Published:Updated:

வீட்டிலேயே பிரசவம் vs மருத்துவமனையில் பிரசவம்... எது பாதுகாப்பு... சட்டம் சொல்வது என்ன?

ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டது ஏன்- சுகாதாரத்துறைச் செயலாளர் விளக்கம்!

வீட்டிலேயே பிரசவம் vs மருத்துவமனையில் பிரசவம்... எது பாதுகாப்பு... சட்டம் சொல்வது என்ன?
வீட்டிலேயே பிரசவம் vs மருத்துவமனையில் பிரசவம்... எது பாதுகாப்பு... சட்டம் சொல்வது என்ன?

``மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை எதுவுமில்லாமல், மருத்துவமனைக்கே செல்லாமல், 'வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்துகொள்வது எப்படி' என்று இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும்"  -  இந்த வாசகம் அடங்கிய விளம்பரத்துக்காகத்தான் ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். சில நாள்களுக்கு திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முனைந்து கிருத்திகா என்ற ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அந்தச் சம்பவம் தொடர்பாக கிருத்திகாவின் கணவர் மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சமீப காலமாக, மரபுவழி வாழ்வியல் முறைகள் குறித்த விவாதங்கள் அதிகமாகியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளும் உருவாகியுள்ளன. உணவு தொடங்கி, கலை, கல்வி, வாழ்க்கைமுறை, மருத்துவம் என அனைத்திலும் நவீனத்தை மறுத்து,  நம் முன்னோர் பயன்படுத்திய மரபுவழிகளைப் பின்பற்றும் வாழ்க்கை முறையை இந்த அமைப்புகள் பயிற்றுவித்து வருகின்றன.  
பாஸ்கர் உள்ளிட்ட ஹீலர்களும், பக்க விளைவுகள் அதிகமுள்ள நவீன மருத்துவ முறைக்கு எதிராகவும் மரபுவழி வாழ்க்கைமுறைக்கு ஆதரவாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  இவர்களை ஏராளமான இளைஞர்கள் பின்பற்றியும் வருகிறார்கள். இந்தச்சூழலில் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.  


    அலோபதி மருத்துவர்கள் இது தொடர்பாக வலுவான விவாதங்களை முன்வைக்கிறார்கள்.  
``மருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பிரசவம் என்பது சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போது  ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்று சிகிச்சை முறைகளைக் கையாண்டு சரிசெய்யமுடியும். வீட்டில், அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, பிரசவம் முடிந்த பின்  ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்களில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவமனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம்.  அப்படியும் நிற்காவிட்டால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு கட்டுப்படாவிட்டால் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வோம். ஒருபுறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை. 
ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்புகூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்துகளோ, கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப்பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.  மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர், ஆம்புபேக் உதவியுடன் சரிசெய்துவிடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை .  

ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான் . ஆனால், தற்போது பலவேறுவிதமான  பிரச்னைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன.  தாயையும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி`` என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மனுலஷ்மி.
 

அரசும் இதைத்தான் வலியுறுத்துகிறது. ``பிரசவம் என்பது மரணத்தின் வாசலுக்குச் சென்று திரும்பும் நிகழ்வு. மருத்துவமனைதான் பிரசவத்துக்கு ஏற்ற இடம். வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறோம் என்ற பெயரில் பெண்களை மரண அபாயத்தில் தள்ளுவது சட்டப்படி தவறு" என்கிறார் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.
மேலும் ``நார்மல், சிசேரியன் என எந்த முறையில் வேண்டுமானாலும் பிரசவம் பார்க்கலாம். ஆனால் மருத்துவமனைகளில்தான் பார்க்க வேண்டும். அதேபோல, பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். தாய்மார்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருக்கிறதா என்பதைப்  பரிசோதனை செய்துதான் கண்டறிய முடியும். அதனால், கர்ப்ப காலத்தில்

மூன்றுமுறை செக் -அப்புக்கு கண்டிப்பாக  வர வேண்டும். இதுதான் உலக சுகாதார  நிறுவனத்தின் அறிவுரை. இவற்றையெல்லாம் பின்பற்றாமல், `சுகப் பிரசவத்துக்குப் பயிற்சி அளிக்கிறோம்' என்பது மக்களைத் தவறான வழியில் வழிநடத்தும் செயல். முறையாகப் பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம். அதற்காகத்தான் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் . 
வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது என எந்தச் சட்டத்திலும் சொல்லப்படவில்லை எனப் பலர் பேசி வருகிறார்கள். தாய்மார்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது என்பதே சட்டப்படி குற்றம்தான். இதற்காகத் தனிச்சட்டங்கள் எதுவும் தேவையில்லை. இதுமாதிரி செயலில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுப்போம்`` என்கிறார் அவர்! 


 இதற்கு இயற்கை மருத்துவ ஆர்வலர்களின் கருத்து என்னவாக இருக்கிறது? ``மரபு வழி வாழ்க்கைக்கு மாறியுள்ள பலர் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்திருக்கிறார்கள். திருப்பூரில் பின்பற்றப்பட்டது தவறான வழிமுறை. எவ்விதமான பயிற்சியும், விழிப்பு உணர்வும் இல்லாமல் தவறு செய்திருக்கிறார்கள். அதற்காக, ஒட்டுமொத்தமாக மரபுவழி சித்தாந்தத்தையே தவறு என்று சொல்வது அடக்குமுறை. வீட்டிலேயே பிரசவம் நடந்தால் மருத்துவமனைக்கு வருமானம் போய்விடும். அதற்காகத்தான் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்!’’ என்கிறார்கள். 

 `` 'வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது' என்று எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை . `எங்கே பிரசவம் நடந்தாலும் குழந்தை பிறந்த  21 நாள்களுக்குள் உள்ளாட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுதான் நடைமுறை. அரசே இப்படித்தான் விளம்பரம் செய்கிறது. அதேபோல பிறப்புச் சான்றுக்கான படிவத்திலும் குழந்தை பிறந்தது வீட்டிலா, மருத்துவமனையிலா என்பதை குறிப்பிடச் சொல்லியிருப்பார்கள். வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது என்றால் அரசாங்கம் இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக சில தகவல்களைக் கோரியிருந்தோம் . `பிரசவம் மருத்துவமனைகளில் மட்டும்தான் நடைபெற வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா' என்று  கேட்டதற்கு,  'அப்படி எந்தக் கட்டயாயமும் இல்லை'யென்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர்  பதில்  அனுப்பியிருந்தார். இதன்மூலம் `வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது' என எந்தவிதிமுறைகளும் இல்லை என்பது தெளிவாகிறது.

திருப்பூரில் நடந்தது துரதிஷ்டவசமான சம்பவம். யார் வேண்டுமானாலும் பிரசவம் பார்க்கலாம் என்பதும் தவறுதான். அரசு, வீட்டில்

நடக்கும்  பிரசவங்களை முறைப்படுத்த வேண்டுமே தவிர முடக்க நினைக்கக் கூடாது. தமிழகத்தில், அலோபதி மருத்துவம் பார்க்காத, சித்தா, ஹோமியோபதி போன்ற ஆயுஷ் மருத்துவத்தைப் பின்பற்றுகிற மக்கள் பத்து லட்சத்துக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களை, `பிரசவத்துக்கு அலோபதி மருத்துவமனைகளுக்குத்தான் வர வேண்டும்' என்று கட்டாயப்படுத்துவது எப்படிச் சரியாகும்? பிறகு ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் எதற்காக இருக்கின்றன?
ஹீலர் பாஸ்கர் மேல் இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன்தான் புகார் செய்திருக்கிறது. இதேபோல அலோபதி மருத்துவர்கள் மீது மக்கள் புகார் அளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். அரசு இந்த விஷயத்தில் திறந்த மனதோடும் நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் `` என்கிறார் அக்குபஞ்சர், ஹீலர்கள் கூட்டமைப்பின் செயலாளர்,  ஹீலர் உமர் பாரூக்.

ஒவ்வொருவரின் உடல்நிலையும் ஒவ்வொரு விதம். அதன் ஆரோக்யம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப தகுந்த சிகிச்சை மேற்கொள்வதே விபரீதங்களைத் தடுக்கும்!