணர்ச்சிவசப்படுகிறார், பிரபல இசைக்கலைஞர் `கடம்’ சுரேஷ் வைத்தியநாதன்.

வருடத்தின் பெரும்பாலான நாள்களில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களிலேயே இருக்கும் இசைக்கலைஞர்களில் சுரேஷ் வைத்தியநாதனும் ஒருவர். வெற்றிகரமான கலைஞராக இருக்கும் இவர் ஒரு மாற்றுத்திறனாளி!  கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வென்ற கதையைச் சொல்லத் தொடங்கும் அவர் கண்களில் விரிகின்றன வாழ்வின் ரேகைகள்.

“ என்னோட பூர்வீகம் லால்குடி பக்கம் உள்ள ஆங்கரை கிராமம். என்னோட தாத்தா முறைப்படி கர்னாடக இசை கத்துக்கிட்டாலும்  ஜவுளித்தொழில்லதான் கவனம் செலுத்தினார். ஆனால் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என எல்லோரையும் சங்கீதப் பயிற்சிக்கு அனுப்பினார். எங்க குடும்பத்தில் அனைவரும் சங்கீதம் படித்தவர்கள்தான். 

மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்

திருவல்லிக்கேணியில்தான் நான் வளர்ந்தேன். கால் பிரச்னையாகிவிட்டதால் மற்ற பிள்ளைகளைப்போல் என்னால் ஓடி ஆடி விளையாடமுடியாது. மற்ற பையன்களும் என்னைச் சேர்த்துக்கொள்ளத் தயங்குவார்கள்.  அவர்களின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுத்து விளையாடமுடியாது என்பதே காரணம். வீட்டின் அருகே நின்றுகொண்டே விளையாடும் விளையாட்டுகளை அண்ணன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். ஆனாலும், ஒரு தனிமை என்னைச் சுற்றி இருக்கத்தான் செய்தது. அதை, என்னிடம் இயற்கையாக இருந்த இசை ஆர்வத்தை வைத்துத் தீர்த்துக்கொண்டேன்.

கையில் கிடைக்கும் பொருள்களை வைத்து இசைப்பது, சமயங்களில் மரத்தூண்களைத் தட்டி இசைப்பது என்றிருந்தேன். இதைக் கவனித்த என் தாத்தா, புகழ்பெற்ற  கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் அவர்களின் தந்தை திரு.ஹரிஹரசர்மாவின் இசை வகுப்பில் சேர்த்துவிட்டார். விளையாட வாய்ப்பில்லாத, முடியாத பையனாக இருந்ததால், என் ஆர்வத்தையெல்லாம் இசை கற்பதில் செலவிட்டேன். 

4 மணிக்குப் பள்ளி விட்டவுடன் இசை வகுப்புக்குப் போய்விடுவேன். அது என் இரண்டாவது குருநாதர் விக்கு விநாயக்ராம், `கடம்’ என்ற வாத்தியத்தையை உலகப்புகழ் பெறச் செய்த நேரம்.  அவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போய்விட்டு வரும்போதெல்லாம், அங்கு வாசித்த டேப் ஒலிப்பதிவைக் கொண்டுவருவார். அவற்றைக் கேட்டுக்கேட்டு கடம் வாசிக்கும் ஆர்வம் வந்து வாசிக்கத் தொடங்கினேன். அதைப் பார்த்த விநாயக்ராம், தன் தந்தையிடம்  ‘இவனுக்குக் கடம் நல்லா வருதே... நான் சொல்லிக் கொடுக்கட்டுமா?’ என்று கேட்டார். அவரும் சம்மதிக்கவே, என்னைப் பார்த்து ‘நாளைக் காலை 6 மணிக்கெல்லாம் வந்துடு’ என்றார். என் தாத்தாவுக்குப் பெரிய சந்தோஷம்.

விடியலிலேயே என்னை எழுப்பிக் குளிக்கவெச்சு, சரியான நேரத்துக்கு அனுப்பிவைத்தார். நம் திறமையைக் கண்டுபிடிப்பவர்தான் குரு. அப்படி எனக்கு நன்றாகக் கடம் வாசிக்க வரும் எனக் கண்டுபிடித்தவர் விநாயக்ராம் அவர்கள்தான். மற்ற வாத்தியங்களைப்போல் அல்ல கடம். இதற்குப் பத்து விரல்களும் உழைக்க வேண்டும். பாடம் என்றால் சாதாரண பாடம் அல்ல. கடத்தின் ஒவ்வொரு நுட்பத்தையும் கற்றுக்கொடுத்தார்.  இப்படி ஆரம்பித்த ‘கடம்’ வாசிப்பு, கடவுள் அருளால் இன்றுவரை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்று, தான் இசைக்க வந்த தொடக்க நாள்கள் பற்றிக் கூறியவரிடம், அவர் போலியோவால் பாதிக்கப்பட்டு மீண்ட கதையைக் கேட்டேன்.

“அப்போதெல்லாம் தடுப்பூசி போடும் முறை இருந்தது. ஒவ்வொருவரும் மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும். எனக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட காலகட்டத்தில் மூன்றாவது முறை ஊசி போடுவதற்குத் தாமதமாகிவிட்டது. அப்போதுதான் அந்தக் கொடூர போலியோ காய்ச்சல் வந்தது. என் சகோதரர்களுடன் ஓடி ஆடித் திரிந்துகொண்டிருந்த நான், படுத்த படுக்கையாகிவிட்டேன். என் கால் பாதிக்கப்பட்டது.
`அந்த வைரஸ் தாக்கினால் உடல் முழுவதும் கடுமையான வலி ஏற்பட்டு நகரக்கூட முடியாமல் படுத்துவிடுவோம். ரத்த ஓட்டம் பாய்வதைத் தடுத்து  கை, கால்களைச் சூம்பிப்போகச் செய்துவிடும். முடிந்தவரை ரத்த ஓட்டம் பாயச்செய்தால் மட்டுமே ஓரளவுக்குக் கைகால்கள் இயங்கும் அளவுக்குக் கொண்டுவர முடியும்’ என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

என் அம்மா பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தாலும், மருத்துவர்கள் சொன்னதைப் புரிந்துகொண்டு நான் படுத்த படுக்கையில் இருக்கும்போதும் பேசிக்கொண்டே இருந்தார். பல நாள் தூங்காமல், எனக்குக் கவுன்சலிங் கொடுப்பதைப்போல என்னை மோட்டிவேட் செய்துகொண்டே இருந்தார். என்னை அப்படியே விட்டுவிடக்கூடாது என்கிற உத்வேகம் என் அம்மாவுக்கு இருந்ததால் மட்டுமே இந்தளவுக்கு நான் வந்துள்ளேன். அரை மயக்கம், கால் மயக்கமாய்ப் படுத்திருக்கும் நிலையிலும் என்னைத் தானாகவே எழச்செய்து, நடக்கவைத்து, நடக்க முடியாமல் விழுந்தால்கூட விடாமல் மீண்டும் மீண்டும் அவர் என்னை வழிநடத்தியதால் மட்டுமே எனக்குக் கைகள் இயங்கத் தொடங்கின. கால்களும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு பெற்றன. இருந்தாலும் ஒரு கால் அந்தப் போலியோவினால் பாதிக்கப்பட்டது. ‘அம்மா, என் ஒரு காலைத் தாங்கித்தான் நடக்கவேண்டியிருக்குமா?’ என்று நான் கவலையுடன் கேட்டேன். அதற்கு அம்மா என்னைவிட மோசமான நிலையில் போலியோவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் பிள்ளைகளைக் காட்டி, ‘அவர்களைவிட நீ நல்ல நிலையில்தான் இருக்கிறாய்’ என்று தைரியம் சொல்வார்.

அதன் பிறகு, பாதிக்கப்பட்ட காலை அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறை அறிமுகமானது. அப்பா ரயில்வேயில் வேலைபார்த்ததால், அந்த அறுவைசிகிச்சை ரயில்வே மருத்துவமனையில் நடந்தது.  மாவுக்கட்டுப் போட்டு அனுப்பிவிட்டார்கள். 45 நாள்களுக்குமேல் போட்டிருக்கும் கட்டு அது. ஒவ்வொரு வாரமும் என்னைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸில் போய்க் கட்டு மாற்றிவருவார்கள். கட்டு பிரித்த பிறகும் பிசியோதெரபி செய்வதற்கு என்னை என் அம்மா தூக்கிக்கொண்டு அலைந்தது என் நினைவுகளில் இன்றும் அப்படியே இருக்கிறது. கண் துஞ்சாமல் என்னைத் தன்முனைப்போடு செயல்படவைத்ததன் விளைவு, இன்று என் குறைபாட்டின் சதவிகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்

உடன் படிக்கும் மாணவர்கள் என் நிலையைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யும்போது மனம் வருந்தி அம்மாவிடம் வந்து கண்கலங்கி நிற்பேன். ஒரு நிமிடம் என் முகம் பார்த்து ‘உன் வேலையில் நீ கவனமாக இருந்தால், இன்று உன்னைக் கேலி செய்பவன் நாளை உன்னை வணங்குவான்’ என்று சொல்வார். அந்த வயதில் அது அம்மா சொல்லும் சமாதானமாகத் தெரிந்தாலும், வயது ஆக ஆகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அது விதைத்தது.

இசைத் துறையில் ‘அவரை புக் செய்தால் துணைக்கு ஒரு ஆளையும் புக் செய்யணும். ரெட்டைச் செலவு’ என்று என் காதுபடவே சிலர்  பேசியுள்ளனர். ஆனால், போலியோவினால் பாதிக்கப்பட்டாலும் சரியான நேரத்தில் என் தாய் என்னை மீட்டு, உடல்ரீதியிலும் மனரீதியிலும் என்னைக் குணப்படுத்தியதால் இன்று உலகம் முழுவதும்   தனியாகவே பயணம் செய்துவருகிறேன். இல்லையென்றால், திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பேன்.

அதற்கு அடுத்தபடியாக நான் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது, என் மனைவியைத்தான். எனக்கு எல்.ஐ.சி-யில் வேலை கிடைத்தது. என்னுடன் என் மனைவியும் வேலைபார்த்து வந்தார். நல்லபடியாகப் பழகிவந்த நிலையில் அவர்தான் `நாம் திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றார். எனக்கும் அவர்மீது அன்பு இருந்தது. இருந்தாலும் `நான்  குறைபாடு உள்ளவனாயிற்றே, அவர் ஏற்றுக்கொள்வாரா!’ என்ற தயக்கம் இருந்தது. ஆனால், இன்னும் ஒரு படி மேலாக அவர் என் தந்தையிடமே ‘நானும் சுரேஷும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்’ என்று சொன்னார். நானாவது என் குறையை எப்போதாவது நினைத்துக்கொள்வேன். ஆனால், என் மனைவி ஒருநாள்கூட  அதை நினைத்ததில்லை. என் இசைப் பயணத்துக்கு என் வேலை இடையூறாக இருக்கும் எனச் சொல்லி, அதை விட்டுவிலகச் சொன்னார். இப்போது முழுநேர இசைக்கலைஞனாக உள்ளேன். இதோ,  என் பெண்ணும் வழக்குரைஞர் ஆகிவிட்டார். இன்று வீட்டிலிருந்தபடியே அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கிறேன். அதை நெறிப்படுத்திக் கொடுத்தது என் மகள்தான். இந்த மூன்று பெண்களாலும் இன்னும் அதிகம் எல்லைகளைத் தொட ஓடிக்கொண்டிருக்கிறேன்” - வெற்றிப் புன்னகை பூக்கிறார் கடம் சுரேஷ்.

- வரவனை செந்தில்

படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு