Published:Updated:

மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்
மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்

மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்

பிரீமியம் ஸ்டோரி

`தன்னை வெல்வான்... தரணி வெல்வான்’ என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற சொற்றொடர். இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் குமரன். உளவியல் ஆலோசகர். இந்தியச் சமூகத்தில் எந்தக் குறைகளுமின்றி சாதாரண மனிதராகப் பிறந்தோர்க்கே, பள்ளிக்குப் படிப்பு, கல்லூரி மேற்படிப்பு என மேற்கொள்ளும் பயணம் கடும் சவால்கள் நிரம்பியது. ஆனால், பிறக்கும்போதே மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட குமரன் அத்தகைய காலகட்டங்களை வெகு எளிதாகத் தாண்டி வந்துள்ளார் என்பது வியக்கவைக்கும் செய்தி. சக்கர நாற்காலியில்தான் பயணம் செய்கிறார். ஆனால், உலகின் பல மூலைகளுக்கும் பறந்துசெல்கிறார்.

மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்

``நான் நாகர்கோவிலில்  பிறந்தேன். அப்பா குமணன் வானொலியில் வேலைசெய்தார். அம்மா கற்பகம். நான் கொஞ்சம் அவசரக்காரன், 7-ம் மாத முடிவிலேயே பிறந்துவிட்டேன். அதன் பிறகு 28 நாள்கள் இன்குபேட்டர் வாசம். முட்டையைத் தன் காலில் மாதக்கணக்கில் வைத்தே அடைகாக்கும் ஆண் பென்குவின்போல், அந்த 28 நாள்களும் என் அப்பா இன்குபேட்டரில் இருந்த என் கூடவே இருந்திருக்கிறார். நான் பிறந்த 10-ம் மாதத்தில் என் வளர்ச்சியில் சந்தேகப்பட்டு, சென்னை மருத்துவரிடம் என்னைத் தூக்கிச் சென்றுள்ளனர். பரிசோதித்த டாக்டர் செரிபிரல் பால்சி குறித்துத் தெரிவித்திருக்கிறார். `இனி இந்தப் பையன் காய்கறி மாதிரி, போட்ட இடத்தில்தான் கிடப்பான்’ எனத் தெரிவித்துள்ளார். அன்றைய மருத்துவத்தின்படி அதுதான்

மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்

உண்மையும்கூட. அதன் பிறகு இனி `எப்போதுமே உடற்பயிற்சி, பிசியோதெரபி போன்றவற்றை நிறுத்தக் கூடாது’ என்றும், என்னிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நான் ஒரு சிறப்புக் குழந்தை என்பதை மனப்பூர்வமாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் மட்டுமே இன்று நான் உங்கள் முன் ஓர் உளவியல் ஆலோசகராக அமர்ந்திருக்கிறேன்.

செரிபிரல் பால்சியில் நிறைய வகைகள் உள்ளன. எனக்கு இரண்டு மூட்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிலருக்கு நான்கு மூட்டுகளும் பாதிக்கப்பட்டிருக்கும். பேச்சும் சிக்கலாக  இருக்கும். எனக்குக் கால் மூட்டுகளில்தான் பிரச்னை. பேச்சு நன்றாக வந்தது. எனவே, பொதுவான பள்ளியில்தான் படித்தேன். உயர் வகுப்புகள் மேல்மாடிக்கு மாற்றப்பட்டன. என்னால் அங்கு ஏறிச் சென்று படிக்கமுடியாது. அப்படியே போனாலும் அவசரத் தேவைகளுக்கு ஏறி இறங்க முடியாது. எந்தப் பள்ளியின் நிர்வாகம்தான் ஒரு மாணவனுக்காக வகுப்பறையையே மாற்ற முனையும்? அப்போதுதான் என்.ஐ.ஒ.எஸ் என்கிற தேசிய திறந்தவெளிப் பள்ளி குறித்துத் தெரியவந்தது. அதில் வீட்டிலிருந்தே படிக்கும் வசதி இருக்கிறது. `அதில் சேர்ந்து எட்டாவது படிக்கிறாயா?’ என்று அப்பா கேட்டார். சரியென ஒப்புக்கொண்டேன். ஆனால், அப்போது அதற்கான அப்ளிகேஷன் போட்டு நேரடியாக 10-வது எழுதினேன். பள்ளியில் படிக்காமல் வீட்டிலிருந்தபடியே படித்தாலும் டிஸ்டிங்ஷனில் தேர்வானேன். அதன் பிறகு ப்ளஸ் டூ எழுதுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் சும்மா இருக்கப் பிடிக்காமல், பிரெஞ்சு படித்தேன். அதன் பிறகு +2 முடித்து வெளியே வந்தேன். எனக்குக் கணக்கு சுத்தமாக வராது. எனவே, இளங்கலைப் படிப்பில் உளவியல் எடுத்தேன். அஞ்சல்வழியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி சைக்காலஜி முடித்தேன். அதன் பிறகு முதுகலை கவுன்சலிங் முடித்தேன். தற்போது கோவை பாரதியார் யுனிவர்சிட்டியில் பிஹெச்.டி செய்து வருகிறேன்.

செரிபிரல் பால்சியில் முக்கியமான விஷயம், எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. எனக்கெல்லாம் 10-வது மாதத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். அப்போது ஆரம்பித்த பிசியோதெரபி, இன்று வரை தொடர்கிறது. நமக்குக் காலம் முழுவதும் பிசியோதெரபி தேவை என, அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்திட வேண்டும். உடற்பயிற்சியையும் பிசியோதெரபியையும் விடாமல் தொடர்ந்தால்தான் மற்றவர்களை எதிர்பார்க்காமல் வாழ முடியும் என்பதைக் குறைபாடு உள்ள நண்பர்களிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன். என்னால் நன்றாகப் பேச முடியும் என்பதுதான் என் பலம்.  இது என் பெற்றோர் என்னைக் கவனித்து எனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து எடுத்த முடிவு” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த குமரனிடம் `செரிபிரல் பால்சி குழந்தைகளுடைய பெற்றோர் செய்யவேண்டியவை குறித்துக் கேட்டோம்.

மருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்

``முதலில் எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோம் என்பதிலிருந்தே அவர்களின் கடமை தொடங்குகிறது. பிறந்தது முதல் தவழும் பருவம் வரை சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மூன்று மாதத்தில் தலை நிற்க வேண்டும். ஆறு மாதத்தில் குழந்தை உட்கார வேண்டும். தூக்கும்போது இறுக்கமாகவோ தளர்வாகவோ இருக்கக் கூடாது. உடலின் ஏதோ ஒரு பாகத்தில் மட்டுமே குழந்தை இயங்கக் கூடாது. கால்களை அகட்டினால் அழக் கூடாது. பிறகு நடக்கவேண்டிய வயதில் நடக்கவில்லை என்றாலோ, குதிகால்களை ஊன்றாமல் இருந்தாலோ குழந்தைகள் மருத்துவரிடம் காட்ட வேண்டும்.  செரிபிரல் பால்சி  எனக் கண்டறிந்தால், உடனடியாகச் சிகிச்சையுடன் தெரபியிலும் இறங்கிவிட வேண்டும்.  இன்னமும் சி.பி என்கிற செரிபிரல் பால்சிக்கு, நிவாரண சிகிச்சைமுறை வரவில்லை. எதிர்காலத்தில் வரலாம். இந்தப் பிரச்னையோடு குழந்தை பிறந்தால் இன்று இதற்கு வைத்தியம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டு பிள்ளைகளை அதற்குரிய  சிகிச்சைகளோடும்  கண்டிப்பாக பிசியோதெரபியுடனும் வளர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் நிலை மேலும் மோசமடையாமல் தடுக்க, பிசியோதெரபியால் மட்டுமே முடியும்” என்ற குமரன், ``மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்புக் குழந்தைகளுக்குமான நாடாக இது இன்னும் உருவாகவில்லை. அவர்கள் இலகுவாகப் பயன்படுத்தும் சூழலில் கல்வி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளும் இல்லை, மருத்துவமனைகளும் இல்லை. பள்ளிகளில் இப்படியான மாணவர்களுக்குத் தேர்வு எழுத எழுத்தர் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படியான எழுத்தர்கள் கிடைப்பது இன்று அரிது. இந்த நிலை மாற வேண்டும்’’ என்றார்.

 ``எங்கள் உலகம் மிக அழகானது. ஆனால், புறக்கணிக்கப்படுகிறோம். இன்று சி.பி உள்ள அனைவரும் இணையத் தொடங்கியுள்ளோம். எனக்கு இந்தியா முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நிறைய கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம். செரிபிரல் பால்சி உள்ளவர்களுக்கு என் கோரிக்கை என்னவென்றால், நம்மைப்போல் உள்ளவர்களைத் தேடிப் பிடித்தாவது நட்புகொள்ளுங்கள். தங்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கும். அப்படி இல்லை என்றாலும், உங்கள் நட்பு இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்” என்று முடித்தார்.

தன் அனுபவங்களை `ஆனந்த தாண்டவம்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்  குமரன். உண்மையில் அந்தப் புத்தகம் செரிபிரல் பால்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படியான குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை விதைக்கும். அந்தப் புத்தகத்தில் நம்மை நெகிழ்த்தும் விஷயம் ஒன்று உள்ளது. அது `இந்தக் குழந்தை இனி ஒரு காய்கறி மாதிரிதான்’ என்று அன்றைய மருத்துவத்தின் அடிப்படையில் கணித்து, குமரனின் பெற்றோரிடம் சொன்னாரே, அந்த மருத்துவரின் அணிந்துரைதான். அத்தனை மகிழ்ச்சியுடன் அவர் அதை எழுதியுள்ளார். காரணம், குமரனின்  மனவலிமைதான்.மருத்துவத்தை வென்றதல்லவா அது!

- வரவனை செந்தில்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு