பிரீமியம் ஸ்டோரி

``எனக்கு வயது 32. பழைய நினைவுகளை அசைபோடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றுடனே (நினைவுகளுடன்) வாழ்வதுபோல் இருக்கும். இப்படி நினைத்துப் பார்ப்பதை உடன் இருப்பவர்கள், `மனநோய்’ என்கிறார்கள். உண்மையில், இது மனநோய்தானா? இதை எப்படிச் சரிசெய்யலாம்?’’

-செந்தில் கரிகாலன், ராமநாதபுரம்

கன்சல்ட்டிங் ரூம்

``இயல்பாகவே நாம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கும்போது, நம் மனம் பழைய நினைவுகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும். நாம் குழந்தையாக இருந்தபோது, மன உளைச்சல்களும் பிரச்னைகளும் இல்லாமல் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்திருப்போம். இப்போது உங்களுக்குக் குடும்பம், வேலை, கடமை எனப் பலவகை பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கும். அதனால் உங்கள் மகிழ்ச்சியான நாள்களை அசைபோடத் (Rumination) தொடங்கியிருப்பீர்கள். நிகழ்காலத்தில் இருக்கும் சங்கடங்களிலிருந்து விடுபடப் பழைய நினைவுகளில் உங்கள் மனம் பின்னோக்கிப் (Regression) போயிருக்கும். இப்படி அசைபோடுதலும் பின்னோக்கிப் பார்ப்பதும் நிகழ்கால வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படுத்தாதவரை, அவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அந்தச் சிந்தனைகளிலேயே ஆழ்ந்து, கடந்த காலத்துடன் பேசுவதுபோலத் தோன்றும் அளவுக்குச் சென்றுவிட்டால், அதனைச் `சீஸோப்ரினீயா’ (Schizophrenia) என்போம். அதற்கு மருத்துவர்களிடம் சென்று உரிய ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. சாதாரணமாக இருக்கும்போது பழைய நினைவுகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவதாலும் நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, யோகா போன்றவற்றைச் செய்து வருவதாலும் தெளிவான மனநிலை கிடைக்கும்.’’

``நான் ஓர் அசைவப் பிரியர். `அசைவ உணவில் கொழுப்பு அதிகம்’ என்பார்கள். மாட்டுக்கறியில் கொழுப்பு அதிகமா? அது விருப்பமான உணவு என்று நிறைய சாப்பிட்டால் என்ன ஆகும்?’’

-சீனிவாசன், கோத்தகிரி.

கன்சல்ட்டிங் ரூம்

``மாட்டுக்கறி, சிவப்பு இறைச்சி வகையைச் சார்ந்தது. பொதுவாகவே, சிவப்பு இறைச்சிகளில் அதிகளவு கெட்ட கொழுப்பு (LDL - Low Density Lipopotein) சேர்ந்திருக்கும். கிளைசரைடு (Glyceride) அதிகம் இருக்கும். இது உடல்பருமன், செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். முழுமையாக இந்த இறைச்சி வகையைத் தவிர்க்க முடியாவிட்டாலும், குறைந்த அளவு உட்கொள்வது சிறந்தது. இதை கிரேவியாக உண்பது சிறந்தது. வறுத்த இறைச்சி உணவு (Deep Fry) எனில், உடலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.’’

``எனக்கு வயது 24. எனக்கு அதிகமாகக் கொட்டாவி வருகிறது. ஆனால், தூக்கம் வருவதில்லை. கொட்டாவி வரும் நேரங்களில் கண்களில் நீர் வடிகிறது. இதற்கு என்ன காரணம்? இதை எப்படித் தவிர்க்கலாம்?’’

-சித்ரா, பாபநாசம்.

கன்சல்ட்டிங் ரூம்

``கொட்டாவி என்பது சோர்வாக இருக்கும் நேரங்களிலோ அல்லது எந்த வேலையும் இல்லாத நேரங்களிலோ வரும். காரணம், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காத பட்சத்தில் நம் உடல் தானாகவே நீண்ட மூச்சின் மூலம் தேவையான ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. அதைத்தான் `கொட்டாவி’ என்கிறோம். கொட்டாவி வந்தால், அதைத் தூக்கம் வருவதற்கான அறிகுறி என்றே சொல்லலாம். ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை கொட்டாவி வருதல் என்பது பொதுவான ஒன்று. நம் உடலுக்குத் தேவையான தூக்கம் இல்லை என்றாலோ, உடல் சோர்வாக இருக்கிறது என்றாலோ, மனச்சோர்வில் இருந்தாலோ, சில நேரங்களில் மருந்து, மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதாலோ கொட்டாவி வரலாம். இவை அனைத்தும் இல்லை என்னும் பட்சத்தில், அதிகக் கொட்டாவி வந்தால், அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நல்ல தூக்கம் இருந்தும், காரணமில்லாமல் கொட்டாவி வந்தால், அது வலிப்பு நோய், கல்லீரல் பிரச்னை ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.  எனவே, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது நல்லது. நுரையீரலுக்கு அழுத்தம் கொடுத்துக் கொட்டாவி வருவதால், கண்களில் நீர் வரும். அதேபோல, ஒருவர் கொட்டாவிவிடுவதைப் பார்த்தால் நமக்கும் கொட்டாவி வருவது உளவியல்ரீதியாக இயற்கையான ஒன்றுதான்.’’

கன்சல்ட்டிங் ரூம்

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:

கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு