Published:Updated:

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?
சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

விஞ்ஞான வளர்ச்சியை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முழுவதுமாக அதை மட்டுமே சார்ந்திருப்பது மிகப்பெரிய தவறு. உதாரணத்துக்கு ஃப்ரிட்ஜ். இன்று ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால், அதை எத்தனைபேர் முறையாகப் பயன்படுத்துகிறார்கள்?

’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால், இன்று, முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாள்கள் பல கடந்தும் ஃப்ரிட்ஜ் உதவியுடன், நமக்கு அமுதமாகத் தெரிகின்றன. உண்மை என்னவென்றால், நாள் கணக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துச் சாப்பிடும் உணவு, அமுதல்ல, விஷம்!

மீந்த உணவுகள் அனைத்தும் ஃப்ரிட்ஜுக்குள் இடம்பிடித்துக்கொள்கின்றன. `அது குளிர்பதனப் பெட்டியா’ அல்லது, ’மீந்த உணவுப் பெட்டியா’ எனத் தெரியாத அளவுக்கு பழைய உணவுகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. சிலநாள்களுக்குமுன் சமைத்த சட்னி, நேற்று ருசித்த கோழிக் குழம்பு, நாளை சமைப்பதற்கான இறைச்சித் துண்டுகள், வெட்டப்பட்ட பழங்கள், பூஞ்சை படர்ந்த பிரெட் துண்டுகள், காலை முதல் இரவு வரை நம் உணவில் தஞ்சமடையக் காத்துக்கிடக்கும் சாம்பார், வருடக்கணக்கில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைந்திருக்கும் ஊறுகாய் ரகங்கள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

’அவசர உலகில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறும் விஷயங்கள்தானே… இதில் என்ன தவறு இருக்கிறது. குறைந்த வெப்பநிலையில், உணவுப் பொருள்கள் கெடாமல் அப்படியே நீண்ட நாள்களுக்கு இருக்கப்போகிறது… டெக்னாலஜியைப் பயன்படுத்தலாமே’ என்று ஆதங்கப்படுவோருக்கான பதில்….  

நம்மையறியாமல் நமக்கு அடிக்கடி உண்டாகும் நோய்களுக்கு, இதுபோன்ற தவறான உணவு சேமிப்பு முறைகளும் முக்கியக் காரணம். ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்படும் காலத்துக்கு முன்பு, உணவின் இயற்கைத்தன்மை மாறியதும் அதை அப்புறப்படுத்திவிடுவதே நமது உணவியல் அடிப்படையாக இருந்தது. ஆனால் இன்று, சமைத்த உணவுகளை நீண்ட நாள்களுக்குப் பதப்படுத்தி, அதற்குள் புதுப்புது பெளதீக மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். மாற்றமடைந்த உணவுகள், நமது உடலின் இயங்கியலைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. அழையா விருந்தாளியாக இருந்த நோய்களை, நாமே வலுக்கட்டாயமாகப் பந்திபோட்டு அழைக்கத் தொடங்கிவிட்டோம்!

விடாப்பிடியாக பழைய உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, வாந்தி, பேதி, செரிமானத் தொந்தரவுகள் எனத் தொடங்கி, ஆயுளைக் குறைக்கும் நோய்கள் வரை கூட கொண்டு செல்லலாம். 

ஃப்ரிட்ஜின் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பன்னாட்டுக் குளிர்பானங்களை, நீண்ட நாள்களுக்குக் குளிர்வித்து `சில்லென்று’ பருகும்போது, சளி, இருமல் போன்றவை உடனடியாக நம்மைப் பற்றிக்கொள்ளும். `ஸ்கூல்ல இருந்து வந்ததும், ஃப்ரிட்ஜுல இருக்குற தண்ணி பாட்டிலை எடுத்துக் குடிச்சாதான், என் பிள்ளைக்கு தாகமே அடங்கும்’ என தாகக் குறிப்பு கொடுக்கும் பெற்றோர்கள் கவனத்துக்கு... நுரையீரல் பாதைத் தொற்று உங்கள் பிள்ளைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் பிள்ளை எவ்வளவுதான் ‘ஐஸ்’ வைத்தாலும், 'ஐஸ் வாட்டரு'க்குத் தடைப்போடுங்கள்!. 

உணவுப் பொருள்களை எத்தனை நாள்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்துப் பயன்படுத்தலாம் என்பதற்கான முறையான வரையறை நம்மிடம் இல்லை. சமீபத்திய ஆய்வு சொல்லும் உண்மை என்னவென்றால், ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தான், ஃப்ரிட்ஜில் வைத்த காய்கள், பழங்கள் போன்றவற்றில் உருவாகும் நிறமாற்றங்கள், பூஞ்சைத் தொற்றுகள் போன்றவற்றைப் பார்த்து அப்புறப்படுத்துகிறார்களாம். மீதமிருக்கும் ஐம்பது சதவிகிதம் பேரின் நிலை? 

சில பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்தாலும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள்களின் தன்மை, மணம், சுவை, குணம் எல்லாமே மாறத்தொடங்கிடும். பூஞ்சைகளும் பரவத் தொடங்கிவிடும். 

பழங்களை அறை வெப்பநிலையில் வைத்து, ஃப்ரெஷ்ஷாகப் பயன்படுத்துவதே நல்லது. அப்படி வைத்தால்தான் அதிலிருக்கும் நுண்சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். வெட்டிய பழங்கள், சாலட்டுகளை ஃப்ரிட்ஜில் நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்தினால், அதில் இருக்கும் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது.  

தர்பூசணிப் பழத்தை ஃப்ரிட்ஜுல் அதிகநேரம் வைத்திருந்தால் அதன் தன்மை வறண்டு அதிலுள்ள சத்துகள் கிடைக்காமல் போய்விடும். அதுமட்டுமல்ல...சுவையும் மாறிவிடும். 

ஆப்பிளை  வெட்டி ப்ரிட்ஜில் வைத்தால் அதிலிருந்து வெளியேறும் ஒருவித வாயு மற்ற பழங்கள், காய்கறிகளின் தன்மையை மாற்றிவிடும். உதாரணத்துக்கு, வெட்டிய ஆப்பிளுக்கு அருகே கேரட்டை வைத்திருந்தால் கேரட்டின் சுவை கசப்புத்தன்மை மிக்கதாக மாறிவிடும். 

வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. காற்றோட்டமாக அறை வெப்பநிலையில் வைத்துச் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிலுள்ள  மாவுப்பொருளின் தன்மை மாறிவிடும். மேலும், பூஞ்சை உண்டாகி நோயை வரவழைக்கும். 

தேன் எத்தனை வருஷம் ஆனாலும் கெட்டுப்போகாது. ஆனால், அந்த உண்மை தெரிந்தும்கூட பலர் ஃப்ரிட்ஜுல் வைக்கிறார்கள். அதனால் தன்மை மாறுவதோடு சுவையும், மருத்துவக் குணமும் மாறிவிடும். 

வெங்காயத்தையும் பூண்டையும் ஃப்ரிட்ஜுல் வைக்கக்கூடாது. வெட்டிவைத்த வெங்காயத்தையும், உரித்த பூண்டையும் எங்கே எங்கே என்று தேடி பாக்டீரியாக்களும் கிருமிகளும் வரும். இதனால் ஃப்ரிட்ஜின் தன்மையே கெட்டுப்போய்விடும்.  எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் வெட்டிப் பயன்படுத்த வேண்டும். 

சமைத்த கீரைகளை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துத் திரும்பவும்  சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது நல்லதல்ல. அதிக குளிர்ச்சியை உண்டாக்கி சளி, இருமலை வரவழைக்கும். சத்துகளையும் கெடுத்து விடும். 

சமைத்த உணவுகளை, தொடர்ந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால், அது அறிவியல் நமக்களித்த சாபம்! சமைப்பதற்குத் தேவையான சில பொருள்களைக் குறைந்த காலத்துக்கு மட்டும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்தினால், அது வரம்! வரமும் சாபமும் நம் கையில்தான்!