Published:Updated:

தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடப்பது ஏன்?- ஓர் அலசல்!

தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மொத்தப் பிரசவங்களில் 51.3 சதவிகிதம்  அறுவை சிகிச்சை மூலமே நடக்கின்றன

தனியார் மருத்துவமனைகளில்  சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடப்பது ஏன்?- ஓர் அலசல்!
தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடப்பது ஏன்?- ஓர் அலசல்!

பிரசவத்தின்போது ஒரு பெண் மரணத்தின் வாசலுக்கே சென்று திரும்புகிறாள். ஒரு குழந்தையின் பிறப்பு என்பது குடும்பத்தைக் குதூகலிக்கச் செய்தாலும், அதற்காக பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

பிரசவம் என்பது வாழ்க்கைமுறையோடு தொடர்புடையது. கருவுற்ற நாளில் இருந்து பிரசவத்துக்கு பெண்களைத் தயார்படுத்த பல்வேறு வழிமுறைகளை நம்  முன்னோர் கடைப்பிடித்து வந்தார்கள். அதனால்தான், அந்தக் காலங்களில் சுகப்பிரசவம், சுய பிரசவமெல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்தது. இன்று, நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளெல்லாம் வெகுவாக மாறிவிட்டன. நவீன தொழில்நுட்பச் சாதனங்களின் வருகையால் உழைப்பும் சுருங்கிவிட்டது. இந்தச் சூழலில் சுகப்பிரசவம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. 

இன்று தம்பதிகளின் மனநிலையும்கூட மாறிவிட்டது. சுகப்பிரசவத்துக்குக் காத்திருக்காமல், பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். தவிர, நல்லநாள், நட்சத்திரம் பார்த்து, தக்க நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யச் சொல்வோரும் இருக்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் சிசேரியன் பிரசவங்கள்தான் அதிகம் நடக்கின்றன. 'மொத்தப் பிரசவத்தில் 15 சதவிகிதம் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் நடக்கலாம்' என்று பரிந்துரைக்கிறது உலக சுகாதார நிறுவனம். 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் தேசியக் குடும்பநல ஆய்வறிக்கையின்படி  (National Family Health Survey) இந்தியாவில்  நடைபெற்ற மொத்த பிரசவங்களில் 17.2 சதவிகிதம் அறுவை சிகிச்சை மூலம் நடக்கின்றன. தமிழகத்தின் புள்ளி விவரங்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. இங்கு  நடக்கும் மொத்த பிரசவங்களில் 34.1 சதவிகிதம், அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் என்கிறது இந்த ஆய்வறிக்கை. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக இங்கே சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன.  

அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை மொத்தப் பிரசவங்களில் 26.3 சதவிகிதம் அறுவை சிகிச்சை மூலம் நடக்கின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மொத்தப் பிரசவங்களில் 51.3 சதவிகிதம்  அறுவை சிகிச்சை மூலமே நடக்கின்றன. 

தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ஏன் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாகின்றன?

 "பிரசவத்தை யாரும் திட்டமிட்டுச் சிக்கலாக்குவதில்லை. தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என்ற பாகுபாடெல்லாம்

மருத்துவர்களுக்கு இருப்பதில்லை. சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. பிரசவத்தின்போது, வலி ஏற்படும்; ஆனால் குழந்தையின் தலை கீழே இறங்காது. இதற்குப் பெண்ணின் இடுப்புப் பகுதியிலோ குழந்தை வெளிவரும் பாதையின் அளவிலோ குறைபாடு இருக்கலாம். இதை, 'அப்ஸ்ட்ரக்டெட் லேபர்' (Obstructed labour) என்பார்கள். இந்தச் சூழலில் சிசேரியன் செய்வதுதான் நல்லது. மேலும், பிரசவ நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே தாயின்  கர்ப்பப்பையிலிருந்து இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை நுழைந்துவிடவேண்டும்.  தாயின் இடுப்பெலும்பு சிறிதாக இருந்து, குழந்தையின் தலை பெரிதாக இருந்தால் இடுப்பெலும்புக்குள் நுழையாது. அதேபோல, சிலருக்கு முதலில் குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாகக்  கால் வெளியேவரும். இன்னும் சிலருக்கு,  அதிக எடை காரணமாக குழந்தையின்  தோள்பட்டை வெளியேவராது. இதனால், குழந்தைக்குக் காயமோ உயிரிழப்போ ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில்  சிசேரியன் செய்ய வேண்டும்.

அதோடு, இதயக் கோளாறு, கர்ப்பப்பைப் புற்றுநோய்,  கர்ப்பப்பை அல்லது கருவகத்தில் கட்டி, பிரசவப் பாதையில் கட்டி, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு நோய் ஆகியவற்றால் தாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் சிசேரியன் தேவைப்படலாம். ஆபத்தான கட்டங்களில் தாய்-சேய் இருவரையும் காப்பாற்றும் நோக்கில்தான் சிசேரியன் செய்ய வேண்டியிருக்கிறது" என்கிறார் மூத்த மகப்பேறு மருத்துவர் சண்முக வடிவு.

ஆனால், "சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்புக்கு மருத்துவமனைகளின் லாபநோக்கமும் முக்கியக்காரணம் என்பதை மறுக்கமுடியாது"  என்கிறார்,  கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கி நடத்திவரும் மூத்த மருத்துவர் ஜீவானந்தம்.

`` மருத்துவம் வணிகமாகிவிட்டது என்பதைவிட மருத்துவக் கல்வி வணிகமானதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம். பல லட்சங்கள் கொடுத்து மெடிக்கல் சீட்  வாங்கிப் படிக்கிறார்கள். செலவழித்த பணத்தை மிக விரைவாக மீட்டுவிட வேண்டும் என்பதற்காகச் சிலர், மருத்துவ தர்மத்தை மீறுகிறார்கள்.  இதற்கு மருத்துவர்களை மட்டுமே குறைசொல்லிவிடமுடியாது. நிறையபேர் சேவை மனப்பான்மையுடன்தான் வருகிறார்கள். ஆனால், நிலம் வாங்கவும், மருத்துவமனை கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அதிகமாகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மருத்துமனையை நடத்த அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. மருத்துவமனைக்கு ஒப்புதல் வாங்க வேண்டுமென்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பணத்தையெல்லாம் மக்களிடம் இருந்துதான் வசூலிக்கத் திட்டமிடுகிறார்கள். அதனால்தான், இயற்கையாக குழந்தைப் பிறக்க வாய்ப்பிருக்கும் பிரசவங்களைக் கூட சிசேரியனாக மாற்றிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் நெறிப்படுத்தத் தவறியது அரசாங்கம்தான். 

'இந்த நாளில், இந்த நேரத்தில் குழந்தை வேண்டும், அப்போதுதான் ராசியான நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கும்' என்று கருதும் மக்களும், 'என் மகள் வலி பொறுக்க மாட்டாள், சிசேரியன் செய்துவிடுங்கள்' எனச் சொல்லும் பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. 

தனியார் மருத்துவமனைகள் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். 'மாதத்துக்கு இவ்வளவு அறுவை சிகிச்சை செய்யவேண்டும்', 'இவ்வளவு பணம் இந்த மாதம் ரொட்டேஷனில் இருக்கவேண்டும்' என்று மருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்கள். மருத்துவர்கள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது. 

பிரசவங்கள் குறித்து அரசிடம் எந்த வழிகாட்டுதலும் கிடையாது. இந்தந்த சூழல்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும் என்ற கொள்கைகளை முதலில் உருவாக்கவேண்டும். தவறு நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தடுப்பதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை`` என்கிறார் மருத்துவர் ஜீவானந்தம்.

மருத்துவர் ஜீவானந்தத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சிவகுமார்.

``முன்பெல்லாம் நார்மல் டெலிவரி என்பது மிகச் சாதாரணம். அறுவை சிகிச்சை என்றால்தான் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. நார்மல் டெலிவரியில் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். 

முன்பெல்லாம், கருவுற்ற நாள் முதல் பிரசவ காலம் வரை பெண்கள் சாப்பிட்ட  உணவுகள், உடல் உழைப்பு எல்லாம் நார்மல் டெலிவரிக்கு உதவியாக இருந்தன. இப்போது எல்லாம் மாறிவிட்டன.  அதனால்தான் சிசேரியன் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மருத்துவமனைகளின் வணிக நோக்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப்பிரசவத்தில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில்தான்  சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் டார்கெட் இருக்கிறது. அதை நிறைவேற்ற அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் ஏற்படும் விழிப்புஉணர்ச்சியும் அரசின் வழிகாட்டுதலுமே இந்தச் சூழலை மாற்றும்" என்கிறார் அவர்.