Published:Updated:

சிறப்புத் தேவைகளுக்குச் சிறப்பான சேவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறப்புத் தேவைகளுக்குச் சிறப்பான சேவை!
சிறப்புத் தேவைகளுக்குச் சிறப்பான சேவை!

சிறப்புத் தேவைகளுக்குச் சிறப்பான சேவை!

பிரீமியம் ஸ்டோரி

வீட்டில் நான்கு சுவர்களையே வெறித்துப் பார்த்தபடி வீல் சேரில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவை, நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து வைக்க நினைப்பீர்கள். ஆனால், எந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வீல் சேரை எடுத்துச் செல்லலாம் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட  குழந்தையை எங்கு அழைத்துச் சென்று  முறையான பயிற்சி அளிப்பது?  இதுபோல, நமக்குத் தேவையான தகவல்களைப் பகிரும் வகையில் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மி  மற்றும் அத்வித்யா உருவாக்கியதுதான் www.specialsources.com என்கிற இணையதளம்.

சிறப்புத் தேவைகளுக்குச் சிறப்பான சேவை!

இந்த இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்ற  எண்ணம் ரேஷ்மியின் மனதில் எப்படி உருவானது?

``Special Needs என்று கூறப்படும் சிறப்புத்  தேவைகளைக் கொண்டவர்களுக்குப்  பயிற்சியளிக்கும் Special Education துறையில் நான் டிப்ளோமா பெற்றுள்ளேன். என்னைப் போன்று இத்துறை சார்ந்தவர்கள் பலர் இருந்தாலும், இந்தத் தகவல், தேவைப்படுகிறவர்களைச் சென்று  சேர்வதில்லை. இந்தியாவில் சிறப்புத் தேவைகளைப் பற்றிப் பேசுவதற்கு  ஒருவிதத் தயக்கம் இருப்பதும் இதற்குக் காரணம். (பேசத் தொடங்கிப் பதினைந்து நிமிடங்கள் ஆன பிறகும் முதியவர்கள், ஊனமுற்றோர், மனநலம் குன்றியோர் போன்ற வார்த்தைகளை ரேஷ்மி பயன்படுத்தவில்லை. சிறப்புத் தேவை கொண்டவர்கள் என்றே கூறுகிறார்). ‘‘உதாரணத்துக்கு... தாம்பரத்தில்  வசிக்கும் ஒருவரின் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவரது  அலுவலகம் திருவான்மியூரில்  இருக்கலாம். அவருக்குத் தெரிந்த ஆட்டிசம் அசெஸ்மென்ட் சென்டர் அண்ணாநகரில் இருக்கிறது. அவர் எப்படித்  தினமும் அண்ணா நகர் சென்று  குழந்தையை விட்டுவிட்டு,  திருவான்மியூர் சென்று அலுவலக வேலைகளைப் பார்ப்பார்? அவர் அலுவலகம் செல்லும் வழியிலேயே  ஆட்டிசம் அசெஸ்மென்ட் சென்டர் இருக்கிறது என்பது அவருக்கு  எப்படித் தெரியவரும்? இப்படிப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடத்தான் `ஸ்பெஷல் சோர்ஸஸ்’ உதவும். சரியான இடங்களுக்குச் சென்று தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவ நினைத்துதான் இந்த இணையதளத்தை உருவாக்கினோம்.’’

ஸ்பெஷல் எஜுகேஷன் பயில வேண்டும் என்று தோன்றிய தருணம் எது?

``ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நான் இளங்கலை பயின்றுகொண்டிருந்தபோது ஸ்பெஷல் நீட்ஸ் கொண்ட மாணவர்கள் பயிலும் கல்லூரியில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு குழந்தைக்கு நான் பாடியது பிடிக்கவில்லை. உடனே எழுந்து, `எனக்கு பிடிக்கல, போ’ என்றது. அப்போதுதான், `இவர்கள் மனநலம் குன்றியவர்கள் அல்ல... மனதிலிருப்பதை ஒளிவுமறைவின்றிப் பேசுபவர்கள்’ என்று உணர்ந்தேன். இவர்களின் தேவை கொஞ்சம் சிறப்பானவை, அவ்வளவுதான். இவர்களின் உணர்வுகளை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அது எனக்குப் பேரானந்தத்தை அளித்தது.  அதனால், இளங்கலை முடித்தவுடன் ஸ்பெஷல் எஜுகேஷன் டிப்ளோமா படித்தேன். அந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களே என்னை முதுகலை ஸ்பெஷல் எஜுகேஷன் படிக்கத் தூண்டின...’’

ஸ்பெஷல் சோர்சஸ் இணையதளம் கடந்து வந்த பாதை பற்றி?

``இந்தத் துறையில் ஏதாவது செய்ய  நினைத்த வுடன் என் கணவரிடம் பேசினேன்.  அவர் நடத்தும் மென்பொருள் நிறுவனம் மூலம் எனக்கு இணையதளம் உருவாக்க உதவினார். என் பள்ளித்தோழி அத்வித்யாவைச் சந்தித்தபோது என் யோசனையை அவரிடம் கூறினேன். அவரும் என்னுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் தெரிவித்தார். தன் வேலையை விட்டு என்னுடன் சேர்ந்து இந்தச் சேவையில் இறங்கினார். இன்னும் சில நண்பர்களைத் தொடர்புகொண்டு சிறப்புத் தேவை உடையவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகள், கல்லூரிகள், வீல் சேர் வசதி கொண்ட ஹோட்டல்கள், பூங்காக்கள், மனநல மருத்துவர்கள், சிறப்புத் தேவைகள் கொண்ட மற்ற குழந்தைகளின் பெற்றோர் என 150 தொடர்புகளை  இணையதளத்தில் இணைத்துள்ளோம். இந்தத் தளத்தில் மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சீனியர் சிட்டிசன்கள் என மூன்று பிரிவினருக்கும் உதவிகள் கிடைக்கும்.’’

அடுத்து என்ன?

``சென்னை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இந்தச் சேவையைத் தொடர வேண்டும். எப்போதும் இலவசச் சேவையாகவே செய்ய வேண்டும். இந்த இணையதளம் மூலம் வேலைவாய்ப்புத் திட்டங்களையும் அளிக்க வேண்டும். இவற்றோடு, சிறப்புத் தேவை கொண்டவர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி, அந்த உள்ளங்களில் மகிழ்ச்சியை மலரச் செய்ய வேண்டும்.’’

 - ம. சக்கர ராஜன்

படம்: அருணசுபா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு